அன்று, போர் சூழ் நிலமென இருந்தது எம் தேசம். தொண்ணூறுகளின் நடுவில் தமிழ் ஈழம் மிகப் பெரிய இனவழிப்புப் போரைச் சந்தித்தது. எல்லா முனைகளிலும் இடப்பெயர்வு. எல்லா பக்கங்களினாலும் தடைகளும் தாக்குதல்களும் என்று மக்கள் பெருந் துயரை அனுபவித்த காலம்.

மரங்களும் காடுகளும் எமக்கு வீடுகள் ஆனது. ஆனாலும் விடுதலைக்காக மக்கள் அணி திரள்வதில் இன்னுமின்னும் எழுச்சி கொண்டிருந்தனர்.

தொண்ணூறுகளின் இறுதியிலும் இரண்டாயிரத்தின் துவக்கத்திலும் போர்க்கள வெற்றிகளால் புலிகள் தமது பலத்தை வெளிப்படுத்தியதுடன், கூடவே சமாதான வழியில் தீர்வு காணும் தங்கள் நல்லெண்ணத்தையும் வெளிப்படுத்தி இருந்தனர்.

சமாதானத்தின் நிழல்

இந்த நிலையில் தான் 2002ஆம் ஆண்டில் விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையில் சமாதான உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டது.

ஈழ நிலம் உள்ளவரை நித்தியப்புன்னகை அழகனின் குரல் தீராது! | The Voice Of The Eternally Beautiful Tamilselvan

2001ஆம் ஆண்டு மார்கழி 19ஆம் திகதி இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை இடம்பெற்றது. முதலில் முப்பது நாட்கள் போர் நிறுத்திற்கு விடுதலைப் புலிகள் அமைப்பு இணங்கி அறிவித்தது. இலங்கை அரசும் அதன் படைகளும் அதனை வரவேற்று தாமும் தாக்குதல்களை நடாத்தாமல் தவிர்த்தன.

பின்னதாக காலவரையறையற்ற போர் நிறுத்தத்தை புலிகள் அறிவித்த நிலையில், இலங்கை அரசும் விடுதலைப் புலிகளின் ஆட்சிப் பகுதிமீதான பொருளாதாரத் தடையை நீக்கியது. 2002ஆம் ஆண்டு மாசி மாதம் 22ம் திகதி நிரந்தரமான போர் நிறுத்த ஒப்பந்தம் எழுத்துமூலமாக மேற்கொள்ளப்பட்டது.

அத்துடன் விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடையை தளர்த்தவும் இலங்கை அரசு இணங்கியது. இந்த நிலையில் இலங்கை நாட்டின் காட்சிகள் மாறத் துவங்கின. தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் தடையின்றி பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டது.

தமிழீழ விடுதலைப் புலிகள் தமது ஆட்சி நிலத்தில் கொண்ட பலமும் வடக்கு கிழக்கு முழுவதும் அவர்களுக்கு இருந்த இடமும் சமாதான காலத்தில் இலங்கை அரசுக்கும் உலகிற்கும் நன்கு தெரியும் சூழலும் உருவானது.

புலிகளின் புன்னகை முகம்

சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கான பல்வேறு கட்ட முயற்சிகள் சந்திப்புக்கள் அக்கால கட்டத்தில் நிகழ்ந்தன. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களை சமாதான தூதுவர்களை சந்தித்த அதேவேளையில் அவர்களை அழைக்கும் புன்னகை முகமாகவும் தமிழ்ச்செல்வன் அவர்கள் முன்னிலை பெற்றார்.

தலைவர் பிரபாகரன் இல்லாத இடத்தில் விடுதலைப் புலிகளின் முக்கிஸ்தர்களுடன் தமிழ்ச்செல்வனும் சந்திப்பில் முக்கியத்துவம் பெற்றார். அத்துடன் விடுதலைப் புலிகளின் சமாதான ஈடுபாடு தொடர்பிலும் விடுதலைப் புலிகளின் அரசியல் நிலைப்பாடு தொடர்பிலும் கருத்துக்களை மிகவும் சாதுரியமான வகையில் தமிழ்ச்செல்வன் பேசிவந்தார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளராக தமிழ்ச்செல்வன், விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் மறைவுக்குப் பிறகு நடந்த பேச்சுவார்த்தையில் தலைமை ஏற்றமையும் குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீலங்கா அரசியல்வாதிகளையும் தென்னிலங்கை தமிழ் தலைவர்களையும் இஸ்லாமியத் தலைவர்களையும் வரவேற்ற தருணங்களிலும் தமிழ்ச்செல்வன் உடனிருந்தார்.

அத்துடன் அவரின் புன்னகை முகம் பன்னாட்டு சமாதான தூதுவர்களை பூங்கொத்து கையளித்து வரவேற்றது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதான முகமாக தமிழ்ச்செல்வன் அவர்கள் அக்கால அரசியலில் முக்கியம் பெற்றிருந்தார்.

யார் இந்த தமிழ்ச்செல்வன்?

ஈழத்தின் யாழ்ப்பாணத்தின் தென்மராட்சிப் பகுதியில் சாவகச்சேரியில் 1967இல் பிறந்தவர் தமிழ்ச்செல்வன்.

ஈழ நிலம் உள்ளவரை நித்தியப்புன்னகை அழகனின் குரல் தீராது! | The Voice Of The Eternally Beautiful Tamilselvan

சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் கல்வி கற்ற இவர் 1984இல் இளம்வயதில் போராளியாக இணைந்தார். ஆரம்பத்தில் விடுதலைப் புலிகளின் கீழ்மட்டப் போராளியாக செயற்பட்ட இவர், 1987இல் தென்மராட்சிக் கோட்டப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.

1991இல் யாழ் மாவட்ட சிறப்புத் தளபதியாக செயற்பட்ட இவர், பல்வேறு போர் நடவடிக்கைளில் மிகவும் திறம்படச் செயல்பட்டிருந்தார். இதேவேளை 1993இல் பூநகரி மீட்புச் சமரான தவளைப் பாய்ச்சலில் காலில் காயமடைந்தார்.

இந்த நிலையில் 1993ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளராக சு.ப. தமிழ்ச்செல்வன் நியமிக்கப்பட்டிருந்தார்.

அத்துடன் வீரமரணம் அடையும் வரையில் விடுதலைப் புலிகளின் முக்கிய காலகட்டத்தில் இவர் அரசியல் துறைப் பொறுப்பளராக செயற்பட்டார் என்பதும் புலிகளின் கீழ்மட்டப் போராளியாக தனது போராட்ட வாழ்க்கையை துவங்கி புலிகளின் உயர்மட்ட பொறுப்பாளராக பணியாற்றியிருந்தார் என்பதும் சிறப்பாக குறிப்பிட வேண்டியதாகும்.

2002இல் துவங்கிய சமாதானப் பேச்சுக்களில் புலிகள் தரப்பின் முக்கியஸ்தராக இவர் பங்கேற்றதுடன் இறுதிப் பேச்சுவார்த்தையில் தலைமைப் பதவி வகித்தமையும் குறிப்பிடத்தக்கது.

சமாதானத்தின் கோர முகம்

2002களில் சமாதானப் பேச்சுவார்த்தைகள் துவங்கிய நிலையில், சமாதானம் தீர்வு தரும் என்றும் சமாதானம் அமைதி தரும் என்றும் ஈழ மக்கள் பெருமளவில் நம்பியிருந்தனர். ஆனாலும் சமாதான காலத்தில் இலங்கை அரச படைகள் பல்வேறு மீறல்களில் ஈடுபட்டன.

ஈழ நிலம் உள்ளவரை நித்தியப்புன்னகை அழகனின் குரல் தீராது! | The Voice Of The Eternally Beautiful Tamilselvan

விடுதலைப் புலிகள் இயக்கம்மீது மாத்திரமின்றி, பொதுமக்கள் மீதும் பல்வேறு ஒடுக்குமுறைகளை மேற்கொண்டிருந்தன.

அத்துடன் இராணுவ ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் விடுதலைப் புலிகள் இயக்கத்தை பலவீனப்படுத்தும் முயற்சிகளிலும் ஈடுபட்டன.

