விடுதலைப் புலிகளின் எழுச்சிப் பாடலைப் பாடினார் என்ற குற்றச்சாட்டில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கிளிநொச்சியைச் சேர்ந்த சொல்லிசை கலைஞர் சங்கீதன் சார்பில், உடனடியாக உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றைத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் அறிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சொல்லிசை கலைஞர் சங்கீதனை இன்று(04.06.2026) நேரில் சென்று பார்வையிட்ட பின்னர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மனு தாக்கல் செய்யுமாறு கோரிக்கை

கிளிநொச்சியைச் சேர்ந்த இளம் சொல்லிசை கலைஞரான சங்கீதன், அண்மையில் விடுதலைப்புலிகளின் பாடலொன்றை மீளுருவாக்கம் செய்து பாடினார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

தாயக எழுச்சிப் பாடலால் எழுந்த சர்ச்சை..! மனித உரிமை அடிப்படையில் மனு தாக்கல் செய்யுமாறு சுமந்திரன் கோரிக்கை | Controversy Over Song In Jffna Boy Arrest

இவருக்கு எதிராகப் பயங்கரவாதத் தடைச் சட்டம் பிரயோகிக்கப்பட்டு, தற்போது யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இலக்கிய, கலை வெளிப்பாட்டுச் சுதந்திரங்களுக்கு எதிராக இத்தகைய கடுமையான சட்டங்கள் பிரயோகிக்கப்படுவது சட்டவல்லுநர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இன்று(04) யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்குச் சென்ற ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன், கலைஞர் சங்கீதனை நேரில் சந்தித்து அவரது நிலைமைகள் குறித்துக் கேட்டறிந்துள்ளார்.

அத்துடன், இந்த கைது நடவடிக்கை ஒருவருடைய அடிப்படை வெளிப்பாட்டுச் சுதந்திரத்தை மீறும் செயல் என்பதைச் சுட்டிக்காட்டிய சுமந்திரன், இதற்கு எதிராக மிக விரைவில் உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றைத் தாக்கல் செய்யவுள்ளதாக ஊடகங்களிடம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments