இலங்கையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பு சார்பில் போட்டியிடும் தமிழ்ப் பொது வேட்பாளர் அரியநேத்திரனுக்கு கிளிநொச்சியில் அமேக வரவேற்பு வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்ப் பொது வேட்பாளர் அரியநேத்திரன் இன்றையதினம் (27-08-2024) கிளிநொச்சி மாவட்டத்துக்கான தனது தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை ஆரம்பித்தார்.
இதன்படி, பளை நகருக்கு வருகை தந்த அரியநேத்திரன், தமிழ் பாரம்பரிய பறை மற்றும் மங்கள வாத்திய இசையோடு வரவேற்கப்பட்டார். பெருந்திரளான மக்கள் கூடி நின்று அவரை உற்சாகமாக வரவேற்றனர்.
இதைத்தொடர்ந்து பளை பேருந்து நிலையத்தில் பிரச்சார நடவடிக்கையை அரியநேத்திரன் ஆரம்பித்தார்.
அங்கிருந்து இயக்கச்சி, ஆனையிறவு, பரந்தன், கிளிநொச்சி நகர் சென்று இரணைமடுச் சந்தியில் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.
பளையில் நடைபெற்ற பிரச்சாரத்தில் தமிழ்ப் பொது வேட்பாளருடன் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், அரசியல் ஆய்வாளர் ம.நிலாந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.