வெளிநாட்டுச் சுற்றுலாப்பயணிகள் தமது விடுமுறையை மகிழ்ச்சியாகக் கழிப்பதற்கு, வடக்கு மாகாணம் மிகவும் பாதுகாப்பானதும் அமைதியானதுமான ஒரு பிரதேசமாகும்.

எனவே, ரஷ்யச் சுற்றுலாப்பயணிகளின் வருகையை வடக்குக்குத் திருப்ப உதவுவதுடன், எமது மாகாணத்தில் உள்ள முதலீட்டு வாய்ப்புகளில் ரஷ்ய முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதையும் ஊக்குவிக்கவேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், இலங்கைக்கான ரஷ்யத் தூதுவர் லெவன் எஸ்.ஜகார்யனிடம் கோரிக்கை விடுத்தார்.

யாழில் ரஷ்யத் தூதுவர்

இலங்கைக்கான ரஷ்யத் தூதுவர் லெவன் எஸ்.ஜகார்யன், வடக்கு மாகாண ஆளுநரை நேற்று  (5) ஆளுநர் செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார்.

பல தசாப்தங்களுக்குப் பின்னர் ரஷ்யத் தூதுவர் ஒருவர் யாழ்ப்பாணத்துக்கு உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டமை மகிழ்ச்சியளிப்பதாகக் குறிப்பிட்டு ஆளுநர் அவரை வரவேற்றார்.

இச்சந்திப்பின்போது கருத்துத் தெரிவித்த ரஷ்யத் தூதுவர்,

ரஷ்யச் சுற்றுலாப்பயணிகள் இலங்கைக்கு அதிகளவில் வருகை தருகின்றனர். எதிர்காலத்தில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. எனினும், வடக்கு மாகாணத்துக்கான ரஷ்யச் சுற்றுலாப்பயணிகளின் வருகை மிகக் குறைவாகவே உள்ளது.

எனவே, இலங்கையின் ஏனைய பகுதிகளுக்கு வரும் ரஷ்யப் பயணிகளை ஈர்க்கும் வகையில் வடக்கு மாகாணம் தனது சுற்றுலாத் திட்டங்களை முன்னெடுப்பது சிறப்பாக அமையும் எனச் சுட்டிக்காட்டினார். இதற்குப் பதிலளித்த ஆளுநர், இந்தியாவுடனான நேரடி விமான சேவை காரணமாக அதிகளவான இந்தியச் சுற்றுலாப் பயணிகள் வடக்கு மாகாணத்துக்கு வருகை தருகின்றனர்.

வடக்கு மாகாணமானது சுற்றுலாப்பயணிகள் தங்கிச் செல்வதற்கு மிகவும் பாதுகாப்பான சூழலைக் கொண்டுள்ளது. இதனைத் தாங்கள் ரஷ்ய மக்களுக்குத் தெரியப்படுத்துவதன் மூலம் அவர்களின் வருகையை அதிகரிக்க உதவ வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

வடக்கு மாகாணத்தின் பொருளாதார வளர்ச்சிக்காக ரஷ்ய முதலீட்டாளர்களை இங்கு முதலீடு செய்வதற்கு ஊக்குவிக்குமாறும் ஆளுநர் இதன்போது கோரிக்கை விடுத்தார்.

தொடர்ந்து, ரஷ்ய கலாசார நிலையத்தின் ஊடாக இலங்கையர்களுக்கு வழங்கப்படும் புலமைப்பரிசில் மற்றும் உயர்கல்வி வாய்ப்புகள் குறித்துத் தெளிவுபடுத்திய தூதுவர், இவ்வாய்ப்புகளை வடக்கு மாகாண மாணவர்களும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.  

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments