2026 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் அனைத்து தமிழ் பேசும் மக்களும் ஈழத்து மக்களாக ஒன்றிணைந்து அன்றைய துயர நாளை நினைவுகூர வேண்டும் என அருட்பணி சின்னத்துரை லியோ ஆம்ஸ்ரோங், அழைப்பு விடுத்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தில் நேற்றையதினம்(24.04.2026) கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.  

மக்களுக்கு விடுக்கப்பட்ட அழைப்பு

அவர் மேலும் தெரிவித்ததாவது,

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பின் சார்பில், கடந்த 2009 மே 18 தமிழ் இன அழிப்பு நாளை நினைவுகூரும் வகையில் 2026 மே 18ஆம் நாள் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் திடலில் மீண்டும் ஒன்று கூட இருக்கின்றோம்.

இந்த நிகழ்வில் கட்சி, மதம், பிரதேசம் போன்ற குறுகிய மனப்பான்மைகளை கடந்து, ஈழத்து மக்களாக ஒன்றிணைந்து அன்றைய துயர நாளை நினைவுகூர வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும், நினைவேந்தல் நிகழ்வுகளின் ஆரம்பமாக எதிர்வரும் 12ஆம் திகதி மாலை 4 மணிக்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் திடலில் சிரமதானப் பணிகளும், முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வும் இடம்பெறவுள்ளது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிப்பு நாளில் தமிழ் மக்களுக்கு விடுக்கப்பட்ட அழைப்பு: லியோ ஆம்ஸ்ரோங் | Tamil People Should Unite Mullivaikkal Remembrance

அன்றைய தினத்திலே வடகிழக்கு சார்ந்து தேசிய சிந்தனையோடு இயங்குகின்ற சிவில் அமைப்புக்கள் மே 18 ஆம் நாள் பல்வேறு ஒத்துழைப்பை வழங்குகின்ற பிரதிநிதிகள்,  தாகசாந்தி களை முன்னெடுக்கின்றவர்கள் அனைவரையும் இந்த இடத்திலே அன்போடு அழைத்து நிற்கின்றோம்.

மேலும், வாரம் முழுவதும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வுகள் மூலம் இந்த நினைவேந்தலை இளைய தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் முயற்சிகளும் முன்னெடுக்கப்படவுள்ளது.

புலம்பெயர் தேசங்களில் வாழும் அத்தனை தமிழ் உறவுகளும் ஒன்றிணைந்து, மே 18ஆம் நாளை தமிழ் இன அழிப்பு நாள் என உலகிற்கு உரத்துச் சொல்ல வேண்டியதன் அவசியம் நமக்கு உள்ளது. 

இந்நிகழ்வில் உயிரிழந்த மக்களுக்காக அஞ்சலி செலுத்துவதோடு, தமிழர்களின் தேசிய நலன்கள் மற்றும் அபிலாசைகளை மீண்டும் வலியுறுத்தும் தருணமாக இது அமைய வேண்டும். இந்த ஆண்டும் பல சமூகங்கள், குழுக்கள், அமைப்புகள் ஒன்றிணைந்து ஒரே குடையின் கீழ் இந்த நினைவேந்தலில் பங்கேற்குமாறு அழைப்பு விடுப்புகிறேன் என்றார்

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments