இறந்த மக்களுக்கு அஞ்சலி செய்வது என்பது ஒரு பண்பாட்டு உரிமை அது உலகம் ழுமுவதும் பல்வேறு இயல்புகளைக் கொண்டிருக்கிறது. இறந்தவர்களை வழிபடுவதும் நினைகூர்வதும் தமிழர்களின் பண்பாடு.
அந்தப் பண்பாட்டிற்கு இராண்டாயிரம் ஆண்டுகள் கடந்த வரலாறு இருக்கிறது. அத்துடன் போரில் இறந்த வீரர்களுக்கு நடுகல் வைத்து வழிபடுகின்ற மரபும் பண்டைய தமிழ் மக்களின் பண்படாகும் அத்துடன் உலகில் போரில் இறந்த மக்களை நினைவுகூருகின்ற உரிமை உலகின் அனைத்து மக்கள் சமூகத்திற்கும் பொதுவானதாகும்.
யார் யாருடன் போரிட்டாலும் அதில் இறந்தவர்களை நினைவுகூர்கின்ற விடயத்தில் பாரபட்சமின்றி நினைவேந்தல் உரிமையை வழங்க வேண்டும் என்பது பன்னாட்டு சூழலில் வலியுறுத்தப்படுகின்றது. இலங்கைப் போரிலும் இறந்தவர்களை நினைவுகூர்வதன் உரிமையை பாரபட்சம் இன்றி வழங்க வேண்டும் என பன்னாட்டு சமூகம் வலியுறுத்தி வந்தது.
இன ஒடுக்குமுறையின் கோரம்
ஈழத் தமிழ் மக்கள் சிங்களப் பேரினவாத்தின் ஒடுக்குமுறையால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள். இன உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில், மொழி உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில், தொழில் மற்றும் கல்வி உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில், ஈழத் தமிழ் மக்களின் தாயகம் அபகரிக்கப்பட்ட நிலையில் அந்த ஒடுக்குமுறைகளுக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடுகின்ற நிலமைக்கு தள்ளப்பட்டார்கள்.
அகிம்சை வழியிலான போராட்டங்களை முன்னெடுத்து அதிலும் இனப்படுகொலைகளே பதிலாகவும் பரிசாகவும் வழங்கப்பட்ட நிலையில் தான் ஈழத் தமிழ் மக்கள் ஆயுதம் ஏந்தத் தீர்மானித்தார்கள். இதன் காரணமாகத்தான், வன்முறை எம்மீது திணிக்கப்பட்டது என்றும் நாம் விரும்பி ஆயுதங்களை ஏந்தியவர்களில்லை என்றும் தலைவர் பிரபாகரன் அவர்கள் அழுத்தம் திருத்தமாகக் கூறி இருக்கிறார்.
இந்த நிலையில்தான் ஈழ மண்ணில் உன்னதமான ஒப்பற்ற விடுதலைப் போராட்டம் ஒன்று மக்களால் முன்னெடுக்கப்பட்டது. தமிழீழ விடுதலைப் புலிகள் என்பவர்கள், சிங்களப் பேரினவாத ஒடுக்குமுறைக்கு எதிராக ஈழ மக்களில் இருந்து பிறந்த போராளிகள். இன ஒடுக்குமுறையின் கோரம்தான் எங்கள் மண்ணில் ஆயுதம் ஏந்திப் போராடுகின்ற நிலையை ஏற்படுத்தியது. என்றபோதும்கூட, இன ஒடுக்குமுறைக்கு எதிரான ஒரு போராட்டத்தை ஒடுக்கவும் மக்களை பெருமளவில் இனப்படுகொலை செய்து, முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை சிங்களப் பேரினவாதம் நிகழ்த்தியது. இதனால் ஒன்றரை லட்சம் மக்களை இழந்தோம். இலங்கை பிரித்தானியரிடம் இருந்து சுதந்திரம் பெற்ற வேளை துவங்கிய இனப்படுகொலை முள்ளிவாய்க்கால் கடந்தும் தொடர்கிறது.
யாரோ ஒருவருடைய பிள்ளை
சிங்களப் பேரினவாத அரசுக்கு எதிராகப் போராடிய ஒவ்வொரு மாவீரரும் யாரோ ஒருவருடைய பிள்ளை. அவர்கள் ஈழ மண்ணின் பிள்ளைகள். அவர்கள் எங்கள் மக்களின் பிள்ளைகள். விடுதலைப் புலிகள் இயக்கமும் ஈழ மக்களும் வேறுவேறானவர்களல்ல. ஒவ்வொரு வீட்டிலும் கனவுகளுடனும் எதிர்பார்ப்புக்களுடனும் பிறந்த பிள்ளைகள், எல்லாம் துறந்து தேச விடுதலைக்காக தம்மை அர்ப்பணித்தார்கள்.
ஒவ்வொரு தாயும் ஒவ்வொரு தந்தையும் பெற்றெடுத்து, சீராட்டி வளர்த்து ஆளாக்கிய பிள்ளைகள் எங்கள் மாவீரர்கள். போராட்டத்திற்கு அனுப்பிவிட்டு விடுமுறையில் வரும்போது அந்தப் பிள்ளைகளை ஆரத்தழுவி பிடித்த உணவுகளை செய்துகொடுத்து, மீண்டும் களம் அனுப்பி வைக்கப்பட்டவர்கள் எங்கள் மாவீரர்கள்.
மாவீர்ர் துயிலும் இல்லங்களை இலங்கை அரச படைகள் போரின் இறுதித் தருணத்தில் இடித்தழித்தன. இன்று இடிக்கப்பட்ட கல்லறைகளில் பாகங்களை வைத்துதான் நினைவேந்தல் செய்கிறோம். இடிக்கப்பட்ட ஒவ்வொரு கல்லறையிலும் உறங்குவது யாரோ ஒருவருடைய பிள்ளையே. ஒரு காலத்தில் மாவீரர் நாளின்போது துயிலும் இல்லத்திற்கு போராளித் தோழர்களும் பெற்ற அன்னையரும் தந்தையரும் உடன் பிறந்தாரும் உற்றாரும் உரித்துடையாரும் ஒன்றுகூடி கல்லறைகளில் உறங்கும் மாவீரர்களுடன் கண்ணீரை பகிரந்து கனவை பகிர்ந்து இலட்சிய வேட்கையைப் பகிர்ந்து கொள்வர். இப்போது அந்தக் கல்லறைகள் மண்ணுக்குள் எங்கோ மறைந்து கிடக்கின்றன. ஒவ்வொரு தாயினுடைய பிள்ளையின் கல்லறையும் இப்படியாக மண்ணுக்குள் இடம் தெரியாது விதைந்து கிடக்கின்றன.
.
ஆற்றுப்படுத்தும் வழிமுறை
நினைவுகூர்தல் என்பது ஒரு ஆற்றுப்படுத்தல் வழிமுறையாகும். காயங்களில் இருந்தும் இழப்புக்களில் இருந்தும் மீள்வதற்கான வழிமுறையாகும். உலகம் முழுவதிலும் நினைவேந்தல்களின் வழியாக மீள் வாழ்வும் மீட்சியும் முன்னெடுக்கப்படுகிறது. இந்த அடிப்படையில்தான் நினைவேந்தல்களுக்கு முழுச் சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும் என்பதை ஈழத் தமிழ் சமூகம் கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாகவும் வலியுறுத்தி வந்தது.
அந்த வகையில் இலங்கையின் ஆட்சியை கைப்பற்றியுள்ள தேசிய மக்கள் சக்தி, மாவீர்ர்களை நினைவேந்த தடையில்லை என்று அறிவித்துள்ளன. இருந்தபோதும் சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த தொடக்கம் எதிர்காலத்தில் நினைவேந்தலை இன்னமும் அங்கீகரிப்பதற்கான ஒரு சூழலை தோற்றுவிக்கும் என்ற நம்பிக்கையைத் தருகிறது.
மாவீரர்களைப் பெற்ற தாய்மார்களையும் தந்தையர்களையும் பார்க்கின்ற போது அவர்களின் முகங்களில் ஆயிரம் கதைகள் தெரிகின்றன. வீரமும் தெரிகிறது. ஈரமும் தெரிகிறது. தியாகமும் தெரிகிறது. இந்த முகங்களை பார்த்தாலே, இந்த முகங்களைப் படித்தாலே இலங்கை அரசு திருந்த முடியும். உலக நாடுகள் உணர முடியும். தாம் பெற்றெடுத்த அருமைப் பிள்ளைகளை இந்த மண்ணுக்காக விதைத்துவிட்டு கண்ணீரோடும் துயரத்தோடும் இந்த மக்கள் துடிக்கின்றனர். உண்மையில் மாவீரர் நாளில் ஏற்றப்படும் விளக்குகள் நெய்யினால் மாத்திரம் எரிவதில்லை. மாவீரர்களைப் பெற்ற தாய்மார்களதும் தந்தைமார்களதும் உறவுகளதும் கண்ணீராலுமே எரிகின்றன.
சிங்கள மக்கள் மாவீரர்களுடன் பேச வேண்டும்
ரங்கன செனவிரத்ன, பேராதனைப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர். மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகளாக நாம் 2009இல் சந்தித்த போதும் சிங்கள தேசம் எங்கள் போராளிகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதையே சிங்கள மாணவர்கள் மத்தியில் ரங்கனவிடம் வலியுறுத்தி உரையாற்றினேன். பின்னர் எங்களுக்குள் தொடர்புகள் இருக்கவில்லை. ஆனால் நடுகல் நாவலை படித்துவிட்டு வந்த சிங்கள இளைஞர்களில் ரங்கனவும் வந்திருந்தார். அவர்கள் எங்கள் இலத்திற்கு வந்து அண்ணாவின் வீரவணக்கப் படத்திற்கு தீபம் ஏற்றிவிட்டு கிளிநொச்சி மாவீரர் துயிலும் இல்லத்தில் விளக்கேற்றி அஞ்சலித்தார்கள்.
கோத்தபாயவின் காலத்தில் அப்போது மாவீரர் நாளை அனுஸ்டிக்க அனுமதிக்கப்படவில்லை. அந்த வருத்தம் பற்றி ரங்கனவுக்கு சொல்லிக் கொண்டிருந்தேன். துயிலும் இல்லம் வந்த ரங்கன உள்ளிட்ட சிங்கள இளைஞர்கள் அஞ்சலி செலுத்தினர். “இந்த அரசு உங்களுக்கு விளக்கேற்ற அனுமதி மறுத்திருக்கிறது. சுதந்திரத்திற்காகப் போராடிய உங்களுக்கு தெற்கிலிருந்து தீபங்களை ஏற்றுவோம்” என்று கல்லறைகளுடன் பேசினார் அவர். எங்கள் போராளிகளை சிங்கள மக்கள் ஏற்றுக்கொண்டு எங்கள் விடுதலைப் போராட்டத்தை அங்கீகரிக்கும் இலக்கின் தொடக்கமாக தென்பட்டது. அந்தப் புள்ளியை நோக்கி வரலாறு நகர்ந்தே தீரும்.
நாம் சிங்கள மக்களை துயிலம் இல்லம் நோக்கி அழைக்க வேண்டும். மாவீரர் துயிலும் இல்லங்களும் மாவீரர்களின் கல்லறைகள் ஒவ்வொன்றும் சிங்கள மக்களாலும் பன்னாட்டுச் சமூகத்தாலும் புரிந்துகொள்ளப்பட வேண்டியவை. அதில் இருந்துதான் இலங்கைத் தீவில் மாற்றங்கள் உருவாகக்கூடும். முதன் முதலில் இலங்கை அரசு ஒன்று மாவீரர் நினைவேந்தலுக்கு தடையில்லை என அதிகாரபூர்வமாகச் சொல்லியிருக்கிறது. இது அடுத்த கட்டங்களை நோக்கி நகர வேண்டும். அத்துடன் இன்றைய அரசு தற்போது இராணுவத்தின் வசமுள்ள துயிலும் இல்லங்களையும் விடுவிக்க வேண்டும். ஜேவிபியும் அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்தியிருக்கிறது. இன ஒடுக்குமுறைக்கும் விடுதலைக்குமாக ஆயுதம் ஏந்தி இந்த மண்ணில் விதைக்கப்பட்ட எம் மாவீரர்களின் தியாகத்தையும் தாகத்தையும் இலங்கை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும்.