மட்டக்களப்பு – ஏறாவூர் பொலிஸ் பிரிவில் உள்ள பகுதியொன்றில் விவசாயி ஒருவர் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் இன்றையதினம் (07-11-2024) ஏறாவூரில் உள்ள வந்தாறுமூலை, உப்போடை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் வந்தாறுமூலை பிரதான வீதியைச் சேர்ந்த 40 வயதுடைய ஏ.றமீஸகுமார் என்பவரே இவ்வாறு உயிரிழந்திருப்பதாக தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குறித்த நபர் இன்று மாலை உப்போடை வயல்பகுதிக்கு சென்று விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டுவிட்டு வீடு நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்தபோதே மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து, உயிரிழந்தவரின் சடலத்தை நீதிவானின் அனுமதியைப் பெற்று பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்கும் நடவடிக்கையை மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்