சிங்கள இராணுவத்திடம் அவர் சலண்டர் அடைந்தது முதலில் அவரை வெட்டி சித்திரவதை செய்யப்பட்டது பின் உயிரோடு பெற்ரோல் ஊத்தி எரிக்கப்பட்டார் . அவரின் மகன் பாலகுமார் கண்முன்னே சுட்டுக் கொல்லப்பட்டார் உறுதிப்படுத்தியவர் இராணுவச்சிப்பாய்.
நான் எழுதி வைத்துள்ள துன்பியல் நினைவுகளில் பாலகுமாரன் அண்ணாவினதும் மகனினதும் இழப்பின் பெருந்துயர்
காணாமலாக்கப்பட்டோர் வரிசையில் பாலகுமாரன் அண்ணாவும் மகனும்…..பாலகுமாரன் அண்ணாவும் முன்னர் ஒரு அமைப்பின் தலைமைத்துவத்துக்குரியவர். ஒரு தலைமைத்துவத்துக்குரியவர் அந்த தலைமைத்துவத்தை துறந்து முற்றிலும் இன்னொரு தலைமைத்துவத்தின் கீழ் சென்று வாழ்வது சாதாரண விடயமில்லை. ஆனால் இவர் அவ்வாறு தனது வாழ்வியலில் இன உணர்வுடன் சென்று வாழ்ந்திருக்கிறார்

எனக்கு முன்பு இவரை தெரியாது. எனது கணவரே இவர்களை அறிமுகம் செய்து வைத்தார். பாலகுமார் அண்ணாவும் அன்ரியும் எனது கணவரில் மிக நேசமுடையவர்களாக இருந்தனர். அப்போது ஒருநாள் நாம் அவர்களின் வீட்டுக்கு சென்று வரும்போது தான் ரேகா சொல்லிக்கொண்டுவந்தார் . இன்னொரு அமைப்பின் தலைவராக இருந்தும் தன்னுடன் வந்து சேர்ந்தமையால் அண்ணை அவருக்கென்று ஒரு தனிமரியாதை கொடுத்து வைததுள்ளார். அதனால் தான் அவர் ஒரு சிரேஸ்ட தலைமையாக அதற்குரிய செயற்பாட்டுடன் அவரது சேவைகளை வழங்க ஒழுங்கு செய்துள்ளார் என ரேகாசொன்னார். இன உணர்வுடன் அவர் செய்துவிட்ட சேவைகள் பல .இவர்களுடைய பிள்ளைகள் நாம் அனைவரும் ஒரு நெருக்கமான உறவை பேணி வந்தோம். முன்பு மகள் பாடசாலையில் மிகச்சிறந்த கெட்டிக்காரி. ஆண்மகன் போலத்தான் மகளையும் வளர்த்தார் .ரேகாவிற்கு மகளில் விருப்பம் .அன்ரி சமைக்கும் உணவுகளில் ரேகாவிற்கு பிடித்தது கீரைப்பிட்டு. அன்ரி ஒரு தாதியாக இருந்தவர்: பாலகுமார் அண்ணா அரசியல் கதைக்கும் போது நான் கேட்டுக்கொண்டிருப்பதுண்டு. அதில் ஒரு ஆழமான முதிர்ச்சி தெரியும். ஒருநாள் நாம் அங்கு சென்ற போது என்னிடம் சில புத்தகங்களை எடுத்து தந்தார் .இதனை வாசியுங்கள். அத்தனையும் மிகவம் காத்திரமான விடயங்களாக இருந்தது. நான் அதில் ஒரு புத்தகத்தை எனக்காக வீட்டுக்கு கொண்டு வந்ததும் எனக்கு நினைவிருக்கிறது. ஏனெனில் நான் அவர் கதைத்த மிகுதி விடயங்களை அதில் கற்றுக்கொள்வதற்கு மிக ஆர்வமாக இருந்தேன். அவருடன் அறிவுபூர்வமான பல விடயங்களை உரையாட முடியும்
நான் அப்போது மிக மெலிவாக இருந்தேன். அதற்கு அன்ரியும் பாலகுமார் அண்ணாவும் கண்டிப்புதான் . எனது கணவரிடம் தமது வீட்டில் கொண்டு வந்து விட்டால் தான் எனது உடல்நிறையை அதிகரிக்கவைத்து அனுப்புவதாக சொல்வதுண்டு. இவ்வாறு நினைவுகள் பலவற்றை எழுதிக்கொண்டே செல்லலாம் .அன்ரியும் மகிழினியும் எமது நாட்டில் இல்லை. பின்னர் ஒரு தடவை அன்ரி வந்திருந்தார்; அன்ரியை நான் வவுனியாவில் ஒரு தடவை கண்டேன். பாலகுமார் அண்ணாவையும் மகனையும் காணவில்லை என தேடுவதாக சொன்னா. தனது கணவரையும் மகனையும் பறிகொடுத்த அன்ரி என்னை கண்டவுடன் அழுதிருந்தா. அது எனக்கும் துன்பத்தை கொடுத்தது.

மகிழினி தனது தந்தையின் பிறந்ததினத்தன்று எழுதிய இந்த வரிகளை நான் முகப்புத்தகம் ஒன்றில் கடந்த காலங்களில் படித்திருந்தேன். அதனை பதிவிடுகிறேன். ஒவ்வொரு பிள்ளைகளினதும் மனதின் வலி ஆழப்புதைந்துள்ளது. இழப்புக்களுக்கு எதனை கொடுத்தும் நிவர்த்தி செய்ய முடியாது. அதனை வாசிக்கும்போது வலிக்கவே செய்தது . தந்தையினதும் தனது அண்ணாவினதும் நினைவுடன் மகிழினி அப்போது எழுதிய வரிகளை வாசித்துவிட்டு கவனமாக எடுத்துவைத்தேன் .
“நீங்கள் உடனில்லாததால் எதிர்கொண்டவற்றையெல்லாம் தனித்து எதிர்கொள்ள பழகிவிட்டேன் அப்பா. இனி நீங்கள் கவலை கொள்ள ஏதுமில்லை. என் பெயரில் உள்ள மகிழ்வை என் கண்களில் என் எதிரில் நீங்களாக அண்ணாவாக பார்த்துணர முடியாமல் போனது தான் என்னுள் ஆறாத வலியை விதைத்துகொண்டே இருக்கும். இது எனக்கு மட்டுமான துயரமில்லை ஒரு இனத்துக்கானது என்பதை உணர்ந்தே எனை நானே தேற்றிக்கடக்கிறேன்.
“எனை உந்துசெலுத்தும் விசை உங்களிடத்திலன்றி வேறெங்கிலும் அறியேன்”
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அப்பா.
மகிழினி பாலகுமாரன்
