ஒற்றைப் பாலனடி – கிளியே

உயிரும் போனதடி!

பஞ்சு முகம்வாடப் பாலகனைத் தீயவர்கள்

நெஞ்சில் குண்டேற்றிக் – கிளியே

நினைத்தால் வலிக்குமடி!

அம்மா எனக்கதறி அஞ்சியவன் நிற்கையிலே

கும்மியாடிச் சுட்டாரடி – கிளியே

கொடுமை மிகுந்ததடி!

உண்ண உணவின்றி ஓடிவந்த பிள்ளையினை

விண்ணில் சேர்த்தார் – கிளியே

வேதனை ஆகுதடி!

பிஞ்சுப் பாலகனைப் பேய்கள் சூழ்ந்துநின்று

வஞ்சித்தே கொன்றாரே – கிளியே

வையம் அழுகுதடி!

கண்கள் பயத்தாலே கலங்கித் தவித்தவனைப்

புண்கள் செய்தாரே – கிளியே

பூமி துடித்ததடி!

ஆயுதங்கள் ஏந்தாத அண்ணன் மகவினைத்

தீயுமிழ்ந்து சுட்டாரே – கிளியே

தீமை வென்றதடி!

தந்தை முகம்மறந்து தாயைத் தொலைத்தவனைச்

சிந்தை கெட்டுநின்ற – கிளியே

சிங்களப்பேய் தின்றதடி!

வெள்ளை மனமுடைய வேங்கை இளங்கன்றைக்

கொள்ளி வைத்தவர் – கிளியே

கொள்கை அழித்தாரே!

ஈழத் தமிழ்நிலத்தின் இளைய நிலவினை

வீழச் செய்தாரே – கிளியே

விம்மி அழுவோமடி!

காக்கிச் சீருடைகள் கவ்விப் பிடித்தவனைத்

தூக்கி எறிந்தாரே – கிளியே

துயரம் வாட்டுதடி!

சித்திரமே போன்றவனைச் சிங்களம் சிதைக்கையிலே

நித்திரையைப் போலவன் – கிளியே

நிலத்தில் கிடந்தானே!

நாளை வருமென்று நம்பி நின்றவனை

வேளை அறிந்து – கிளியே

வேதனை செய்தாரே!

பாலகன் என்றேனோ பாவிக்குத் தெரியவில்லை

ஞாலம் அழுததடி – கிளியே

நியாயம் செத்ததடி!

புலிக் குருளையினைப் புல்லர் படைவளைத்து

பலியெடுத் தனரடி – கிளியே

படுபாவிக் கூட்டமடி!

சாகும் தருணத்திலும் சாட்சிக்கு ஆளின்றி

வேகும் மனமுடனே – கிளியே

வெம்பித் துடித்தானடி!

© ×+ வன்னியூர்ப் பூங்குழலி..✍🏻 – படைப்புரிமை எனக்கே உரித்தானது.

(காக்கிச் சீருடை- அதிகாரவர்க்கம்)

ஆக்கம் வன்னியூர் பூங்குழலி 

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments