தமிழ் தேசிய இனத்தின் உரிமைப் போராட்டம் இலங்கைத் தீவு சுதந்திரம் பெறும் முன்பிருந்தே ஏற்பட்டதொன்று.

ஜனநாயக ரீதியாக மிதவாத தலைமைகளால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தையும், உரிமைக் கோரிக்கைகளையும் தென்னிலங்கை ஆட்சியாளர்கள் கண்டு கொள்ளாததன் விளைவாக இளைஞர், யுவதிகள் ஆயுதமேந்த வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டது.

அதுவே 2009 வரையிலான 30 ஆண்டுகள் இந்த நாட்டில் இரத்த ஆறு ஓடுவதற்கும் காரணமாக அமைந்தது. தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக ஆயுத போராட்டம் இடம்பெற்ற காலப்பகுதியில் அந்த போராட்டத்தை ஒரு வலுவான போராட்ட அமைப்பாக முன்னெடுத்துச் சென்றதில் தமிழ் புலம்பெயர் மக்களுக்கும், அமைப்புக்களுக்கும் பெரும் பங்குண்டு.

பொருளாதார தடை

தென்னிலங்கை தமிழ் மக்களின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் பொருளாதார தடைகளை ஏற்படுத்தி அந்த மக்களின் வாழ்வாதாரத்தை பாதிப்புறச் செய்த போது அந்த மக்களை பொருளாதார ரீதியாக எழ வைத்ததில் புலம்பெயர் மக்களுக்கு பங்குண்டு.

அத்துடன் ஆயுதப் போராட்டத்திற்கு தேவையான ஆயுத தளபாடங்கள், மருந்துப் பொருட்கள் கூட புலம் பெயர் உறவுகளின் பங்களிப்பே எனலாம். அதனாலேயே தமிழ் மக்களின் உரிமை சார் ஆயுதப்போராட்டம் முப்படைகளையும் கொண்ட ஒரு கட்டமைப்பாக பரிணமித்தது.

தமிழ் தேசிய இனத்தின் கோரிக்கைகளை அடைய வலுப்பெற வேண்டி புலம்பெயர் சமூகத்தின் அழுத்தம்! | Diaspora Community To Strengthen Tamil Nation

இந்தநிலையில் 2009 மே 18 இற்கு பின்னரான காலப்பகுதியிலும் கூட புலம்பெயர் மக்கள் பலர் யுத்தத்தினால் தமது உடமைகள், உறவுகள் என எல்லாவற்றையும் இழந்து இனி வாழ முடியுமா என்ற ஏக்கத்துடன் இருந்த மக்களுக்காக பல்வேறுபட்ட வாழ்வாதார உதவிகளை வழங்கியுள்ளனர்.தற்போதும் பல்வேறு விதமாக வழங்கப்பட்டும் வருகின்றன.

இத்தகைய உதவிகள் சரியான முறையில் செல்கின்றதா என்ற கேள்வி இருக்கின்ற போதும், புலம்பெயர் மக்களின் உதவிகள் வடக்கு, கிழக்கு பகுதிகளுக்கு வந்து கொண்டிருப்பதை மறுத்து விட முடியாது. யுத்தம் முடிவடைந்து 17 ஆண்டுகள் கடந்த போதும் தமிழ் மக்களது அபிலாசைகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை.

அரசியல் கைதிகளின் விடுதலை என்பது இன்று வரை கேள்விக்குறியாகவே உள்ளது. அதுபோல் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி, நில அபகரிப்பு, பௌத்தமயமாக்கல் என தமிழ் மக்கள் தினமும் எதிர்நோக்கும் பிரச்சினைகள் ஏராளம்.

ஐ.நா மனித உரிமை பேரவை

போர்க்குற்றம், அரசியல் தீர்வு, பொறுப்புக் கூறல் ஆகிய விடயங்களில் சர்வதேச சமூகத்தையும், ஐ.நா மனிதவுரிமை பேரவையையும் ஆசுவாசப்படுத்த அரசாங்கம் முயற்சிகளை எடுத்திருக்கின்ற போதும் அது தமிழ் மக்களின் வாழ்வியலுடன் புரையோடிப்போயுள்ள பிரச்சினைகளை நிரந்தரமாக தீர்க்க உதவவில்லை.

இதனாலலேய தமிழ் மக்கள் தமது உரிமைக்காகவும், தமது அபிலாசைகளுக்காகவும், நீதிக்காவும், தமது வாழ்வுரிமைக்காகவும் தன்னெழுச்சியான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

தமிழ் தேசிய இனத்தின் கோரிக்கைகளை அடைய வலுப்பெற வேண்டி புலம்பெயர் சமூகத்தின் அழுத்தம்! | Diaspora Community To Strengthen Tamil Nation

குறிப்பாக காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி ஆரம்பிக்கப்பட்ட போராட்டங்கள் இன்று 3350 நாட்களைக் கடந்த போதும் அதற்கான உரிய பதில் இன்று வரை அரசாங்கத்தால் வழங்கப்பட்டவில்லை. காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் திறக்கப்பட்ட போதும் அது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளை திருப்திப்படுத்துவதாகவோ அல்லது அவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துவதாகவோ அமையவில்லை.

பாதிக்கப்பட்ட அந்த மக்களால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் கூட அந்த மக்களுக்கு தீர்வைப் பெற்றுக் கொடுக்க முனையவில்லை. அந்த மக்களின் போராட்ட களத்தில் மக்கள் பிரதிநிதிகளை காண்பது கூட அரிதாகவுள்ளது. இத்தகைய நிலையிலேயே மக்கள் விரக்தியுடன் போராடி வருகின்றனர்.

அரசாங்கத்தின் மீதும், தமது தலைமைகள் மீதும் நம்பிக்கையிழந்து போராடி வரும் மக்களுக்கு ஓரளவுக்கேனும் நம்பிக்கையூட்டும் ஒரு தரப்பாக புலம்பெயர் சமூகம் இருக்கின்றது.

கோரிக்கை

தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளையும், போராட்டங்களையும் புரிந்து கொண்டு தாம் வாழும் நாடுகளிலும் இத்தகைய போராட்டங்களை வலுச்சேர்க்கும் வகையில் கவனயீர்ப்பு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

மாவீரர் நாள், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல், தியாகதீபம் திலீபன் நினைவேந்தல், தியாக தீபம் அன்னைபூபதி நினைவேந்தல் போன்ற பல நிகழ்வுகளையும் நடத்தி வருகின்றனர். இதன்மூலம் இலங்கை தீவில் தமிழர் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை என்பதை சர்வதேச சமூகத்திற்கு தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றனர்.

தமிழ் தேசிய இனத்தின் கோரிக்கைகளை அடைய வலுப்பெற வேண்டி புலம்பெயர் சமூகத்தின் அழுத்தம்! | Diaspora Community To Strengthen Tamil Nation

இந்த நாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னர் கூட பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் தேசியக் கட்சிகள் ஒன்றுபட்டு தமிழ் மக்களது அபிலாசைகளை முன்னகர்த்த முடியாதுள்ளது. இதன்காரணமாக சர்வதேச இராஜ தந்திரிகளையும், சர்வதேச சமூகத்தையும் சரியாக கையாள தவறியிருக்கிறார்கள். இதனால் இலங்கை அரசாங்கத்திற்கு சர்வதேச அழுத்தம் குறைவடைந்துள்ளது.

இந்நிலையில் தமிழ் மக்களுக்கு இன்னும் பிரச்சினைகள் இருக்கின்றன என்பதை சர்வதேச சமூகத்திற்கு வெளிப்படுத்துவதில் ஈழத்தில் நடக்கும் தன்னெழுச்சியான மக்கள் போராட்டங்களும், புலம்பெயர் போராட்டங்களும் வலுச்சேர்த்துள்ளன.

குறிப்பாக கனடா, அவுஸ்ரேலியா, பிரான்ஸ், சுவிஸ், ஜேர்மனி, பிரித்தானியா, பெல்ஜியம், இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் வாழும் புலம்பெயர் தமிழ் மக்கள் முன்னெடுக்கும் ஈழத் தமிழ் மக்களின் நலன் சார்ந்த போராட்டங்கள் அந்நாடுகளின் கவனத்தையும் பெற்றுள்ளது.

புலம்பெயர் மக்கள் 

வெறுமனே போராட்டம் என்பதற்கு அப்பால் அந்நாடுகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்தும் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்குமாறு வலியுறுத்தி வருகின்றனர்.

பிரித்தானியாவில் நாடுகடத்த தமிழீழ அரசாங்கம், தமிழீழ சுயநிர்ணய அமைப்பு போன்ற பல அமைப்புக்கள் இத்தகைய செயற்பாடுகளை தீவிரமாக முன்னெடுத்துள்ளன.

தமிழ் தேசிய இனத்தின் கோரிக்கைகளை அடைய வலுப்பெற வேண்டி புலம்பெயர் சமூகத்தின் அழுத்தம்! | Diaspora Community To Strengthen Tamil Nation

புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழ் மக்களில் சிலர் அந்த நாட்டு அரசியல் கட்சிகளில் இணைந்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றும் உள்ளனர்.

இன்னும் பலர் அந்த நாட்டு கட்சிகளுக்கு வாக்களித்தும் வருகின்றனர். இத்தகைய சந்தர்ப்பங்களின் போதும் ஈழத்தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் அங்குள்ள கட்சிகளின் ஊடாக அந்நாட்டு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க கூடிய ஒரு நிலை உருவாகியிருக்கிறது.

இதனை புலம்பெயர் சமூகம் சரியாக கையாள வேண்டும். வெறுமேனே ஒரு தினத்தில் ஆர்ப்பாட்டம் என்பதற்கு அப்பால் சர்வதேச ரீதியில் இலங்கை அரசிற்கு அழுத்தத்தை கொடுக்கும் வகையில் புலம்பெயர் தமிழ் மக்களின் நடவடிக்கைகள் வலுப்பெற வேண்டும்.இதன் மூலமே இலங்கை அரசாங்கத்தை தமிழ் மக்களின் நலன்சார்ந்து சிந்திக்க கூடிய ஒரு நிலையை உருவாக்க முடியும்.

அதுவே ஈழத்தில் நடக்கும் போராட்டங்களை நிறைவுக்கு கொண்டு வரவும் உதவும். எனவே, யுத்தம் நடைபெற்ற காலத்தில் புலம்பெயர் சமூகம் தனது பொறுப்பை எவ்வாறு செய்ததோ அதேபோல் தற்போதைய நிலையிலும் மேய்ப்பர் அற்ற மந்தைகளாகவுள்ள தமிழ் மக்களின் உரிமைக்காக வலுவான அழுத்தத்தை கொடுக்க முன்வரவேண்டும்.

தற்போது முன்னெடுக்கும் செயற்பாடுகள் மேலும் வீரியம் பெற்று ஜனநாயக ரீதியாக உரிமைக் குரல் வலுவடைய வேண்டும். இதை புலம்பெயர் மக்கள் உணர்ந்து செயற்பட முன்வரவேண்டும்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments