முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் 60 வரையான காணி உரிமையாளர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாக தெரிவித்து காணி உரிமையாளர்கள் முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக நேற்று (27.01.2026) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர்.
அதன்படி, புதுக்குடியிருப்பு கோம்பாவில் கிராமசேவையாளர் பிரிவு மற்றும் தேவிபுரம் பகுதி மக்கள் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்தனர்.
புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் காணிப்பகுதி உத்தியோகத்தர்கள் கிராம அலுவலர் ஆகியோரால் முன்னெடுக்கப்பட்ட குறித்த நடவடிக்கைக்கு ஆட்சேபனை தெரிவித்து இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
வழக்கு தாக்கல்
இதன்போது இது தொடர்பான மகஜரினை வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் து.ரவிகரனிடமும் முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரிடமும் கையளித்துள்ளனர்.

இதன்போது கருத்து தெரிவித்த காணி உரிமையாளர்கள், “காணிகளை விட்டு உடனடியாக வெளியேறுமாறு பிரதேச செயலகத்தினால் அ. படிவம் ஒட்டப்பட்டுள்ளதுடன் எம்மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதில் சிலர் 15 ஏக்கர் வரையில் காணியினை பிடித்து ஆவணம் போட்டுள்ளார்கள் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை ஏழை மக்களை கருத்தில் எடுக்கவில்லை இது தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபருடன் கதைத்துள்ளோம். காணி ஆணையாளரிடம் கதைத்துள்ளோம்.
இந்த அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கடிதம் கொடுத்துள்ளோம் ஜனாதிபதி செயலத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளோம் இதுவரையும் எந்த பதிலும் இல்லை. இந்த நிலையில் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்துள்ளோம்” என தெரிவித்துள்ளனர்.
