அமெரிக்க கடல்சார் ஆணைக்குழுவின் தலைவர் லாரா டிபெல்லா மற்றும் ஆணையாளர் ராபர்ட் ஜே. ஹார்வி ஆகியோர் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தோ – பசுபிக் பிராந்தியத்தில் கடல்சார் வர்த்தகம், முதலீடு மற்றும் கப்பல் போக்குவரத்து இணைப்புகளை வலுப்படுத்தும் நோக்கில் இன்று (06) வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விஜயத்தின் போது, இரு தலைவர்களும் அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகளையும் கடல்சார் துறை தலைவர்களையும் சந்தித்து இருதரப்பு கலந்துரையாடல்களில் ஈடுப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
எரிக் மேயர் தெரிவிப்பு
மேலும், கொழும்பில் நடைபெறவுள்ள 8வது சர்வதேச கடல்சார் மற்றும் மூலோபாய மாநாட்டில் அமெரிக்க கடல்சார் ஆணைக்குழுவின் தலைவர் டிபெல்லா சிறப்புரையாற்றவுள்ளார்.

Advertisement
கொழும்பு துறைமுகம் வழியாகச் செல்லும் கொள்கலன்களில் 80 சதவீதத்திற்கும் அதிகமானவை உலகின் பல்வேறு பகுதிகளுக்குத் தொடர்ந்து பயணிக்கின்றன என்றும், இது இந்தியப் பெருங்கடல் கப்பல் போக்குவரத்தில் இலங்கையின் முக்கிய பங்கை மிகத் தெளிவாகக் காட்டுகிறது என்றும் அமெரிக்க தூதுவர் எரிக் மேயர் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பான மற்றும் திறமையான கப்பல் போக்குவரத்து அமெரிக்க வணிகங்களுக்குப் புதிய வாய்ப்புகளை உருவாக்குவதோடு, பிராந்திய மையமாக இலங்கையின் நிலையை வலுப்படுத்தி, இரு நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கும் வழிவகுக்கும் என்றும் இவ்விஜயத்தை சுட்டிக்காட்டி அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க கடல்சார் ஆணைக்குழு
1961-இல் நிறுவப்பட்ட அமெரிக்க கடல்சார் ஆணைக்குழு, அமெரிக்காவின் சர்வதேச கடல்சார் போக்குவரத்து அமைப்பைக் கண்காணித்து ஒழுங்குபடுத்தும் ஒரு சுதந்திரமான அமைப்பாகும்.

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினால் பரிந்துரைக்கப்பட்டு, செனட் சபையின் ஒப்புதலுடன் கடந்த ஜனவரி மாதத்தில் தலைவராகப் பொறுப்பேற்ற லாரா டிபெல்லா, முன்னர் புளோரிடா மாநிலத்தின் முதல் பெண் வர்த்தகச் செயலாளராகவும் பெர்னாண்டினா துறைமுக இயக்குநராகவும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.
Advertisement
அவருடன் வருகை தரும் ஆணையாளர் ராபர்ட் ஜே. ஹார்வி, அமெரிக்க கடற்படையின் முன்னாள் சட்ட ஆலோசகராகவும், சர்வதேச கடல்சார் சட்டம் மற்றும் கடல்சார் தொழில்நுட்பங்களில் நிபுணத்துவம் பெற்றவராகவும் திகழ்கிறார்.
அமெரிக்க ஏற்றுமதியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்களின் நலன்களைப் பாதுகாக்கவும், சர்வதேச கடல்சார் வர்த்தகத்தில் நியாயமற்ற நடைமுறைகளைத் தடுக்கவும் இந்த விஜயம் முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
