கடந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலுடன் ஈழத்தில் தமிழ் தேசியம் வீழ்ச்சியடைந்து விட்டது என்று பேரினவாதிகளும் தமிழ் தேசிய விரோதிகளும் அகமகிழ்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டதைக் கண்டோம்.
இந்த ஐயங்களுக்கும் மகிழ்ச்சிகளுக்கும் நவம்பர் 26 மற்றும் 27ஆம் நாள்களே பதில் அளிக்கப்படும் என்பதையும் தமிழ்தேசியப் பற்றுக்கொண்ட நாம் கூறியிருந்தோம்.
இதனை உறுதி செய்யும் விதமாக வடக்கு நவம்பர் 27ஆம் நாளன்று கிழக்கு தேசம் ஒளியால் நிறைந்திருந்தது. ஒளிர்ந்த ஈழம் உணர்த்திய செய்தி என்பது மண்ணில் விதைக்கப்பட்ட எங்கள் வீர்ர்கள் கனவு குறித்தும் இலட்சியத் தாகம் குறித்தும் உலகிற்கு வெளிப்படுத்திய குரல் என்பதுடன் ஈழத் தமிழர் தேசத்தில் தமிழ்தேசியம் என்றும் வீழ்ச்சியுறாது என்பதும் அழுத்தமாக வெளிக்காட்டப்பட்டுள்ளது.
நடுகல் வழிபாடு
மாவீரர் நாள் என்பது ஈழத் தமிழ் மக்களின் விடுதலைக்கும் சுதந்திரத்திற்கும் தம்மை ஆகுதி ஆக்கிய ஈழ நிலத்து வீரர்ளை அஞ்சலிக்கின்ற புனித நாள். விடுதலைத் தாகம் கொண்டு தமிழர் தேசம் எங்கும் விதைக்கப்பட்ட கல்லறைகள் கண் திறந்து பார்க்கும் உணர்வு மேலிடும் நாள். உணர்வுமயமாக மாத்திரம் இந்த நாள் முக்கியத்துவம் பெற்று முடிந்துவிடுவதில்லை. பண்பாட்டு ரீதியாவும் அறிவியல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் இந்த நாள் முதன்மை பெறுகின்றது. இறந்தவர்களை வழிபடுதல் என்பது மானுட மாண்பு.
தமிழ் சமூகத்தில் தெய்வ வழிபாடுகளும் போரில் மாண்ட வீரர்களுக்கு நடுகல் நட்டுச் செய்யப்படுகிற வழிபாடுகளும் பண்பாடாக இம் மண்ணில் தொன்று தொட்டு நிலவுகிறது. அந்த வகையில் மாவீரர் நாள் என்பதும் மாவீரர் துயிலும் இல்லம் என்பதும் தமிழரின் பண்பாட்டுரிமை மையங்களாகும். இலங்கையிலும் இந்தியாவிலும் உலக நாடுகள் பலவற்றிலும் உள்ள பண்பாட்டு அடையாளங்களை உலக மரபுரிமைச் சின்னங்களாக ஐக்கிய நாடுகள் சபையின் யுனஸ்கோ அமைப்பு அங்கீகரித்துள்ளது.
உலகமெங்கும் உள்ள பண்பாட்டுச் சின்னங்களை பேணுதலும் அதனை மக்கள் கொண்டாடுவதும் பன்னாட்டு விதிகளுக்கு இயைபானது. அப்படியிருக்க ஈழதேசத்தில் 2009 முள்ளிவாய்க்கால் போரின் முடிவில் மாவீரர் துயிலும் இல்லங்களை ஶ்ரீலங்கா அரசு தன் படைகளைக் கொண்டு சிதைத்தது. ஈழத் தமிழினம்மீது அறமற்ற வகையில் எப்படி இனவழிப்புப் போரைச் செய்து, இனப்படுகொலையைப் புரிந்ததோ அதேபோன்று அறமின்றி மாண்ட வீரர்களின் கல்லறைகளுடனும் யுத்தம் செய்து அழித்து. இருப்பிற்காகப் போராடிய விடுதலைப் போராளிகளின் இருப்பிடங்களும் சிதைக்கப்பட்டன என்பது ஈழ மண்ணில் நாம் சந்திக்கும் இருப்பு சார்ந்த இடரையும் ஒடுக்குமுறையின் கொடூரத்தையும் இந்த உலகிற்கு வெளிப்படுத்தி நிற்கின்றன.
இராணுவமுகமாகத் துயிலும் இல்லங்கள்
அதற்குப் பின்னரும் துயிலும் இல்லங்களில் இராணுவமுகாங்கள் அமைக்ப்பட்டுக் குடியிருந்த மற்றொரு ஆக்கிரமிப்பும் அரங்கேறியது. 2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின் பின்னர் பல துயிலும் இல்லங்களில் இருந்து இராணுவத்தினர் வெளியேறிய போதும் இன்னமும் கோப்பாய் துயிலும் இல்லம், கொடிகாமம் துயிலும் இல்லம், முள்ளியவளை துயிலும் இல்லம், மல்லாவி ஆலங்குளம் துயிலும் இல்லம் என்பன இராணுவத்தின் பாரிய முகாங்களாக உள்ளனர். “என் உறவு விதைக்கப்பட்ட துயிலும் இல்லத்திற்கு நான் செல்ல முடியாமல் போனேன். என் பிள்ளை அனாதையாகக் கிடக்கிறான்…” என்ற வார்த்தைகளை நேற்று மல்லாவியில் இருந்து கேட்டவேளை மனம் துடித்தது. வடக்கு தெற்கு என்ற பிரிவில்லை என்று சொல்லுகிற அனுர அரசாங்கம் இந்தத் துயிலும் இல்லங்களை உடன் விடுவிக்க வேண்டும்.
அரசுக்கு எதிராக தமது அரசியல் கொள்கை சார்ந்து ஆயுதம் ஏந்திய ஜேவிபி, இனஒடுக்குமுறைக்கு எதிராக ஆயுதம் ஏந்திய ஈழ விடுதலைப் போராளிகளை அங்கீகரிக்க வேண்டும். அப்படியொரு காலமும் ஈழத்தில் திரும்பும். அந்த நம்பிக்கையை நவம்பர் 27 இம்முறையும் நிரூபித்திருக்கிறது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு கிழக்கில் அனுரகுமார திசாநாயக்க வெற்றி பெறாத நிலையில் பாராளுமன்றத் தேர்தலில் வடக்கு கிழக்கில் (மட்டக்களப்பு மாவட்டம் தவிர்ந்த பகுதியில்) வெற்றி பெற்றிருந்தது.
இந்த நிலையில் தமிழ் தேசியம் இலங்கையில் வீழ்ச்சி பெற்றுவிட்டது என்ற தோரணையை பேரினவாதிகளும் தமிழ் தேசியத்திற்கு எதிரானவர்களும் எற்படுத்த முனைந்தனர். அதாவது யார் ஆட்சி புரிந்தாலும் ஆதரிப்போம் என்ற பேரினவாத ஒத்தோடிகள் இதில் அகமகிழ்ந்தனர். தேர்தலின் முடிவுகள் தமிழ் தேசியம் பேசுகின்ற தலைவர்கள்மீதுள்ள விரக்தியாலும் விமர்சனத்தாலும்தான் அப்படி அமைந்தன. தமிழ் தலைமைகளின் சிதறலும் தன்னல அரசியல் போக்கும் எம்மை பின்னடைவுக்குத் தள்ளின. இதனை தமிழ் அரசியல்வாதிகள் உணரத் துவங்கியுள்ளனர். இந்தத் தேர்தல் முடிவுகள் அவர்களுக்கு ஒரு சிறந்த பாடத்தை வழங்கியிருக்கும்.
உணர்வுகள் சிதறாது
ஆனால் வாக்குகள் சிதறினாலும் உணர்வுகள் சிதறாது. இதனை மாவீரர் நாள் மற்றும் தலைவர் பிரபாகரன் அவர்களின் பிறந்தநாள் என்பன உணர்த்தியுள்ளது. அத்துடன் சில கட்டுப்பாடுகளுடன் சிங்கள மக்கள் மற்றும் அரசு மாவீரர்களைக் கொண்டாட இம்முறை அதிகாரபூர்வமாக அனுமதித்துள்ளது. இது வரலாற்றில் ஒரு முக்கியமான இடம். அத்துடன் சிங்கள நண்பர்கள், உறவுகள் பலரும் மாவீரர் நாள் பற்றியும் தலைவர் பிரபாகரன் அவர்களின் பிறந்தநாள் பற்றியும் விசாரித்துக் கொண்டார்கள்.
வரும் காலத்தில் இன்னமும் இதில் முன்னேற்றம் வரும் என்றார்கள். சிங்கள மக்கள் எங்களை ஏற்க வேண்டும், அங்கீகரிக்க வேண்டும் என்பது ஈழவிடுதலைப் போராட்டத்தின் அடிப்படை. அந்த மாற்றம் நிகழத் தொடங்குகிறபோதுதான் இலங்கையில் அமைதி நிலையாகத் திரும்பும்.
பேரினவாத ஒத்தோடிகளாகச் செயற்படும் சில தமிழரின் அரசியல் மிகவும் ஆபத்தானது. சிங்கள மக்கள்கூட எம் மாவீரர்களை ஏற்றுக்கொண்டு வருகின்ற காலத்தில் இவர்கள், தமிழ் தேசியத்திற்கு எதிராக தம் வன்மங்களை கொட்டித் தீர்த்து வருகின்றனர். இதில் சில தமிழ் எழுத்தாளர்களும் உள்ளனர். போர் முடிந்த கையுடன் ஈழத்தில் இருந்தும் புலம்பெயர் நாடுகளில் இருந்தும் மகிந்த ராஜபக்ச ஈழ மக்களுக்கு சுதந்திரம் கொடுத்துள்ளார் என்றும் முள்வேலி முகாங்கள் சிறப்பாக உள்ளன என்றும் பேட்டி கொடுத்தார்கள். உலகின் முள்வேலி முகாம் என்ற நரகத்தை சிறப்பான இடம் என்று சொன்ன எழுத்தாளர்களிடம் வேறென்ன வெளிப்படும்?
பேரினவாதிகளுக்குப் பதில்
எனவே இவர்கள் தேர்தல் முடிவுகளை வைத்து, வடக்கு கிழக்கு மக்கள் தமது கொள்கைகளை விட்டுவிட்டார்கள் என்று ரிவின் சில்வா, உதயகம்மன்பில, விமல் வீரவன்ச போன்ற பேரினவாதிகள் தமது இனவாத மொழியில் பேசியதைப் போலவே அரச ஒத்தோடிகளின் பதிவுகளும் கருத்துக்களும் இருந்தன. யாவற்றுக்குமான பதில் நாளே நவம்பர் 27.
எல்லா ஐயங்களுக்கும் எல்லாக் கேள்விகளுக்கும் கொட்டும் மழையிலும் பெரும் புயலிலும் இயற்கை இடருக்கு முகம் கொடுத்த சமயத்திலும் வடக்கு கிழக்கு எங்குமுள்ள துயிலும் இல்லங்களில் திரட்சிபெற்ற மக்கள் விண்ணீராலும் கண்ணீராலும் அஞ்சலி செலுத்தி பெருவிடையை அளித்துள்ளனர். நிகரற்ற தியாகங்களாலும் அதியுன்னத வீரங்களாலும் அடையாளம் பெற்ற ஈழ விடுதலைப் போராட்டம், எங்கள் தேசத்தில் விதையாக இருந்து விடுதலைக்கும் அமைதிக்கும் வழிப்படுத்தும் என்ற பெரு நம்பிக்கையைப் பெற்றோம்