மட்டக்களப்பில் மீண்டும் குழப்பங்களை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கையை மங்கலராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் முன்னெடுத்துவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பன்குடாவெளி பகுதியில் உள்ள தொல்பொருள் பகுதிக்கு சென்று நேரலையொன்றை செய்துள்ளதுடன் அங்கு விகாரையினை அமைக்க முன்வருமாறு சுமனரத்ன தேரர் கோரிக்கை விடுத்துள்ளார்.

பன்குடாவெளி பிரதேசம் நூறு வீதம் இந்துக்கள், கிறிஸ்தவ மக்கள் வாழும் பகுதியாகும். அங்கும் அதனை சூழவுள்ள பகுதிகளிலும் எந்த பௌத்த மக்களும் வாழவில்லை. ஆனால் அங்கு சுமார் 1000 வருடத்திற்கு முற்பட்ட தொல்பொருள் சின்னம் காணப்படுகின்றது.

அது எந்த மதத்திற்குரியது என்பது தொடர்பிலான எந்த தகவலும் தெரிவிக்கப்படாத நிலையில் அம்பிட்டிய சுமனரத்ன தேரர் குறித்த இடம் பௌத்தர்களுக்கு உரியது என பல காலமாக மதங்களிடையே பிரச்சினைகளை ஏற்படுத்தி வருகின்றார்.

ஏற்கனவே 2020ஆம் ஆண்டு, குறித்த பகுதி பௌத்த மதத்திற்குரிய பகுதி அங்கிருந்து அனைவரும் வெளியேறவேண்டும் என அம்பிட்டிய சுமனரத்ன தேரர் கூறியதுடன், அங்கிருந்த தொல்பொருள் அதிகாரிகளும் தாக்கப்பட்டிருந்தனர்.

இது தொடர்பில் சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு தொல்பொருள் திணைக்களம் அதனை அடையாளப்படுத்தியுள்ள நிலையில் விவசாயிகள், மக்கள் அப்பகுதிகளில் தமது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்றைய தினம்(19) பன்குடாவெளி பகுதிக்கு சென்ற அம்பிட்டிய சுமனரத்ன தேரர் குறித்த பகுதியில் புத்தர் சிலையொன்றை வைத்து விகாரை அமைக்கப்படவேண்டும் என்ற அழைப்பினை சிங்கள மக்களுக்கு விடுத்துள்ளார்.

இது எதிர்காலத்தில் பாரிய அச்சுறுத்தல்களை ஏற்படுத்தும் நிகழ்வாக மாறும் நிலையுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது. 

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments