சர்வதேச சமூகம் மற்றும் இலங்கையின் அபிவிருத்திப் பங்காளிகள் ஆகிய அணிகளுக்குப் பிரித்தானியா தலைமைப் பாத்திரம் வகித்து, தமிழ் மக்களின் நியாயமான எதிர்பார்ப்புகள் நிறைவேற உதவிட வேண்டும் என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கைக்கான பிரிட்டன் தூதுவர் அன்றூ பற்றிக்குடன் நடைபெற்ற சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பில் மனோ கணேசன் எம்.பி. விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

மலையகத்தமிழர் 

குறிப்பாக, இன்றைய, அரசு முன்னேடுக்கும், 50 இலட்சம் ரூபா டித்வா மீள் கட்டுமான வீடமைப்பு மற்றும் காணி வழங்கல் ஆகிய அரச நிவாரணத் திட்டங்களில் பாதிக்க பட்டுள்ள மலையக மக்கள் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளார்கள்.

ஏனைய மக்களுக்கு வழங்கப்படும் டித்வா வீடமைப்பு நிவாரணங்கள் நமது மக்களுக்கு இல்லை. நாம் என்ன இந்தியப் பிரஜைகளா? இது இரண்டாம் தர இலங்கைக் குடியுரிமை இல்லையா? இது தென்னாபிரிக்காவில் காணப்பட்ட “அபார்தைட்” என்ற இன ஒதுக்கல் ஆகும் என்பதைப் பொறுப்புடன் கூறி வைக்க விரும்புகின்றேன்.

மேலும், இன்று மலைநாட்டில், காணியுரிமையை மறுத்து, தொடர்மாடி கட்ட இந்த அரசு இரகசிய திட்டம் தீட்டுகின்றது. காணி உரிமை மறுக்கப்படும் எந்த ஓர் அரச திட்டத்தையும் நாம் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. இவற்றுக்கு எதிராக நாம் மக்களை அணிதிரட்டிப் போராடுவோம்.

ஆகவே, மலையகத் தமிழருக்கு நியாயம் பெற்றுத் தருவதில், அவர்களின் குடியுரிமை முழு குடியுரிமையாக வழங்கப்படுவதில சர்வதேச சமூகம் மற்றும் இலங்கையின் அபிவிருத்திப் பங்காளிகள் ஆகிய அணிகளுக்கு பிரித்தானியா தலைமைப் பாத்திரம் வகிக்க வேண்டும் என நான் கோருகின்றேன்.

ஈழத்தமிழர்

ஜனாதிபதி அடிக்கடி வடக்குக்குப் போய் வருகின்றார். அங்கே பொங்கல் கொண்டாடுகின்றார். இளைஞர்களுடன் “செல்பி” எடுக்கின்றார். காலையில் நடை பயிற்சி செய்கின்றார்.

மக்களுடன் உரையாடுகின்றார். ஆனால் அங்கே தான் செய்து தருவதாக வாக்களித்த அனைத்தையும் காலவரையின்றி இன்று அவர் ஒத்திவைத்து விட்டார். உறுதியளித்த மாகாண சபைத் தேர்தல் இல்லை.

தமிழருக்கு தீர்வு கிடைக்க பிரிட்டன் உதவிட வேண்டும்! மனோ கணேசன் விடுத்துள்ள கோரிக்கை | Britain Help Tamils Find A Solution Mano Request

மாகாண சபை நிர்வாகம் ஆளுநர்கள் மூலம் நடத்தப்படுகின்றது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவோம் என்றார்கள். இன்று நீக்கம் இல்லையாம். இன்னொரு புதிய சட்டம் கொண்டு வர முயல்கின்றார்கள்.

காணி விடுவிப்பு நின்று போய் விட்டது. அரசியல் கைதிகளை விடுவிப்போம் என்றார்கள். இன்று எஞ்சியுள்ள 12 நீண்டகால அரசியல் கைதிகளை விடுவிக்க மறுக்கின்றார்கள்.

புதிய அரசமைப்பு பேச்சுகளை இதோ, அதோ, ஆரம்பிப்போம் என்றார்கள். அனைத்தும் அலங்கார வார்த்தைகளுடன் தொக்கி நிற்கின்றன.

ஆகவே, சர்வதேச சமூகம் மற்றும் இலங்கையின் அபிவிருத்தி பங்காளிகள் ஆகிய அணிகளுக்குப் பிரித்தானியா தலைமைப் பாத்திரம் வகித்து, தமிழ் மக்களின் நியாயமான எதிர்பார்புகள் நிறைவேற உதவிட வேண்டும் என நான் கோருகின்றேன் என்றுள்ளது.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments