பிரித்தானியாவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரையை அகற்றக் கோரி இடம்பெற்ற அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்ட வேலன் சுவாமி உள்ளிட்ட ஐவர் மீது காவல்துறையினர் நடத்திய தாக்குதலைக் கண்டித்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இதனடிப்படையில், தாயகத்தில் எதிர்வரும் சனிக்கிழமை (03.01.2026) நடைபெறவிருக்கும் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் அதே நாளில் லண்டனில் குறித்த போராட்டம் இடம்பெறவுள்ளது.
புலம்பெயர் தமிழர்கள்
இந்தநிலையில், பிரித்தானிய பிரதமர் அலுவலகத்தின் முன்பாக வரும் மூன்றாம் திகதி மதியம் 2:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இதனுடன், ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளும் அனைவரின் கையெழுத்துக்களுடன் கூடிய மகஜர் ஒன்று, ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அனைத்து வெளிநாட்டு தூதரகங்களுக்கும் அனுப்பி வைக்கப்படவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எமது நில ஆக்கிரமிப்புக்கு எதிராகவும், உரிமைக் குரலை நசுக்கும் அடக்குமுறைக்கு எதிராகவும் புலம்பெயர் தமிழர்கள் ஓரணியில் திரண்டு நீதி கோர வேண்டும் என இப்போராட்டத்திற்காக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
