மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலில், ஈரானிய அரசாங்கத்தை முற்றாக வீழ்த்துவதையும் அந்த நாட்டின் கட்டமைப்பை நிலைகுலையச் செய்வதையுமே இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது முதன்மை இலக்காகக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஈரானுக்கு எதிரான இந்தப் போரை இஸ்ரேலின் மிக முக்கியமான போர் என வர்ணித்துள்ள நெதன்யாகு, தனது அரசியல் வாழ்வின் எதிர்காலத்தை இந்தப் போரின் வெற்றியிலேயே தங்கியிருக்கச் செய்துள்ளார்.

ஈரானில் எவ்வாறான குழப்பநிலை ஏற்பட்டாலும் அதைப் பற்றிக் கவலைப்படாமல், அங்குள்ள தற்போதைய ஆட்சி அதிகாரத்தை அகற்றுவதே அவரது நோக்கமாக உள்ளதாகவும் அல்ஜெஸீரா செய்திகள் தெரிவித்துள்ளன.

நெதன்யாகுவின் கட்சியைச் சேர்ந்த அரசியல் ஆலோசகர்கள், ஈரானுக்கு எதிராக ‘ஹிரோஷிமா மற்றும் நாகசாகி’ (Hiroshima and Nagasaki models) போன்ற தாக்குதல் மாதிரிகளைப் பயன்படுத்துவது குறித்துப் பேசி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஈரானை முற்றாக நசுக்குவது மற்றும் அந்நாட்டின் மின்சார விநியோகக் கட்டமைப்பு உள்ளிட்ட முக்கிய இடங்களைத் தகர்ப்பதற்கான இலக்குப் பட்டியலை இஸ்ரேல் ஏற்கனவே தயார் செய்துள்ளதாகவும் அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன், ஈரானுடன் எவ்வித உடன்படிக்கையையும் செய்துகொள்ள வேண்டாம் என நெதன்யாகு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பிற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

ஈரானிய அரசாங்கம் முழுமையாகச் சரணடையாத எந்தவொரு ஒப்பந்தமும் சரியானதாக இருக்காது என்பதே நெதன்யாகுவின் நிலைப்பாடாக உள்ளது.

அமெரிக்க ஜனாதிபதியின் பச்சைக்கொடிக்காக இஸ்ரேலியப் படைகள் தற்போது காத்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இஸ்ரேலுக்குள் இந்தப் போரினால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றிக் கவலைப்படாமல், ஈரானை வீழ்த்துவதில் நெதன்யாகு மிகத் தீவிரமாக ஈடுபட்டுள்ளமை சர்வதேச மட்டத்தில் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments