மக்களின் மனதில் இருக்கும் வலி சுமந்த நாளை அஞ்சலி செய்து நினைவு கூறும் அந்த நாட்களான நடந்து முடிந்த மாவீரர் தினத்தை நினைவு கூற ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் அரசு அனுமதியை வழங்கியமைக்கு எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை நேற்று (29) மாலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “மக்களின் மனதில் உள்ள சோகங்களை அவர்களை நினைவு கூறுகிற இந்த சந்தர்ப்பத்தையும் எவ்வித இடையூறுகளும் இல்லாமல் முன்னெடுப்பதற்கான அனுமதியை வழங்கிய ஜனாதிபதிக்கு முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
மாவீரர் நினைவேந்தல்
கடந்த காலங்களில் நாங்கள் பார்க்கின்ற போது மாவீரர் நினைவேந்தலின் போது காவல்துறையினர் மற்றும் இராணுவத்தின் கெடுபிடிகள் தொடர்ந்த வண்ணம் காணப்பட்ட நிலையில், இம்முறை மாவீரர் தின நினைவேந்தலின் போது ஒரு சில இடங்களில் காவல்துறையினாரால் அசௌகரியங்கள் ஏற்படுத்தப்பட்டது.
எனினும், இம்முறை ஒரு நிறைவான நினைவேந்தல் நிகழ்வு வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் ஜனாதிபதிக்கும்,தற்போதைய அரசிற்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.