ஸ்ரீலங்காவின் சாமாதான தூதுவர் என்று முகம் காட்டிய அன்றைய பிரதமரும் இன்றைய ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க விடுதலைப் புலிகள் அமைப்பை பிளவுபடுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டதாகவும் சொல்லப்படுகிறது.

இதேவேளை சமாதான காலத்தில் விடுதலைப் புலிகளின் பகுதிகளுக்கும் ஊடுருவி வேவுபார்த்த இலங்கை இராணுவ உளவாளிகள் விடுதலைப் புலிகளின் இராணுவ பலத்தையும் அவர்களின் கட்டமைப்பையும் எவ்வாறு அழிக்கலாம் என்றும் திட்டம் தீட்டினர்.

சமாதான காலத்தை போருக்கு தயார்ப்படுத்தும் ஒரு காலமாகவே ஸ்ரீலங்கா அரசு பயன்படுத்தியது. இதனால் சமாதானத்தின் வழியாக தீர்வை காண்பதில் அக்கறையின்றி செயற்பட்டதுடன் சமாதான காலத்தில் விடுதலைப் புலிகள் இயக்கம்மீது பல்வேறு தாக்குதல்களும் இடம்பெற்றிருந்தன.

ஈற்றில் ஒருதலைபட்சமாக இலங்கை அரசு சமாதான ஒப்பந்தத்தை முறித்தது.

அமைதியை கொன்று துவங்கிய போர்

இந்த சூழலில்தான் 2006ஆம் ஆண்டில் நான்காம் ஈழப் போர் துவங்கியது.

ஈழ நிலம் உள்ளவரை நித்தியப்புன்னகை அழகனின் குரல் தீராது! | The Voice Of The Eternally Beautiful Tamilselvan

சமாதானம் அமைதியையும் நிம்மதியான வாழ்வையும் தரும் என்று நம்பியிருந்த காலத்தில் சமாதானம் தன் கோர முகத்தை, தன் உண்மை முகத்தை காட்டத் துவங்கியது.

அக் கால கட்டத்தில் செஞ்சோலைப்படுகொலை போன்ற விமானத் தாக்குதல்களால் ஈழமண் பெரும் அழிவுகளையும் சோகங்களையும் கண்டது.

எனினும் சமாதான வழியில் தீர்வு காணவும் மக்களின் மனிதாபிமான தேவைகளை நிறைவேற்றவும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் குரலாக தமிழ்ச்செல்வன் அவர்களின் குரல் ஒலித்துக்கொண்டே இருந்தது.

என்றபோதும் தடைகளை விதிப்பதிலும் பாதைகளை மூடுவதிலும் விமானத்தாக்குதல்களை நடாத்துவதிலும் மக்களை கொன்றழிப்பதிலும் தான் இலங்கை அரசு தீவிரமாக இருந்தது.

இந்தச் சூழலில்தான், 2007ஆம் ஆண்டு நவம்பர் 2ஆம் நாளன்று, இலங்கை விமானப் படை நடாத்திய தாக்குதலில் தமிழ்ச்செல்வன் அவர்களும் ஐந்துபோராளிகளும் வீரச்சாவை தழுவிக்கொண்டனர்.

அமைதியின் போராளியாக விடுதலைப் புலிகளின் சமாதானத் தூதுவராக செயற்பட்ட வெள்ளை உடை அணிந்த வெண் புண்ணகை கொண்ட தமிழ்ச்செல்வன் என்ற அமைதித் தளபதியை கொடிய போரில் கொன்றுவிட்டு சரியாக இரண்டு மாதங்களின் பின்னர், ஜனவரி 02ஆம் நாள், 2008ஆம் ஆண்டில், இலங்கை அரசு அதிகாரபூர்வமாக சமாதான ஒப்பந்தத்தை முறித்துக்கொண்டது.

ஈழத் தமிழரின் சமாதானக் குரலை, விடுதலைக் குரலை சிதைத்தது சிங்கள அரசு. சமாதானத்திலும் போரிலும் அறம்பிழைத்த ஓர் அரசு எம் நிலத்தின் அமைதித் தளபதியைக் கொன்றது. ஈழ நிலம் உள்ளவரை எம் நித்தியப்புன்னகை அழகனின் குரல் தீராது.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments