1987 ஜனவரி (தை மாதம்) 28, 29, 30 ஆகிய நாட்களில் இலங்கை அரசின் விசேட அதிரடிப்படைகளால் கொக்கட்டிச்சோலைப் பிரதேசத்தில் நடத்தப்பட்ட கோர இனப்படுகொலை இது.
இந்தப் படுகொலையில், கொக்கட்டிச்சோலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களை இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.
இதில் 150 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்ததுடன் பலர் சுட்டும் மற்றும் வெட்டியும் கொல்லப்பட்டனர்.
சிலர் தீவைத்து எரிக்கப்பட்டதுடன் 12 பேர் இன்றுவரை காணாமல் போயுள்ளனர். அவர்களின் நிலை குறித்து இன்னும் தெளிவான தகவல்கள் இல்லை.
கொக்கட்டிச்சோலைப் பிரதேசம் முழுவதும் சுற்றிவளைத்த இலங்கை அரசுப் படைகள், தரைவழியாகவும் வான்வழியாகவும் தாக்குதல்களை மேற்கொண்டனர்.
அத்தோடு, விமானத் தாக்குதல்களும் இடம்பெற்றதுடன் இறால் பண்ணைப் பகுதியில் தொடங்கிய இந்தக் கொடூர நடவடிக்கை, முதலைக்குடா, முனைக்காடு, மகிழடித்தீவு, தாண்டியடி, கொக்கட்டிச்சோலை மற்றும் அம்பிளாந்துறை ஆகிய பகுதிகளுக்கு விரிந்தது.
இந்தப் பகுதிகளின் கிராமங்கள் முழுவதும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டதுடன் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
கிராமங்கள் அனைத்தும் பெரும் அச்சத்திலும் குழப்பத்திலும் மூழ்கின.
இந்த சம்பவம், தமிழ்மக்களின் வரலாற்றில் அழியாத வலியையும் மற்றும் நீதி கோரும் நினைவாகவும் இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
