தமிழக வெற்றிக் கழகத்தின் கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 20 இலட்சம் ரூபாய் வழங்கப்படும் என த.வெ.க. தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் (X) தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவிலே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அந்த பதிவில், ”என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம். கற்பனைக்கும் எட்டாத வகையில், கரூரில் நேற்று நிகழ்ந்ததை நினைத்து, இதயமும் மனதும் மிகமிகக் கனத்துப் போயிருக்கும் சூழல்.

ஆழ்ந்த இரங்கல்

நம் உறவுகளை இழந்து தவிக்கும் பெருந்துயர்மிகு மனநிலையில், என் மனம் படுகிற வேதனையை எப்படிச் சொல்வதென்றே தெரியவில்லை. கண்களும் மனதும் கலங்கித் தவிக்கிறேன்.

நான் சந்தித்த உங்கள் எல்லோருடைய முகங்களும் என் மனதில் வந்து போகின்றன. பாசமும் நேசமும் காட்டும் என் உறவுகளை நினைக்க நினைக்க, அது என் இதயத்தை மேலும் மேலும் அதன் இடத்திலிருந்தே நழுவச் செய்கிறது.

தமிழகத்தை உலுக்கிய கரூர் அனர்த்தம் : விஜய் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு | Vijay Pledges Rs 20 Lakh Families Killed In Karur

என் சொந்தங்களே, நம் உயிரனைய உறவுகளை இழந்து தவிக்கும் உங்களுக்கு, சொல்லொணா வேதனையுடன் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றேன்

அதேவேளையில், இப்பெரும் சோகத்தை உங்கள் மனதுக்கு நெருக்கமாக நின்று பகிர்ந்துகொள்கிறேன். நமக்கு ஈடு செய்யவே இயலாத இழப்புதான். யார் ஆறுதல் சொன்னாலும் நம் உறவுகளின் இழப்பைத் தாங்கவே இயலாதுதான்.

குடும்பங்களுக்கு நிதியுதவி 

இருந்தும், உங்கள் குடும்பத்தில் ஒருவனாக, உறவினை இழந்து தவிக்கும் நம் சொந்தங்களின் குடும்பம் ஒவ்வொன்றுக்கும் தலா 20 இலட்சம் ரூபாயும், காயமடைந்து சிகிச்சை பெற்று வருவோருக்குத் தலா 2 இலட்சம் ரூபாயும் அளிக்க எண்ணுகிறேன்.

இழப்பிற்கு முன்னால் இது ஒரு பெரும் தொகையன்றுதான். இருந்தும், இந்த நேரத்தில், என்னுடைய உறவுகளான உங்களுடன் மனம்பற்றி நிற்க வேண்டியது உங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவனாக என் கடமை.

அதேபோல, காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் அனைத்து உறவுகளும் மிக விரைவில் குணமடைந்து வீடு திரும்ப இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.

சிகிச்சையில் இருக்கும் நம் உறவுகள் அனைவருக்கும் அனைத்து உதவிகளையும் நம் தமிழக வெற்றிக் கழகம் உறுதியாகச் செய்யும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். இறைவன் அருளால், அனைத்தில் இருந்தும் நாம் மீண்டு வர முயற்சிப்போம்“ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments