முல்லைத்தீவு, புதுமாத்தளன் பகுதியில் இருந்து கடற்றொழிலுக்குச் சென்று காணாமல் போயுள்ள மூன்று மீனவர்களையும் தேடுவதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.

குறித்த மீனவர்கள் நேற்று (26) காலை 7.30 மணியளவில் MLT/1742 என்ற இலக்கமுடைய படகில் தூண்டில் தொழிலுக்காகக் கடலுக்குச் சென்ற நிலையில், இதுவரை கரை திரும்பவில்லை.

மூன்று மீனவர்கள் மாயம்; ரவிகரன் எம்.பி. அவசர கோரிக்கை | Three Fishermen Go Missing Mp Raviharan Request

இதுவரை கரை திரும்பவில்லை

இவ்வாறு காணாமல் போயுள்ளவர்கள் புதுமாத்தளனைச் சேர்ந்த அன்ரனி ஜூட், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஸ்ரீபுஸ்பராசா மற்றும் மன்னாரைச் சேர்ந்த முகம்மட் ரிஸ்வான் ஆகியோராவர்.

சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்ததையடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் இன்று (27) குறித்த பகுதிக்கு நேரடியாகச் சென்று நிலைமைகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்டார்.

இதன்போது, கடல் கொந்தளிப்பாகக் காணப்படுவதால், காணாமல் போன மீனவர்களைத் தேடி ஏனைய மீனவர்களும் கடலுக்குச் செல்வது பாதுகாப்பற்றது என அனர்த்த முகாமைத்துவப் பிரிவினர் அறிவுறுத்தியுள்ளதாக அப்பகுதி மீனவர்கள் அவரிடம் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து, பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கடற்றொழில் அமைச்சருக்கு இவ்விடயம் தொடர்பில் தகவல் வழங்கியதுடன், முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் மற்றும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவினருடனும் தொலைபேசி மூலம் கலந்துரையாடினார்.

இதன்போது, காணாமல் போன மீனவர்கள் தொடர்பான தகவல்கள் கடற்படை மற்றும் கரையோரப் பாதுகாப்புப் படையினர் உள்ளிட்ட உரிய தரப்பினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களைத் தேடுவதற்கான நடவடிக்கைகளுக்கு உதவி கோரப்பட்டுள்ளதாகவும் முல்லைத்தீவு மாவட்டச் செயலாளரும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவினரும் பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரனுக்கு தெரிவித்துள்ளனர்.

காணாமல் போன மூன்று மீனவர்களையும் விரைவாகக் கண்டறிவதற்கு உரிய தரப்பினர் துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments