மாகாண சபை தமிழ் மக்களுக்கு தீர்வு அல்ல, சமஸ்டி  தீர்வே எமது நிலைப்பாடு என்று  சட்டத்தரணியும், முன்னாள் யாழ்ப்பாணம்  மாநகர முதல்வரும்,  தமிழ் மக்கள் கூட்டணியின் துணைப்  பொதுச் செயலாளருமான  விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

வடமராட்சியில் ஊடகவியலாளர்கள் மாகாண சபை தேர்தல் தொடர்பில் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும்போதே  இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மாகாண சபை தேர்தல் ஒத்திவைக்கப்பட  முடியாது. உடனடியாக நடத்தப்பட வேண்டும்.  2018 ஆம் ஆண்டு வடக்கு மாகாண சபை பதவியை இழந்திருந்தது. 2017 கிழக்கு மாகாண சபை பதவியை இழந்திருந்தது

கிட்ட தட்ட 6 ஆண்டுகளுக்கு மேலாக மாகாண சபை தேர்தல் நடத்தாமல்  அரசாங்கங்கள் வேண்டுமென்றே இழுத்தடிப்பு செய்து வருகிறது. 

அவர்களைப் பொறுத்தவரையில் இந்த நாடு ஒற்றை ஆட்சிக்குள்ள இருக்க வேண்டும்.  இந்த நாட்டிலே அதிகாரம் சற்று கூட பகிரக்கூடாது.  அதிலும் விசேஷமாக தமிழ் மக்கள் தங்களுடைய எந்தவொரு  பிராந்தியத்தின் மீது தங்களுடைய ஆளுமையை அல்லது தங்களுடைய ஆட்சியை செயற்படுத்த  கூடாது என்பதில் அவர்கள்  மிகத் தெளிவாக இருக்கிறார்கள்.

அந்த அடிப்படையில் தான் இந்த மாகாண சபை தேர்தல்கள் மாறி மாறி வந்த எல்லா  அரசாங்கங்களாலும்  இழுத்தடிப்பு செய்யப்படுகிறது.

2018 ஆம் ஆண்டிலேயே ஆட்சியில் இருந்தது  மைத்திரிபால சிறிசேனா ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான கூட்டாட்சி.  அந்த அரசாங்கம் வேண்டுமென்று செய்த சதியினாலே இந்த தேர்தல் பொறிமுறையை இல்லாமல் செய்து இன்று இந்த தேர்தல்  நடைபெறாமல் இருக்கிறது. 

ஆகவே என்னைப் பொறுத்தமட்டில் 13வது திருத்தச் சட்டத்தில் எதுவுமே இல்லை என்பதை நான் 100 வீதம் ஏற்றுக் கொள்கிறேன்.
13-வது திருத்தச் சட்டம் எங்களுக்கு தீர்வு இல்லை என்பதையும்  நான் 100 வீதம்  ஏற்றுக் கொள்கிறேன். 

தமிழ் மக்களுக்கு சமஸ்டி அடிப்படையிலான ஒரு தீர்வு திட்டம் முன்வைக்கப்பட வேண்டும் என்பதில் நாங்கள் தெளிவாகவும் உறுதியாகவும் இருக்கின்றோம்.
ஆனால் மாகாண சபை தேர்தலை வைக்க வேண்டிய கடப்பாடு அரசாங்கத்திற்கு இருக்கிறது.

அந்த தேர்தலை கட்டாயமாக வைக்கப்பட வேண்டும் என்பது என்னுடைய நிலைப்பாடாக இருக்கிறது.  நான் சொல்லவில்லை மாகாண சபை எங்களுக்கு போதும். 

மாகாணசபையோடு எங்களுடைய உரிமை போராட்டத்தை முடித்துக் கொள்ளலாம் என்று ஒருபோதும் சொல்லப் போவதில்லை சொல்லவுமில்லை.

ஆனால் அரசியல் அமைப்பில் இருக்க கூடிய ஒரு  பொறிமுறையை  இயங்க வைக்கப்பட வேண்டும்.  அந்த ஜனநாயக பொறிமுறையை இயங்க வைக்கப்பட வேண்டியது கட்டாயத் தேவை. ஆகவே மாகாண சபை தேர்தல் கட்டாயமாக  வைக்கப்பட வேண்டும் என்பதை நான் ஆணித்தரமாக கூறிக் கொள்ள விரும்புகிறேன் என்றார்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments