யாழ்ப்பாணத்தில் பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் பதிலாக முன்மொழியப்பட்டுள்ள புதிய சட்ட வரைபு தொடர்பான திறந்த கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்நிகழ்வு யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் நேற்று (20-01-2026) இடம்பெற்றுள்ளது.
சட்டம் மற்றும் கொள்கைகளுக்கான யாழ்ப்பாணக் கற்கை நிலையத்தின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், அரசியல் பிரமுகர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள், இளையோர் மற்றும் மகளிர் அமைப்புகளின் பிரதிநிதிகள் என சுமார் 100 பேர் வரை கலந்துகொண்டுள்ளனர்.
அரசாங்கம் உறுதி
இதன்போது தொடக்க உரையாற்றிய அந்நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சட்டத்தரணி கலாநிதி க. குருபரன், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவதாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உறுதியளித்திருந்த போதிலும், புதிய சட்டத்தைக் கொண்டு வருவதில் அரசாங்கம் தயக்கம் காட்டி வருவதைச் சுட்டிக்காட்டினார்.
அத்தோடு, தமிழர் தரப்பின் நிலைப்பாடானது இச்சட்டம் முற்றாக நீக்கப்பட வேண்டும் என்பதே தவிர, அதற்குப் பதிலீடாக வேறெந்தச் சட்டமும் தேவையில்லை என்பதாகும் என அவர் கோடிட்டுக் காட்டியுள்ளார்.

மேலும், சர்வதேச ரீதியில் பயங்கரவாதத்திற்கு நிலையான வரைவிலக்கணம் இல்லாத நிலையில், இப்புதிய சட்ட வரைபில் எதனையும் பயங்கரவாதமாக உள்வாங்கக்கூடிய நெகிழ்வுப்போக்கு காணப்படுவதாகவும், அவசரகாலத் தடைச்சட்டத்தின் தற்காலிகக் கட்டளைகளை நிரந்தரச் சட்டமாகக் கொண்டு வர முயற்சி நடப்பதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், வேலன் சுவாமிகள் உள்ளிட்ட சமூக அரசியல் செயற்பாட்டாளர்கள், மீண்டும் ஒரு மக்கள் போராட்டம் உருவாவதைத் தடுக்கவும் தமிழ் மக்களின் அரசியல் போராட்டத்தை நசுக்கவும் இச்சட்டம் பயன்படுத்தப்படலாம் எனக் கவலை வெளியிட்டுள்ளனர்.
எனவே, முன்மொழியப்பட்டுள்ள இந்தச் சட்ட வரைபைத் தமிழ் மக்கள் முற்றுமுழுதாக நிராகரிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியமை குறிப்பிடத்தக்கது.











