ஈரானில் பெண்கள் பாடசாலை மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆக உயர்ந்துள்ளதாக அல் ஜசீரா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஈரானின் ஹோர்மோஸ்கான் மாகாணத்தில் உள்ள மினாப் நகரில் பெண்கள் தொடக்கப்பள்ளி மீது நடத்தப்பட்ட தாக்குதலில் முதல்கட்டமாக 40 மாணவிகள் பலியானதாக அறிவிக்கப்பட்டது. மேலும் பலர் காயமடைந்துள்ளனர். தற்போது இந்த தாக்குதலில் பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆக உயர்ந்துள்ளது.
ஈரான் வெளியுறவு அமைச்சரின் பதிவு
ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி தாக்குதலின் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார், இது பெண்கள் பள்ளியை அழித்து “அப்பாவி குழந்தைகளை” கொன்றதாகக் கூறினார்.
“ஈரானிய மக்களுக்கு எதிரான இந்தக் குற்றங்களுக்கு பதில் கிடைக்காமல் போகாது” என்று அரக்சி X இல் ஒரு பதிவில் தெரிவித்துள்ளார்.
ஈரானின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் எஸ்மாயில் பகாயியும் “அப்பட்டமான குற்றத்தை” சாடி ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையிடம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்.
தலைநகர் தெஹ்ரானுக்கு கிழக்கே பாடசாலை ஒன்றின் மீது நடத்தப்பட்ட மற்றொரு இஸ்ரேலிய தாக்குதலில் குறைந்தது இரண்டு மாணவர்கள் கொல்லப்பட்டதாக ஈரானின் மெஹர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
