சிறிலங்கா சுதந்திர தின நாளில், தமிழர் தேசத்தின் தாய்மார்களும் தந்தையர்களும் ஊன்றுகோல்களை ஏந்தியபடி, தள்ளாடிய நிலையில் கண்ணீரோடும் கம்பலையோடும் நடாத்திய போராட்டம் கல்லாயிருக்கும் மனிதர்களின் மனங்களையும் கரைக்கும் காட்சியென இருந்தது.

உண்மையில் போராட்டத்தின் புகைப்படங்களைப் பார்த்த பிறகு, மனம் தாங்க இயலாத துயரத்தை நிரப்பியது.

சிறிலங்கா அரசின் இனப்படுகொலை மனம் இன்னும் ஏன் கரையவில்லை என்ற கேள்வி மட்டும்தான் எஞ்சியது.

இந்த உலகம் ஈழத் தமிழ் மக்களின் இப்பெருந்துயர நிலை கண்டும் ஒரு தீர்மானத்தை எடுக்காமல் உலகின் மோசமான அளவுகோல்களின்படியெ ஈழப் பிரச்சினையை ஏன் அணுகிறது என்ற சினமும் துயரமும் பெருகுகிறது.

ஒடுக்குமுறையின் ஆரம்ப நாள்

1948 பெப்ரவரி 4ஆம் நாள், இலங்கை “சுதந்திரம்” பெற்ற தினமாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்தச் சுதந்திரம், தீவின் அனைத்துத் தேசங்களுக்கும், இனங்களுக்கும், மொழிகளுக்கும் சமமாகப் பகிரப்பட்டதா என்ற கேள்வி இன்னமும் தமிழர் மனங்களில் பெருங்காயமாகத் துடிக்கிறது.

ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது. அடிமைத் தன்மை முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. ஆனால் தமிழர் தாயகத்திற்கு அந்த நாள் ஒரு விடுதலையின் துவக்கமாக இல்லாமல் மாறாக, புதிய ஒடுக்குமுறைகளின் ஆரம்ப நாளாகவே அமைந்தது.

அதனாலேயே, சிறிலங்கா சுதந்திர தினம் தமிழர் வரலாற்றில்  சுதந்திரத்தை உணரும் நாளாக அன்றி, எதிர்ப்பின் நினைவாக, கிளர்ந்தெழும் நிலத்தின்  பெருங்குரல் வெடிக்கும் நாளாக வரலாறு முழுவதும் தொடர்கிறது.

சுதந்திரத்துக்குப் பின்னர் உருவான அரசியல் கட்டமைப்பு, பெரும்பான்மை இனத்தின் ஆதிக்கத்தை சட்டபூர்வமாக உறுதிப்படுத்தியது. 1948 மற்றும் 1949ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட குடியுரிமைச் சட்டங்கள், நூற்றுக்கணக்கான ஆயிரம் மலையகத் தமிழர்களை நாட்டிலற்றவர்களாக்கின.

இது, சுதந்திரத்தின் முதல் பலி தமிழர்களே என்பதைத் தெளிவாகச் சுட்டியது. “ஒரே நாடு, ஒரே மொழி” என்ற கோஷங்கள், சிங்கள மொழி ஆதிக்கத்தை அரசியல் அதிகாரமாக மாற்றின.

1956ஆம் ஆண்டின் “சிங்களம் மட்டும்” சட்டம், தமிழர் தாயகத்தின் பண்பாட்டு, மொழி அடையாளங்களுக்கு நேரடியான அச்சுறுத்தலாக மாறியது.

ஒடுக்குமுறைக்கு எதிராக தமிழர் தாயகம்

இந்த அரசியல் ஒடுக்குமுறைகளுக்கு எதிராக தமிழர் தாயகம் மௌனமாக இருக்கவில்லை. ஆரம்பகட்டத்தில், தமிழர் தலைமை அமைப்புகள் சமாதானமான அரசியல் வழிமுறைகளையே தேர்ந்தெடுத்தன.

சம உரிமை, மொழி சமத்துவம், சுயாட்சி ஆகிய கோரிக்கைகள் அரசியல் அரங்கில் முன்வைக்கப்பட்டன. ஆனால் அந்தக் கோரிக்கைகளுக்கு பதிலாக, ஒப்பந்த மீறல்கள், வன்முறைத் தாக்குதல்கள், இனக் கலவரங்கள் தான் தமிழர்களுக்குக் கிடைத்தன.

1958, 1977, 1983 ஆகிய ஆண்டுகளில் நிகழ்ந்த இனவழிப்புப் படுகொலைகள், தமிழர் தாயகத்தின் மீது நிகழ்த்தப்பட்ட அரச வன்முறையின் அடையாளங்களாக நீண்டன.

குறிப்பாக, யாழ் நூலக எரிப்பு, தமிழர் அறிவுப் பாரம்பரியத்தின் மீது ஏவப்பட்ட திட்டமிட்ட இனவழிப்பாகவே நிகழ்த்தப்பட்டது. இந்த அடக்குமுறைகளின் தொடர்ச்சியாக, தமிழர் தாயகத்தில் ஒரு புதிய அரசியல் உணர்வு கிளர்ந்தெழுந்தது.

அது வெறும் உரிமைக் கோரிக்கையாக அல்ல. தன்னாட்சி, தன்னியக்கம், இறுதியில் தனித்த அரசியல் அங்கீகாரம் என்ற இலக்கை நோக்கி நகர்ந்தது.

இளம் தலைமுறையின் மனங்களில், சுதந்திர தினத்தின் கொண்டாட்டம் ஒரு புனிதமான நிகழ்வாக அல்ல; மறுக்கப்பட்ட உரிமைகளின் நினைவூட்டலாக மாறியது.

சிறிலங்கா சுதந்திர தினம் வந்த போதெல்லாம், தமிழர் தாயகம் தனது காயங்களை மீண்டும் நினைவுகூரும் அதேவேளை, எத்தகைய நிலையிலும் கிளர்ந்தெழும் ஆற்றலை மீளப் புதுப்பித்துக் கொண்டது. அதற்கு அண்மைய சுதந்திரதினமும் தக்க சான்றாகியது.

போர் தொடுத்த நாள்

1970களுக்குப் பின்னர், இந்த அரசியல் விழிப்புணர்வு ஆயுதமயமான எதிர்ப்பாக உருவெடுத்தது. அது ஒரு நாளில் தோன்றியதல்ல. சுதந்திரத்தின் பெயரில் தொடர்ச்சியாக மறுக்கப்பட்ட நீதியின் விளைவு.

தமிழர் தாயகத்தில் கிளர்ந்தெழுந்த அந்தப் போராட்டம், ஒரு இனத்தின் வாழ்வுரிமை, அடையாளம், அரசியல் கௌரவம் ஆகியவற்றைக் காக்கும் போராட்டமாகப் பரிணமித்தது.

சுதந்திர தின விழாக்களில் பட்டாசுகள் வெடித்தபோது, தமிழர் தாயகத்தில் இனப்படுகொலையின் நினைவுகள்தான் வெடித்தன. இழப்புகளின், தியாகங்களின், எதிர்ப்பின், எதிர்பார்ப்பின் நினைவுகள்ளுடனேயே எம் மக்கள் உள்ளனர்.

இப்படியாக காலம் காலமாக ஒடுக்குமுறையும் புறக்கணிப்பும் திட்டமிட்ட பாரபட்சங்களும் ஈழத் தமிழினத்தை மிகவும் பாதித்தது. அழிக்கப்படும் ஒரு இனம் தன்னைக் காத்துக் கொள்ள தனிநாடு கோரிய விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்தது.

ஆனால் ஒவ்வொரு சுதந்திர தின நிகழ்வையும் சிங்கள தேசம் தமிழர்களின் விடுதலை தேசத்திற்கு எதிரான போரின் பிரகடன நாளாக அனுஷ்டித்தது.

குறிப்பாக சுதந்திர நாளில் தமிழர் தேசம்மீது பாரிய விமானத்தாக்குதல்களும் படுகொலைகளும் நடந்தன. இதனால் தமிழர்களுக்குத் தனிநாடு ஒன்றே பாதுகாப்பு என்று ஈழத் தமிழ் மக்கள் தீர்மானித்தார்கள்.

அந்தக் கனவும் முயற்சியும் ஒரு நிழல் தேசத்தை, நாட்டை உருவாக்கியது.

கல் கரையும்… அநுரவின் மனம்

இந்த நிலையில் சிறிலங்கா அரசு மாபெரும் இனப்படுகொலைப் போரை நடாத்துவதன் மூலம், தமிழர்களின் சுதந்திர நிழல் அரசை அழிப்பதுடன் ஈழ மக்களையும் படுகொலை செய்துவிடலாம் என்ற திட்டத்தில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நடாத்தியது.

இதனால் போரில் ஒன்றரை லட்சம் மக்கள் இல்லாமல் ஆக்கப்பட்டனர். பல ஆயிரம் மக்கள் போரில் படுகொலை செய்யப்பட்டார்கள். போர்க்களத்தில் சரணடைந்தவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

கையளிக்கப்பட்டவர்கள் காணாமல் ஆக்கப்பட்டார்கள். இவர்களுக்கான நீதியை வலியுறுத்தியே சிறிலங்கா சுதந்திர தினத்தில் தமிழர் தேசம் கிளர்ந்தெழுந்தது.

ஜனாதிபதி அநுரவை, ஊழலை ஒழிப்பவர் என்று அவரது ஆதரவாளர்கள் சொல்கின்றனர். ஆனால் படுகொலை ஊழலை இனவழிப்பு ஊழலை குறித்து மாத்திரம் அவர் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.

மிகவும் நல்ல ஜனாதிபதி என அநுரவை அவரது ஆதரவாளர்கள் சொல்கின்றனர். ஆனால் போராட்டத்தின்போது பெருந்துயரத்துடன் காணப்பட்ட தமிழ் மக்களின் நிலை கண்டு ஜனாதிபதி அநுரவின் மனம் மட்டும் கரையவில்லை என்பதுதான் பெரிய வேடிக்கை.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments