இயற்கையை புரிந்துகொள்கிற அளவுக்கும் எதிர்கொள்கிற அளவுக்கும் மனித சமூகம் ஒருபோதும் வளர்ந்துவிடாது.
மாறாக இயற்கையை அழிக்கும் செயலில்தான் உலகம் முன்னோக்கிப் போகிறது. இயற்கையை நீ அழித்தால் இயற்கையால் நீ அழிவாய் என்ற அன்றைய தமிழீழ தேசத்தின் வாசகம், தமிழீழத்திற்கு மாத்திரமின்றி உலக முழுமைக்கும் பொருத்தமானது.
இதனால்தான் இயற்கை எனது நண்பன் என்று தலைவர் பிரபாகரன் கூறியிருந்தார்.
சுனாமி எனும் கடற்கோள்
2004ஆம் ஆண்டு டிசம்பர் 26 அன்று ஏற்பட்ட சுனாமி ஆழிப்பேரலை, மனித வரலாற்றில் மறக்க முடியாத ஒரு மாபெரும் இயற்கை பேரிடராகும்.
இந்த ஆழிப்பேரலை ஏற்படுத்திய பாதிப்புகள், குறிப்பாக இலங்கை மற்றும் தமிழர் தாயகப் பகுதிகளில் நிகழ்த்திய வடு இன்றும் ஆறாத ஒன்றாக உள்ளது.
இந்தோனேசியாவின் சுமத்ரா தீவிற்கு அருகே கடலுக்கடியில் ஏற்பட்ட 9.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கமே இந்த சுனாமிக்குக் காரணமாக அமைந்தது.
இது இந்தியப் பெருங்கடலை ஒட்டியுள்ள 14 நாடுகளைத் தாக்கியது. இந்த அனர்த்தத்தில் உலகம் முழுவதும் சுமார் 2,30,000 பேர் உயிரிழந்தனர்.
இந்தோனேசியா, இலங்கை, இந்தியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் மிக மோசமான பாதிப்புக்கு உள்ளாகின. பல இலட்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து இடம்பெயர்ந்தனர்.
இது மனித வரலாற்றில் மிக அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்திய இயற்கை சீற்றங்களில் ஒன்றாகப் பதிவானது.
இலங்கைக்கு அதிக பாதிப்பு
இந்தோனேசியாவுக்கு அடுத்தபடியாக, இலங்கையிலேயே அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டன. இலங்கையில் சுமார் 35,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் மற்றும் ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டனர்.
நாட்டின் கிழக்கு, தெற்கு மற்றும் வடக்குப் பகுதிகள் பெரும் அழிவைச் சந்தித்தன. காலி, மாத்தறை, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் கடற்கரை ஓரங்கள் முற்றாகத் துடைத்தெறியப்பட்டன.
இலங்கையின் பொருளாதாரம், சுற்றுலாத்துறை மற்றும் மீன்பிடித்தொழில் இதனால் நிலைகுலைந்து போனது.
கடல் அள்ளிய தமிழர் தாயகம்
வடக்கு கிழக்கு மாகாணங்களில், குறிப்பாக தமிழர் பகுதிகளில் சுனாமியின் தாக்கம் மிகக் கொடூரமாக இருந்தது. முல்லைத்தீவு, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை மாவட்டங்கள் பெரும் அழிவைச் சந்தித்தன.
முல்லைத்தீவு மாவட்டம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டது. அங்குள்ள கடற்கரைக் கிராமங்கள் அடையாளம் தெரியாமல் அழிந்தன. தாயகப் பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்ததுடன், ஏற்கனவே உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்டிருந்த உட்கட்டமைப்புகள் முற்றாகச் சிதைந்தன.
முகாம்களில் தங்கியிருந்த இடம்பெயர்ந்த மக்கள் மீண்டும் ஒருமுறை இயற்கைச் சீற்றத்தினால் அனைத்தையும் இழந்தனர்.
விடுதலைப் புலிகளின் மீட்புப் பணிகள்
அக்காலப்பகுதியில் வடக்கு மற்றும் கிழக்கின் பெரும்பகுதியைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த தமிழீழ விடுதலைப் புலிகள், சுனாமி தாக்கிய அடுத்த சில மணிநேரங்களிலேயே மிகத் துரிதமான மீட்புப் பணிகளைத் தொடங்கினர்.
புலிகளின் நிழல் நிர்வாகம் வளர்ந்துவரும் ஒரு அரசாக இருந்த காலகட்டத்தில் ஒரு நாட்டின் அரசாங்கமாக மீளமைப்புப் பணிகளை மிகக் குறுகிய காலத்தில் திட்டமிட்டு அவர்கள் மேற்கொண்டனர்.
விடுதலைப் புலிகளின் கடற்புலிகள் மற்றும் தரைப்படை வீரர்கள் பொதுமக்களைக் காப்பாற்றும் பணியில் உடனடியாக இறங்கினர். உயிரிழந்தவர்களின் உடல்களைக் கௌரவமாக அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்தனர்.
‘தமிழீழ சுகாதாரப் பிரிவு’ பாதிக்கப்பட்ட மக்களுக்காகத் தற்காலிக மருத்துவ முகாம்களை அமைத்து, தொற்றுநோய்கள் பரவாமல் தடுத்தது.
TRO எனப்படும் தமிழர் புனர்வாழ்வுக் கழகம், மூலம் வெளிநாடுகளில் இருந்து வந்த உதவிகளை ஒருங்கிணைத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் உடைகளை வழங்கினர்.
வீடுகளை இழந்த மக்களுக்காகக் குறுகிய காலத்தில் தற்காலிகக் குடியிருப்புகளை அமைத்துக் கொடுத்தனர். அவர்களது நேர்த்தியான நிர்வாகம் மற்றும் வெளிப்படைத்தன்மையான விநியோகம் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தது.
ஜேவிபியின் எதிர்ப்பு
இந்த பேரிடர் காலத்திலாவது தமிழீழ விடுதலைப் புலிகள் இலங்கை அரசுடன் இணைந்து செயல்பட ‘சுனாமி பொதுக் கட்டமைப்பு’ (P-TOMS) உருவாக்க முயற்சி எடுக்கப்பட்டது.
தற்போது ஆட்சியில் உள்ள ஜேவிபி உள்ளிட்ட பேரினவாத கட்சிகளின் எதிர்ப்புக்காரணமாக அந்த முயற்சி முறியடிக்கப்பட்டது. என்றபோதும்கூட விடுதலைப் புலிகள் மனிதாபிமானத்துடன் தமது அரசியல் அறத்தினை வெளிப்படுத்தினர்.
போர்க்காலங்களின்போதும் மக்களின் வாழ்க்கையை மீளக்கட்டமைப்பதில் விடுதலைப் புலிகளின் செயற்பாடு மிகுந்த கட்டமைப்பு நேர்த்தி கொண்டது.
சுனாமி அனர்தத்தின்போது ஒரு அரசாக அதனை அவர்கள் கொண்டார்கள். தனிநாடு அமைந்திருந்தால் வடக்கு கிழக்கு மிகப்பெரும் வளர்ச்சியை எட்டும் என்ற நம்பிக்கையை விடுதலைப் புலிகளின் கட்டமைப்புக்களும் துரிதமும் நேர்த்தியும் கொண்ட ஆற்றல்களும் ஏற்படுத்தியிருந்தன.
2004 சுனாமி ஒரு இயற்கை அனர்த்தம் என்பதைத் தாண்டி, மனித ஒற்றுமையையும் சகிப்புத்தன்மையையும் சோதித்த ஒரு நிகழ்வாகும்.
இன்று இலங்கையை ஆழ்பவர்கள் அன்று ஒற்றுமை சகிப்புத்தன்மையில் தோல்வியடைந்து நின்றார்கள் என்பதையும் சுனாமி நினைவுநாளில் சேர்த்து நினைவுபடுத்த உந்தப்படுகிறோம்.
தமிழர் தாயகத்தைப் பொறுத்தவரை, போர்க்கால இடர்களுக்கு மத்தியிலும் தமக்கான மீட்புப் பணிகளைத் தாங்களே முன்னெடுத்த விதம் புலிகளின் வீரியத்தை உலகுக்குக் காட்டியது.
சுனாமியில் உயிர்நீத்த உறவுகளின் நினைவாக இன்றும் டிசம்பர் 26 அன்று நினைவுச் சுடர்கள் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டு வருகின்றது.
