15 வயது சிறுமியை கர்ப்பமாகிய 3 பிள்ளைகளின் தந்தை! தாய் உட்பட மூவர் அதிரடி கைதுமாத்தறையில் 3 பிள்ளைகளின் தந்தையினால் பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாகி 15 வயது சிறுமி ஒருவர் சிசுவை பிரசவித்து தத்தெடுப்புக்கு வழங்க முயற்சித்த சம்பவம் தொடர்பில் வன்புணர்ச்சி செய்த சந்தேக நபரை அடையாளம் கண்டு மிதிகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குறித்த சிறுமி துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கர்ப்பமாகி பிரசவத்திற்கு தயார்படுத்தியதை சிறுமியின் பெற்றோர் மறைத்துவிட்டு, பிரசவத்திற்குப் பின் சட்டத்தரணியின் உதவியுடன் குழந்தையை வேறு தரப்பினருக்கு தத்துக் கொடுக்க தயாரானதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மாத்தறை – வெலிகம பகுதியில் உள்ள 30 வயதுடைய 3 பிள்ளைகளின் தந்தையொருவரே சிறுமியின் பெற்றோர் வீட்டில் இல்லாத வேளையில் 10 மாதங்களுக்கு முன்னர் சிறுமியை துஷ்பிரயோகம் செய்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இருப்பினும், இது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு சிறுமியின் பெற்றோரோ அல்லது வேறு எவரும் பொலிஸில் முறைப்பாடு செய்யவில்லையெனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதனையடுத்து, இரகசியமாக கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிறுமி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிறுமி குழந்தையை பிரசவித்துள்ளார்.
இந்த நிலையில், பிறந்த குழந்தையை சட்டத்தரணிகள் ஊடாக வேறு நபருக்கு மாற்ற முயற்சித்த சம்பவம் வைத்தியசாலை ஊடாக நாரஹேன்பிட்டி பொலிஸாருக்கு தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, நாரஹேன்பிட்டி பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் போது, மிதிகம பிரதேசத்தில் சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதன்படி, விசாரணைகள் மிதிகம பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சிறுமியை வன்புணர்வு செய்த 3 பிள்ளைகளின் தந்தையான சந்தேக நபரை மிதிகம பொலிஸார் நேற்று (18) கைது செய்துள்ளனர்.
இதெவேளை, சம்பவத்தை மறைக்க முயன்ற சந்தேகநபரின் சகோதரி ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குழந்தை பிறந்த தகவலை பொலிஸாரிடமிருந்து மறைத்த குற்றச்சாட்டின் பேரில் சிறுமியின் தாயும் கைது செய்யப்பட்டுள்ளதுடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.