கரூரில் தவெக தலைவர் விஜய் (Vijay) பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்த சம்பவம் முற்றிலும் தவிர்க்க முடியாத விபத்து என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
தருமபுரியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் (Seeman) மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தவெக (TVK) தலைவர் விஜய் தனது தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக கரூரில் பொதுக் கூட்டம் நடத்திய போது மக்கள் கூட்டம் அலை மோதியது.
கூட்ட நெரிசல் காரணமாக
விஜயை காணவும் அவரது பேச்சைக் கேட்கவும் பல ஆயிரம் மக்கள் திரண்டனர். குறுகிய பகுதியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றிருந்த நிலையில் கூட்ட நெரிசல் காரணமாக பலர் மயங்கி விழுந்தனர்.

இதனால் ஏற்ப்பட்ட சனநெரிசலில் சிக்கி 6 சிறுவர்கள் உட்பட 31 பேர் உயிரிழந்ததுடன், பலர் சிகிச்சைகளுக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் 12 பேர் ஆண்கள், 16 பேர் பெண்கள் மற்றும் 10 குழந்தைகள் என மொத்தம் 38 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு துயரமான விபத்து
இந்நிலையில் சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்து சீமான், இது ஒரு துயரமான விபத்து. விஜய் கூட்டத்தில் பங்கேற்று உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
இது முற்றிலும் தவிர்க்க முடியாத விபத்து. கரூரில் ஏற்பட்ட உயிரிழப்புகள் எங்களை மிகவும் வேதனைக்குள்ளாக்குகிறது என்று தெரிவித்துள்ளார்.
தாங்க முடியாத வேதனை
இந்நிலையில், இதயம் நொறுங்கிப் போய் இருக்கின்றேன். தாங்க முடியாத வார்த்தைகளால் சொல்ல முடியாத வேதனையிலும் துயரத்திலும் உழன்று கொண்டிருக்கிறேன்.
கரூரில் உயிரிழந்த எனதருமை சகோதர சகோதரிகளின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களையும், இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன். மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர், விரைவில் குணமடைய பிரார்த்திக்கின்றேன் என தவெக தலைவர் விஜய் (Vijay) தனது உத்தியோகபூர்வ எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்
மேலும், இந்தச் சம்பவத்துக்கு பிரதமர் மோடி, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.