யாழில் பலாலி காவல்துறையினரின் அட்டகாசம்: எல்லையைத் தாண்டி மக்கள் மீது தாக்குதல்யாழ்ப்பாணம் – சுன்னாகம் காவல் பிரிவிற்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன், ஈவினை பகுதியில் பலாலி காவல்துறையினர் எல்லை தாண்டி வந்து மக்களுடன் வன்முறையில் ஈடுபட்டதாகக் கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இலஞ்சம் பெறுவதற்காகவே இவ்வாறு எல்லை தாண்டி வருவதாகவும், சம்பவத்தின் போது காவல்துறையினர் மதுபோதையில் இருந்ததாகவும் பாதிக்கப்பட்ட பொதுமக்களால் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் இது குறித்துத் தெரிவிக்கையில், “நான் எனது வயலுக்கு அருகாமையில் உள்ள எனது காணியில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டுத் தொலைபேசியில் உரையாடிக்கொண்டிருந்தேன்.
மதுபான நிலையம்
அப்போது எனது காணிக்குள் அத்துமீறி நுழைந்த பலாலி காவல்துறையினர், நான் மதுபோதையில் இருப்பதாகத் தெரிவித்து முரண்பட்டதுடன், எனது ஆடையைக் கிழித்து வன்முறையில் ஈடுபட்டனர்.
இதன்போது நான் ஊர்மக்களைத் துணைக்கு அழைத்தவேளை, அவ்விடத்தில் நின்ற காவல்துறையினர் பலாலி காவல் நிலையத்திற்கு அழைப்பு மேற்கொண்டு ஏனைய காவல்துறை உத்தியோகத்தர்களையும் அந்த இடத்திற்கு வரவழைத்தனர்.

இதன்போது ஏனைய காவல்துறையினரும் அவ்விடத்திற்கு வந்து அட்டகாசம் செய்த வேளை, நாங்கள் அதனைக் காணொளியாகப் பதிவு செய்ய முற்பட்டபோது எங்களைக் காணொளி பதிவு செய்ய விடாமல் தடுத்தனர்.
சம்பவம் நிகழ்ந்த இடத்திற்குச் சற்று தொலைவில் ஒரு மதுபான நிலையம் உள்ளது.
காவல்துறை உத்தியோகத்தர்
அங்கு மதுபானம் பாவித்துவிட்டு வருபவர்களிடம் இலஞ்சம் பெறுவதற்காகப் பலாலி காவல்துறையினர் எல்லை தாண்டி வீதியில் வந்து நிற்பது வழமை.
இவ்வாறான பின்னணியிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றது. “இனிமேலும் பலாலி காவல்துறையினர் இவ்வாறு எல்லை தாண்டி வந்து எமக்குத் தொந்தரவு செய்யக்கூடாது.

இதற்கு உரிய அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் தகட்டு இலக்கமோ அல்லது பெயர்ப்பட்டியோ அணிந்திருக்கவில்லை என்பதுடன், மற்றைய காவல்துறை உத்தியோகத்தர் கைபேசி மூலம் தகட்டு இலக்கத்தை மறைத்திருந்ததை அவதானிக்க முடிந்தமை குறிப்பிடத்தக்கது.

