செட்டிகுளத்தில் இருந்து மாத்தறைக்கு மாடு கடத்தல் முறியடிப்புசெட்டிகுளம் பகுதியில் இருந்து மாத்தறைக்கு லொறி ஒன்றில் கொண்டு செல்லப்பட்ட 12 எருமை மாடுகள் மீட்கப்பட்டுள்ளதுடன், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் வவுனியா மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் ஆலோசனைக்கு அமைவாக வவுனியா மாவட்ட குற்றப் தடுப்பு பிரிவின் தலைமைப் பொலிஸ் பரிசோதகர் எம்.கே.அழகியவண்ண தலைமையில் உப பொலிஸ் பரிசோதகர் ஜே.கே.எஸ்.ராஜகுரு, பொலிஸ் சார்ஜன்ட் ஹேரத் (51602), பொலிஸ் கொன்ஸ்தாபிள்களான ஜெயசிங்க (71309), விதுசன் (91800), ஹேரத் (34712), டினவி (18129) ஆகியோரை உள்ளடக்கிய பொலிஸ் குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போதே மாடு கடத்தல் முறியடிக்கப்பட்டுள்ளது.
மிருக வதைச்சட்டம்
முறையான அனுமதிப்பத்திரமின்றி குறித்த மாடுகள் கொண்டு செல்லப்பட்டமை விசாரணையின் போது தெரியவந்ததையடுத்து, 15 இலட்சம் ரூபாய் பெறுமதியான 12 எருமை மாடுகளும் மீட்கப்பட்டதுடன் அதனை கொண்டு சென்ற லொறி சாரதியான மொனராகலை பகுதியைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார்.
மேலதிக விசாரணைகளின் பின் அனுமதியின்றி மாடுகளை கொண்டு சென்றமை மற்றும் மிருக வதைச் சட்டம் என்பவற்றின் அடிப்படையில் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.