கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இன்று (28) பிற்பகல் இங்கிலாந்தின் லண்டன் நகர் நோக்கிப் புறப்பட்ட ஸ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான UL-503 என்ற Airbus A330 ரக விமானம், புறப்பட்ட சிறிது நேரத்திலேயே பறவை மோதியதால் மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்திலேயே அவசரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளது.

குறித்த விமானம் இன்று பிற்பகல் 12:55 மணிக்கு லண்டன் நோக்கிப் புறப்பட்டிருந்ததாக ஸ்ரீலங்கன் விமான சேவையின் நிறுவனத் தொடர்பாடல் பிரிவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

விமானத்தில் 269 பயணிகளும் 15 பணியாளர்களும் இருந்துள்ளனர்.

பறவை மோதியதைத் தொடர்ந்து, விமானி வான்வெளியிலேயே நிலைமையைக் கட்டுப்படுத்தி, விமானத்தை மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்திற்குப் பாதுகாப்பாகத் தரையிறக்கினார்.

தரையிறக்கப்பட்டதைத் தொடர்ந்து, பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு அவர்களுக்குத் தேவையான உபசரிப்புகளை வழங்க ஸ்ரீலங்கன் விமான சேவை நடவடிக்கை எடுத்தது.

பின்னர், அந்தப் பயணிகளை வேறொரு விமானம் மூலம் இங்கிலாந்தின் ஹீத்ரோ (Heathrow) விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பாதிப்புக்குள்ளான விமானம் தற்போது பழுதுபார்க்கும் பணிகளுக்காக அனுப்பப்பட்டுள்ளதாக விமான நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments