- ஹோர்மூஸ் நீரிணை அருகே அவ்வப்போது கப்பல்கள் மீது இரான் தாக்குதல்களை நடத்திய போதிலும், மார்ச் மாதத் தொடக்கத்திலிருந்து ஹோர்மூஸ் நீரிணை வழியாக 100க்கும் சற்று குறைவான கப்பல்கள் கடந்து சென்றுள்ளன என்று பிபிசி வெரிஃபை பகுப்பாய்வு செய்த தரவுகள் தெரிவிக்கின்றன.
உலகின் பரபரப்பான கப்பல் போக்குவரத்து பாதைகளில் ஒன்றான இதன் வழியாக இன்னும் சில எரிசக்தி மற்றும் அன்றாடப் பொருட்கள் கொண்டு செல்லப்பட்டாலும், பிப்ரவரி 28 அன்று இரான் போர் தொடங்கியதிலிருந்து தினசரி போக்குவரத்து சுமார் 95% குறைந்துள்ளது.
கூட்டு கடல்சார் தகவல் மையத்தின் கூற்றுப்படி, போருக்கு முன்பு ஒரு நாளைக்கு சுமார் 138 கப்பல்கள் இந்த நீரிணை வழியாகச் சென்றன. இது உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் ஐந்தில் ஒரு பகுதியை சுமந்து சென்றது.
கப்பல் போக்குவரத்து பகுப்பாய்வு நிறுவனமான கெப்லர் வழங்கிய தரவுகள், இந்த மாதத்தில் இதுவரை 99 கப்பல்கள் மட்டுமே இந்த குறுகிய நீரிணையைக் கடந்துள்ளதை காட்டுகின்றன. இது ஒரு நாளைக்கு சராசரியாக 5 முதல் 6 கப்பல்கள் மட்டுமே ஆகும்.
இந்த பயணத்தை மேற்கொள்ளும் கப்பல்கள் மற்றும் அவை எதிர்கொள்ளும் அபாயங்கள் குறித்து பிபிசி வெரிஃபை ஆய்வு செய்தது.

எந்தெந்த கப்பல்கள்
சமீபத்தில் இந்த பாதையைக் கடந்த கப்பல்களில் மூன்றில் ஒரு பங்கு இரானுடன் தொடர்புடையவை என்று பகுப்பாய்வு சுட்டிக்காட்டுகிறது.
இதில் இரானில் பதிவு செய்யப்பட்ட14 கப்பல்களும், இரானின் எண்ணெய் வர்த்தகத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்பட்டு தடைகளை எதிர்கொள்ளும் பிற கப்பல்களும் அடங்கும்.
ஒன்பது கப்பல்கள் சீனாவுடன் தொடர்புடைய முகவரிகளைக் கொண்ட நிறுவனங்களுக்குச் சொந்தமானவை, அதே சமயம் ஆறு கப்பல்கள் இந்தியாவைத் தாங்கள் சேருமிடமாகக் குறிப்பிட்டுள்ளன
