உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் எந்தவொரு காரணத்திற்காகவும் நிறுத்தப்படக் கூடாது என இலங்கைக் கத்தோலிக்க திருச்சபை வலியுறுத்தியுள்ளது.

கொழும்பு பேராயர் இல்லத்தில் நேற்று (08) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட கொழும்பு பேராயர் இல்லத்தின் ஊடகப் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி இதனைத் தெரிவித்தார்.

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே, தனது நற்பெயருக்கு பங்கம் விளைவித்ததாகக் கூறி அருட்தந்தை சிறில் காமினிக்கு எதிராக அவதூறு வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.

அந்த வழக்கை சமரசம் செய்து முடிக்குமாறு சுரேஷ் சலே தன்னிடம் கோரிக்கை விடுத்ததாகவும், எனினும் அதற்கு தாம் இணங்கவில்லை என்றும் அருட்தந்தை தெரிவித்தார். வழக்கின் ஆரம்பகட்ட விசாரணைகள் நிறைவடைந்த பின்னர், நீதிமன்ற வளாகத்திலேயே சுரேஷ் சலே தம்மை நேரில் சந்தித்து பேசியதாகவும் அவர் கூறினார்.

தனது பெயரை பாதுகாக்கும் நோக்கிலேயே வழக்கு தொடரப்பட்டதாகவும், இருதரப்பும் சமரசத்திற்கு வர முடியும் என்றும் சுரேஷ் சலே தெரிவித்ததாக அருட்தந்தை குறிப்பிட்டார்.

அப்போது, தனது அறிக்கைகளில் இருந்து சுரேஷ் சலேயின் பெயரை நீக்குமாறு அவர் கோரியதாகவும், ஆனால் வெளியிடப்பட்ட அறிக்கைகள் உண்மையின் அடிப்படையில் செய்யப்பட்டவை என்பதால் அவ்வாறு செய்யத் தேவையில்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்ததாகவும் அருட்தந்தை சிறில் காமினி கூறினார்.

தாம் வெளியிட்ட தகவல்களில் இன்னும் நம்பிக்கை கொண்டிருப்பதாகவும், வழக்கை சமரசம் செய்யாமல் நீதிமன்றத்தின் மூலம் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லத் தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், சுரேஷ் சலே கைது செய்யப்பட்டமை மற்றும் அவருக்கு எதிரான விசாரணைகள் ஒரு விடயம் என்றும், அவதூறு வழக்கு முற்றிலும் வேறுபட்ட சட்ட நடவடிக்கை என்றும் அருட்தந்தை சுட்டிக்காட்டினார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னால் ஏதேனும் சதி இருந்ததா, அது அரசியல் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டதா மற்றும் அதன் சூத்திரதாரிகள் யார் என்பதைக் கண்டறிவது பாதிக்கப்பட்ட மக்களின் உரிமையாகும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

எனவே, இந்த விசாரணைகளில் எந்தவொரு அரசியல் கட்சியோ அல்லது அரசியல்வாதிகளோ தலையிடக் கூடாது என்றும், உண்மையை வெளிக்கொணரும் நடவடிக்கைகள் தடையின்றி தொடர வேண்டும் என்றும் அருட்தந்தை சிறில் காமினி மேலும் தெரிவித்தார்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments