பாலஸ்தீன ஆதரவு அமைப்பான பாலஸ்தீன் எக்ஷனுடன் தொடர்புடைய பிரித்தானிய செயற்பாட்டாளர்களான ஹீபா முரைசி மற்றும் கம்ரான் அகமது ஆகியோர் சாகும் வரை உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த இருவரும் தற்போது மரணத்தின் விளிம்பில் இருப்பதாக, அவர்களின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

அவர்களின் கோரிக்கைகள் நிறைவேறும் வரை சிறையில் மேற்கொண்டு வரும் உணவு தவிர்ப்பு போராட்டத்தை கைவிடப் போவதில்லை என்றும் அவர்கள் உறுதியாகக் கூறியுள்ளனர்.

மரணத்தின் விளிம்பில் 60 நாட்களுக்கு மேல் தொடரும் உணவு தவிர்ப்பு போராட்டம் | Palestine Action Hunger Strikers

ஹீபா முரைசி கடந்த 67 நாட்களாகவும், கம்ரான் அகமது 60 நாட்களாகவும் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த நவம்பர் மாதம் தொடங்கிய இந்த தொடர் போராட்டத்தில் மொத்தம் எட்டு பேர் பங்கேற்ற நிலையில், உடல்நலக் காரணங்களால் ஐந்து பேர் போராட்டத்தை நிறுத்தியுள்ளனர்.

23 வயதான லூயி கியாரமெல்லோ இன்னும் உணவு தவிர்ப்பை தொடரும் மூன்றாவது கைதியாக உள்ளார்.

மிக நீண்ட நாட்களாக உணவை தவிர்த்து வரும் ஹீபா முரைசி “மிகவும் மெலிந்து, வெளிர்ந்து காணப்படுகிறார்” என அவரை சந்தித்த நண்பர் அமரீன் அஃப்சல் தெரிவித்தார்.

தசை வலி, மூச்சுத் திணறல், கடும் உடல்வலி, வெள்ளை இரத்த அணுக்கள் குறைவு போன்ற பிரச்சினைகளால் அவர் கடந்த ஒன்பது வாரங்களில் மூன்று முறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நினைவாற்றலும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேபோல், லண்டனைச் சேர்ந்த இயந்திர தொழில்நுட்பவியலாளரான கம்ரான் அகமது இடது காதில் கேள்வி இழப்பு, மார்புவலி, தலைச்சுற்றல், இதயத் துடிப்பு குறைவு போன்ற கடுமையான உடல்நலச் சிக்கல்களை சந்தித்து வருகிறார்.

அவர் உணவு தவிர்ப்பு தொடங்கியதிலிருந்து ஆறு முறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது சகோதரி ஷாஹ்மினா ஆலம்அ தெரிவித்துள்ளார்.

“ஒவ்வொரு முறையும் அவரை பார்க்கும் போது, இது கடைசி சந்திப்பாக இருக்குமோ என்ற பயம் ஏற்படுகிறது” என அவர் கூறியுள்ளார்.

இந்த கைதிகள், இஸ்ரேலின் பாதுகாப்பு நிறுவனமான எல்பிட் சிஸ்டம்ஸ் தொடர்புடைய இடங்களில் உட்புகுந்ததாக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, வழக்கு நிலுவையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த குற்றச்சாட்டுக்களை அவர்கள் திட்டவட்டமாக மறுத்துள்ளனர். பிணை வழங்கல், நியாயமான விசாரணை, பலஸ்தீன் எக்ஸன் அமைப்பை “தீவிரவாத அமைப்பு” பட்டியலிலிருந்து நீக்குதல், சிறைகளில் தகவல் தடையை நிறுத்துதல் போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

விசாரணை தொடங்குவதற்கு முன்பே, இவர்கள் அனைவரும் ஒரு ஆண்டுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டிருப்பது, வழக்கமான ஆறு மாத முன்-விசாரணை கால எல்லையை மீறுவதாகவும் விமர்சிக்கப்படுகிறது.

இந்த உணவு தவிர்ப்பு போராட்டம் “மிக ஆபத்தான கட்டத்தை” எட்டியுள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

உயிரிழப்பு அல்லது திரும்பப் பெற முடியாத உடல் சேதம் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதாக அவசர மருத்துவ நிபுணர் ஜேம்ஸ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

எனினும், இந்த விவகாரத்தில் பிரிட்டன் நீதித்துறை அமைச்சு இதுவரை எந்த அதிகாரப்பூர்வ பதிலும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments