மூத்த அரசியல் ஆய்வாளர் சி.அ. ஜோதிலிங்கம் ஐயா காலமானார் என்ற செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தமிழ் தேசிய அரசியலின் முன்னணி கோட்பாட்டாளரும், மூத்த அரசியல் ஆய்வாளரும், சட்டத்தரணியுமான சி.அ. ஜோதிலிங்கம் காலமானார்.
தமிழ் தேசிய இனத்தின் மீதான தீராத பற்றும் தளராத நம்பிக்கையும் கொண்டு மக்களின் அரசியல் விழிப்புணர்விற்காகத் தனது இறுதி மூச்சு வரை தடையின்றிப் பயணித்தவர் சட்டத்தரணி சி.அ. ஜோதிலிங்கம்.
எமது இனத்தின் அரசியல் சித்தாந்தத்தை மக்கள் மத்தியில் ஆழமாக வேரூன்றச் செய்ய வேண்டும் என்பதில் தீவிர முனைப்புடன் இயங்கிய இவர், ஓய்வுநிலை ஆசிரியராகவும் மக்கள் பணியாற்றியுள்ளார்.
வயிற்றுப் பகுதியில் ஏற்பட்ட கட்டியொன்றை அகற்றுவதற்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு நீண்ட அறுவைச் சிகிச்சையின் பின்னர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையிலேயே அவர் சிகிச்சை பலனின்றி காலமானார்.
தமிழ் ஊடகங்களில் தொடர்ச்சியான நேர்காணல்கள் மற்றும் கூர்மையான அரசியல் பகுப்பாய்வுகள் மூலம் சிக்கலான சர்வதேச மற்றும் இலங்கை அரசியல் சூழல்களை மிகத் தெளிவான தத்துவச் செறிவோடு தமிழ் பேசும் உலகிற்கு எடுத்தியம்பியதில் இவரது பங்களிப்பு மிகச் முதன்மையானது.
ஈழத்தமிழ் தேசிய சிந்தனைத் தளத்திலும் கோட்பாட்டு ஆய்விலும் ஈடுசெய்ய முடியாத பெரும் வெற்றிடத்தை விட்டுச்சென்றுள்ள மூத்த அரசியல் ஆய்வாளர் சி.அ. ஜோதிலிங்கத்தின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
