சர்ச்சைக்குரிய திருகோணமலை விகாரையில் இருந்த புத்தர் சிலை அகற்றப்பட்டது தொடர்பில் அரசாங்கம் தெளிவான விளக்கத்தை வழங்க தவறிவிட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது தொடர்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட நாமல், இந்த விடயம் நாடாளுமன்றில் கேள்வி எழுப்பப்பட்டதாகவும், இதற்கு பொறுப்பான அமைச்சர் பதிலளிக்காமல் சென்று விட்டதாகவும் கூறியுள்ளார்.
அதன்போது, “புத்தர் சிலையை அதன் பாதுகாப்புக்காக வெளியே கொண்டு சென்ற போது, பிக்குகளை தாக்கியது யார் என்று நாங்கள் கேட்டோம். அரசாங்கம் இன்னும் அந்தக் கேள்விக்கு பதிலளிக்கத் தவறிவிட்டது,” என்று அவர் கூறியுள்ளார்.
21 பேரணி
இந்த நிலையில், நவம்பர் 21 ஆம் திகதி நுகேகோடாவில் நடைபெற உள்ள பேரணியில், சிறிலங்கா பொதுஜன பெரமுன தொடர்புடைய அனைத்து காரணங்களையும் தீர்க்கும் என நாமல் குறிப்பிட்டுள்ளார்.

அதன்பின்னர், பிரதான எதிர்க்கட்சி யார் என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள் எனவும் அரசாங்கம் தனது தேர்தல் வாக்குறுதிகளை எவ்வாறு நிறைவேற்றியது என்பது குறித்து தங்கள் கருத்துக்களை வெளியிடுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
