பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மை இந்துக்கள் இந்தியாவுக்குச் செல்வதை விட, பாகிஸ்தானிலேயே தொடர்ந்து வசிப்பதற்கு விரும்புவதாக அந்த நாட்டு ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானின் சுதந்திர தின விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றிய அவர் “இந்தியர்கள் ‘அகண்ட பாரதம்’ என்ற எண்ணத்தை நம்புகிறார்கள். ஆனால் நாங்கள் சகிப்புத்தன்மை கொண்ட மனப்பான்மையைக் கொண்டவர்கள். பாகிஸ்தானில் 4 சதவீதம் இந்துக்கள் வாழ்கின்றனர்.

உலகளாவிய ரீதியில் மற்ற இடங்களில் இருப்பதைப் போலவே அவர்களும் இங்குச் சுதந்திரமாகவே வாழ்கின்றனர். இதனால் அவர்கள் இந்தியாவுக்குச் செல்வதை விடவும் பாகிஸ்தானிலேயே வாழ விரும்புவார்கள்.

பாகிஸ்தானில் உள்ள இந்துக்களுக்கு, தங்களது மதத்தைப் பின்பற்றுவதற்கு முழுமையான சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானியர்களுக்கும் இந்தியர்களுக்கும் இடையே பல்வேறு கண்ணோட்ட வேறுபாடுகள் உள்ளன.

நாங்கள் போரை விரும்பவில்லை; அமைதியையே விரும்புகிறோம். ஆனால் அமைதிக்கான எங்களது விருப்பத்தைப் பலவீனமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. நீர் வளங்கள் மீதான உரிமைகள் உட்படத் தனது தேசிய நலன்களைப் பாதுகாப்பதில் பாகிஸ்தான் உறுதியாக உள்ளது.

சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா ஒருதலைப்பட்சமாக இடைநிறுத்தியுள்ளது. பாகிஸ்தானின் ஒவ்வொரு சொட்டு நீரும் எங்களது சிவப்புக் கோடு என்பதைத் தெளிவாக அறிவிக்க விரும்புகிறேன்” என்றார்.

அத்துடன், பிராந்திய மற்றும் உலகளாவிய அமைதிக்கு ஒரு பொறுப்பான நாடாகவும், ஸ்திரத்தன்மையை உருவாக்கும் சக்தியாகவும் பாகிஸ்தான் தொடர்ந்து செயற்படும் என்றும் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி தனது உரையில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments