அமையவுள்ள தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் தனது முதல் வரவு செலவுத் திட்டத்தின் மூலம் மருந்துகள், பாடசாலை பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்களுக்கான வற் வரியை (VAT) நீக்கும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க(anura kumara dissanayaka) தெரிவித்தார்.
தங்காலையில் நேற்று (17) நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் அங்குரார்ப்பண பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
செலுத்த தவறிய வரியை மீளப்பெறுவதற்கு நடவடிக்கை
மதுபான உற்பத்தியாளர்கள் போன்ற வர்த்தகர்கள் செலுத்த தவறிய வரியை மீளப்பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் அதேவேளை எளிமைப்படுத்தப்பட்ட வரி முறை அறிமுகப்படுத்தப்படும் என்றார்.
“மருந்துகள் மற்றும் மருத்துவப் பரிசோதனைகள் மீதான வற்வரியை நீக்குவோம். பாடசாலை பொருட்கள் மற்றும் வாசிப்புப் புத்தகங்கள் மீதான வற் நீக்கப்படும்.அதே நேரத்தில் உணவுப் பொருட்களுக்கான வற்வரியை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தின் முதல் பட்ஜெட்டில் இருந்து இதைச் செய்வோம் ” என்றார்.
எமது அரசாங்கம் உறுதியுடன் நாட்டை மீட்கும்
அனைத்து துறைகளிலும் வீழ்ச்சியடைந்துள்ள ஒரு நாட்டை தேசிய மக்கள் சக்தி கையகப்படுத்தும் என்றும் எமது அரசாங்கம் உறுதியுடன் நாட்டை மீட்கும் என்றும் திஸாநாயக்க கூறினார்.
நாம் யாரையும் பழிவாங்கப் போவதில்லை. எனினும், தவறு செய்பவர்கள் மற்றும் மோசடி மற்றும் ஊழலுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். மோசடி, ஊழலை ஒழிப்போம், திருடப்பட்ட சொத்துக்களை கையகப்படுத்துவோம் என அவர் மேலும் தெரிவித்தார்.