இலங்கையில் டொராண்டோவைச் சேர்ந்த கனேடியப் பிரஜை ஒருவர் மீது திட்டமிடப்பட்ட கூலிப்படைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
குறித்த நபர் கடந்த பெப்ரவரி மாதம் இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டிருந்த நிலையில், அங்கு தங்கியிருந்த இடத்திற்கு அருகே மர்மக் கும்பல் ஒன்றால் வழிமறிக்கப்பட்டு இரும்புத் தடிகள் மற்றும் ஆயுதங்களால் மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார்.
பெருந்தொகை பணம்
இதையடுத்து தாக்குதலில் பலத்த காயமடைந்த அவர், உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
ஆரம்பத்தில் இது வழிப்பறி அல்லது தற்செயலான மோதலாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்ட நிலையில், தற்போது இது ஒரு திட்டமிடப்பட்ட தாக்குதல் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

தாக்குதலுக்கு உள்ளான நபர் இலங்கைக்கு வருவதை முன்கூட்டியே அறிந்த ஒரு கும்பல், அவரைத் தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளது.
அத்தோடு, இவரைத் தாக்குவதற்காக உள்ளூர் கும்பல் ஒன்றிற்குப் பெருந்தொகை பணம் கைமாறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கூலிப்படைத் தாக்குதல்
இது ஒரு கூலிப்படைத் தாக்குதல் (Contract Hit) என அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக இலங்கையில் உள்ளூர் நபர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் மற்றும் தொலைபேசி உரையாடல்களை ஆதாரமாகக் கொண்டு அடுத்தகட்ட விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
பாதிக்கப்பட்டவருக்குத் தேவையான சட்ட மற்றும் மருத்துவ உதவிகளை வழங்க கனேடிய தூதரகம் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
