முல்லைத்தீவு, முத்துஐயன்கட்டுக் குளத்தில் தமிழ் இளைஞரின் சடலம் மீட்கப்பட்டமையை ஒட்டி இலங்கை இராணுவத்தினர் மீது குற்றம் சுமத்தப்படும் நிலையில், தமிழர் தாயகத்தில் இன்று வரை தொடரும் இராணுவத்தின் மிருகத்தனத்தை எதிர்த்து, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் முழுவதும் ஓகஸ்ட் 15 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஹர்த்தால் நடத்த இலங்கை தமிழரசுக் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.

இது தொடர்பில் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கடிதம் மூலம் ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்காவுக்கும் அறிவித்துள்ளனர்.

நேற்று அனுப்பப்பட்ட அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பவை வருமாறு,

குளத்தில் இருந்து மீட்கப்பட்ட முல்லைத்தீவு இளைஞனின் உடல்

“ஓகஸ்ட் 09, 2025 அன்று காலை, முத்துஐயன்கட்டுக் குளத்தில் எதிர்மனசிங்கம் கபில்ராஜ் (வயது 32) என்பவரின் உடல் மீட்கப்பட்டமை குறித்து உங்கள் கவனத்துக்குக் கொண்டு வருகின்றோம்.

ஓகஸ்ட் 07, 2025 அன்று, இலங்கை இராணுவத்தின் 63 ஆவது பிரிவு முகாமுக்கு 5 பேர் வருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர் எனவும், அங்குள்ள இராணுவத்தினர் அவர்களைக் கடுமையாகத் தாக்கினர் எனவும் தற்போது தெரியவந்துள்ளது. அவர்களில் கபில்ராஜ் என்ற நபர் காணாமல்போனார். பின்னர் அவரது உடல் முத்துஐயன்கட்டுக் குளத்தில் மிதப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவத்தின் அடக்குமுறை

  இது தொடர்பாக இராணுவத்தினர் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பதை நாங்கள் அறிந்துள்ளோம். தடையின்றி முழுமையான விசாரணையை உறுதி செய்வதற்கும், குற்றவாளிகள் மீது வழக்குத் தொடுப்பதற்கும் மட்டுமல்லாமல், வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவத்தின் அடக்குமுறை நடத்தை மற்றும் அதிகப்படியான பிரசன்னத்தை முன்னிலைப்படுத்தவும், இந்த விடயத்தை உங்கள் அவசர கவனத்துக்குக் கொண்டு வருகின்றோம்.

சிறிலங்கா இராணுவத்தின் மிருகத்தனத்தை எதிர்த்து வடக்கு,கிழக்கில் பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு | Call For Complete Hartal In The North And East

இராணுவத்தின் அதிகப்படியான பிரசன்னத்தைத் தாமதமின்றி அகற்ற உடனடி நடவடிக்கைகளை எடுங்கள். இந்த நிகழ்வில் நீதி செயல்முறை குறுக்கீடு இல்லாமல் மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்யவும் நாங்கள் உங்களைக் கேட்டுக்கொள்கின்றோம்.

 இன்று வரை தொடரும் இராணுவத்தின் மிருகத்தனத்தை எதிர்த்து, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் முழுவதும் ஓகஸ்ட் 15, 2025 வெள்ளிக்கிழமை ‘ஹர்த்தால்’ நடத்த அழைப்பு விடுத்துள்ளோம்.” இவ்வாறு அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments