Courtesy: தீபச்செல்வன்
நல்லூர் வீதியிலுள்ள தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவுப் படத்திற்கு வணக்கம் செலுத்தச் சென்றிருந்த வேளையில் அங்கிருந்த ஒலிபெருக்கியில், திலீபன் அண்ணா அவர்களின் தியாக வரலாறு மாத்திரமின்றி ஈழ விடுதலையின் வரலாறும் ஒலித்தபடி இருந்தது.
போர்க்காலத்தில் தியாக தீபத்தின் நினைவுத் தூபியை ஆக்கிரமிப்பு இராணுவம் இடித்தழித்த நாட்களில் அந்தத் தெருவில் ஒரு பல்கலைக்கழக மாணவனாகச் சென்ற நினைவுகள் மீண்டன.
திலீபன் அண்ணா பசியோடு தன்னை எரித்தபடி அலைவதைப் போலான நினைவுகளை இடிக்கப்பட்ட நினைவுத் தூபி அன்று கிளறின.
ஆனாலும் அந்த இடத்தில் மீண்டும் திலீபன் அண்ணாவை வணங்குகிற நாட்கள் வருமென நெஞ்சுக்குள் உள்ளுணர்வு உணர்த்தியும் இருந்தது.
🛑 திலீபனின் நினைவில் ஈழம்
இன்றைக்கு தியாக தீபத்தின் நினைவுச் சிலை நல்லூரில் அமைக்கப்பட்டுள்ளது. அதனை எம் மக்கள் தினம்தோறும் வழிபடும் வகையில் ஓரிடத்தில் நிறுவப்பட வேண்டும்.
எங்கள் குழந்தைகள் திலீபன் அவர்களை வரைந்து ஓவியப்போட்டிகளில் ஈடுபடுகின்றனர். பள்ளிக்கூடங்களில் எங்கள் பிள்ளைகள் காலைப் பிரார்த்தனைகளில் திலீபனைப் பற்றிய கவிதைகளைப் படிக்கின்றனர். 2009ஆம் ஆண்டுக்கு முந்தைய ஈழ நிலத்தைப் போல திலீபன் அவர்களை தமிழர் தாயகம் நினைவேந்தி வருகிறது.
இந்த நிலத்தின் ஒப்பற்ற போராளிகளை இந்த நிலத்தின் மக்கள் எத்தடை வரினும் நினைவுகொள்வார்கள். அந்த நினைவினை ஓராயுதமாக ஏந்தி வரலாற்றின் வழியில் செல்வார்கள். 2009 இற்கு முந்தைய காலத்தில் தியாக தீபத்தின் நினைவு நாட்கள் என்றால் ஈழம் அவரது நினைவுகளால் மூழ்கியிருக்கும்.
கடுமையான போர், அலைச்சல், பட்டினி வாழ்வு பிய்ந்துபோன குடிசை என்ற நிலைகளிலும் வீட்டின் முன்னால் திலீபன் அவர்களின் நினைவுப்படம் வைக்கப்பட்டு பூமாலை அணிவித்து தீபம் ஏற்றப்பட்டிருக்கும். ஈழத் தெருவெங்கும் திலீபனின் முகங்களால், சிவப்பு மஞ்சள் கொடிகளால் நிறைந்திருக்கும்.
2009 இற்குப் பின்னரான காலத்தில் தியாக தீபத்தின் நினைவுநாட்கள் புலம்பெயர் தேசங்களிலும் இணையங்களிலுமே அனுஷ்டிக்கப்படுவதுண்டு. இப்போது ஈழ நிலத்தில் திலீபனின் உருவப்படம் நிமிர்ந்திருக்கிறது. அவர் முன்னால் தீப ஒளிகளை இன்றைய தலைமுறையினர் ஏற்றுகின்றனர்.
🛑 சிங்களவர்களும் வணங்கும் திலீபன்
எந்த நிலத்திற்காக, எந்த நிலத்தின் சனங்களுக்காக துளி நீரும் அருந்தால் 12 நாட்கள் நோன்பிருந்து, உயிர் துறந்தாரோ, அந்த நிலத்தில், அந்த நிலத்தின் சனங்களால் அவரது நினைவுநாளைக் கொண்டாட முடியாத காலத்தையும் நாம் கடந்த காலத்தில் எதிர்கொண்டோம். சிங்களப் பேரினவாத அரசும் அதன் படைகளும் தியாக தீபத்தின் நினைவுத் தூபியையும், அவர் உண்ணா நோன்பிருந்த இடத்தில் அமைக்கப்பட்ட நினைவுக் கல்லையும் சிதைத்து அழித்தது.
ஆனாலும் எதனாலும் அழிக்க முடியாத திலீபனின் நினைவுகளையும் அவரது கனவையும் ஒருபோதும் அழித்துவிட முடியவில்லை என்பது காலம் உணர்த்திய பெருங்கருத்து.
இணையத்தில் தியாக தீபம் போன்றவர்களின் நினைவுநாட்கள் அனுஷ்டிக்கப்படுகின்ற போது, ஈழ விடுதலை மறுப்பாளர்களும் சிங்கள அரசின் கைக்கூலிகளும் அதனை இணையப் போராளிகளின் இயலாமை என கிண்டல் செய்தனர்.
பலம் மிக்க நவீன ஊடகமான இணையத்தில் நினைகூரப்பட்ட தியாக தீபத்தின் நினைவுநாட்களை, இப்போது ஈழ நிலத்தில் எமது மக்கள் அனுஷ்டிக்கத் தொடங்கியுள்ளனர். அத்துடன் ஒருபடி கடந்து சிங்கள மக்களும் திலீபன் நினைவிடத்திற்கு வந்து செல்கின்றனர்.
2009 இனப்படுகொலைப் போரின் பின்னரான இன்றைய காலத்தில், நம்பிக்கையற்ற அரசியல் சூழல் நிலவும் இன்றைய காலத்தில் தியாக தீபம் திலீபன் அவர்களை நினைவு கூர்வதும் அவரது கனவை நினைகூர்வதும் மிகவும் முக்கியத்துவமான ஒன்றாக உள்ளது.
🛑 அறத்துடன் பயணிக்குமா தமிழ்த் தலைமை?
இன்றைய காலத்தில், திலீபன் அவர்களை நினைகூருகின்றபோது இரண்டு விடயங்களை வலியுறுத்த வேண்டியுள்ளது, அல்லது பின்பற்ற வேண்டியுள்ளது. ஒன்று, தன்னலமற்ற அரசியல் எமக்கு அவசியமானது. மற்றையது, திலீபனின் கனவை மெய்ப்பிப்பதுதான் அவருக்கு செய்யும் மெய்யான மரியாதை.
அதுவே அவரை நினைவுகூர்வதற்கு அர்த்தமானதாயிருக்கும். 2009 ஆம் ஆண்டிற்குப் பின்னர், அதாவது ஆயுதப் போராட்டம் முறியடிக்கப்பட்ட பின்னர், ஈழத் தமிழ் மக்கள் நம்பிக்கையற்ற, சூன்யமான அரசியல் சூழலிலேயே வாழ்ந்து வருகின்றனர்.
திலீபன் போன்ற போராளிகள் தன்னலமற்ற அரசியலால் ஈழப் போராட்டத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தினர், எடுத்துரைத்தனர்.நமது அரசியல் பிரதிநிதிகளின் தன்னிருப்பு சார்ந்த சாண்டைகள் உச்சமடையும் காலத்தில் இருக்கிறோம். மகன் செத்தாலும் பரவாயில்லை மருகள் தாலி அறுக்கப்பட வேண்டும் என்ற நிலையில் தமிழ் அரசியல் இருக்கிறது.
தனிப்பட்ட இருப்புக்களின் மோதல் களமாகியுள்ள தமிழ் அரசியல் சூழலில் அறம் சாகடிக்கப்படுகிறது. ஈழத் தமிழ் இனத்தின் அரசியல் போராட்டத்தை தமிழ் தலைமைகள் கையில் எடுத்து பதினைந்து ஆண்டுகள் ஆகியிருக்கும் நிலையில் துகள் துகளாய் சிதறி இருக்கிறோம்.
நேர்மையான அணுகுமுறை, உண்மையான பேச்சு, இனத்திற்கான அர்ப்பணிப்பு, ஒற்றுமைப்பட்ட குரல் என்று எதுவும் இல்லாமல் மாறிமாறி ஒருவரை ஒருவர் அழிக்கும் அரசியலில் ஈடுப்பட்டு ஈழத் தமிழ் மக்களை இப்போது தமிழ் அரசியல் சூழலே இனவழிப்பு செய்கிறது என்பதுதான் கசப்பான உண்மையாகும்.
🛑 திலீபனின் கனவு
அந்தப் போராட்டத்தை ஒரு அசியல் போராட்டமாக, ஒரு அரசியல் இயக்கமாக முன்னெடுக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. திலீபன் போன்ற உன்னதமான போராளிகள் சுமந்த கனவை, எடுத்து வந்த ஆயுதத்தை தொடர்ந்து ஏந்திச் செல்வதுதான் இன்றைய காலத்தின் அவசியமாகும். தன்னலமற்ற, ஆழமான புரிதல் கொண்ட, தமிழ் ஈழ நிலத்தின் ஆன்மாவை நேசிக்கும் இளைஞர்களும் அரசியல் தலைமைகளுமே எமக்கு அவசியமானவை.
திலீபன் போன்ற போராளிகளை நினைவுகூரும்போது, நம்மையும் நமது நிலத்தின் இன்றைய சூழலையும் குறித்து ஆழமாக சிந்திப்பது, அதன் நிமிர்வுக்காய் நம் பங்களிப்பை செய்வது என்பனவே அவருக்குச் செய்யும் அஞ்சலியும் அவரை நினைவுகூர்வதன் அர்த்தமுமாக இருக்கும். தமிழ் மக்களின் கோரிக்கையை – அபிலாசையை ஏற்றுக்கொள்ளாத அரசியல் தீர்வு, எமது மக்களை தொடர்ந்தும் அழித் தொழிக்கும் ஆயுதம் அல்லது யுத்தமாகும்.
அதுவே இப்போதும் நிகழ்கிறது. எந்தக் காலத்திலும் தமிழ் மக்களின் உரிமையைப் பறிக்காத, அவர்களை அழித்தொழிக்க முடியாத தீர்வொன்றே எமக்கு வேண்டும். அதற்காகவே திலீபன் போன்றவர்கள் கனவையும் பசியையும் சுமந்தார்கள். எமது மக்கள் எல்லா விடுதலையும், உரிமையும் கொண்ட சமத்துவ ஈழ மண்ணில் வாழ வேண்டும் என்பதுவே திலீபன் அவர்களின் கனவு.
தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவேந்தல் துவங்கும் இத் தருணத்தில் அவருக்கான மெய்யான அஞ்சலி குறித்தே நாம் சிந்திக்க வேண்டும். திலீபன்; எந்தக் காலத்திலும் அணையாத ஒளி. அந்த ஒளியிற்கு நாம் ஏற்றும் தீபம் உண்மையும் நேர்மையும் கொண்டதாக இருக்க வேண்டும். அநுர அலையில் தமிழர்களுக்கான நீதி மறுக்கப்பட்டு, தமிழர்கள் நெடுந்தவமாய் போராடி வந்த அரசியல் உரிமை குறித்த கோரிக்கைகள் மறைக்க முயற்படுகின்ற இன்றைய காலத்தில் திலீபன் அவர்களின் பின்வரும் வரிகள்தான் பேரினவாத அலைகளுக்குப் பதிலாகின்றன.
எமது மண்ணின் விடுதலைக்காக யார் போராடுகிறார்களோ அவர்களே இந்த மண்ணின் மைந்தர்கள். எமது மண்ணின் விடுதலையை நேசிக்காத எவரும் இம் மண்ணை ஆள அருகதையற்றவர்கள்.” என்றார் தியாகி திலீபன். சிங்கள மக்களும் ஏற்றுக்கொண்டவர் திலீபன். சிங்கள மக்களாலும் நேசிக்கப்படுபவர் திலீபன். தன்னலமின்றி இன நலனுக்காக தன்னை ஈந்த மாவீரனுக்கு செலுத்தும் அஞ்சலி என்பது, எங்கள் நிலத்தில் நேர்மையோடு வாழ்வதும் நேர்மையோடு போராடுவதும்தான்.