இலங்கையில் இந்து ஆலயங்கள் மற்றும் தமிழர்களின் பாரம்பரிய கலாச்சார அடையாளங்கள் பௌத்த மயமாக்கப்படுவது தொடர்பில் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் எடுத்துரைத்துள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லியில் நிர்மலா சீதாராமனைச் சந்தித்துப் பேசியபோதே, இலங்கையின் வடக்கு, கிழக்கில் உள்ள இந்து மத மற்றும் கலாச்சார அடையாளங்கள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள் குறித்து சுட்டிக்காட்டியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக, குருந்தூர் மலை, வெடுக்குநாறி மலை, திருக்கோணேஸ்வரம் மற்றும் கன்னியா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள இந்து மரபுரிமைத் தளங்கள் தொல்லியல் திணைக்களத்தின் பெயரில் பௌத்த மயமாக்கப்படுவதாகவும், இதனால் பாரம்பரிய சைவ அடையாளங்கள் பாதிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், பௌத்த விகாரைகள் அமைப்பதற்காக இந்தியா வழங்கும் நிதியுதவிகள், தமிழ் மக்களின் அடையாளம் மற்றும் இருப்பைப் பாதிக்கும் வகையில் பயன்படுத்தப்படக்கூடாது எனவும் நிர்மலா சீதாராமனிடம் வலியுறுத்தியதாகக் கூறியுள்ளார்.

இதற்குப் பதிலளித்த இந்திய நிதியமைச்சர், இந்தியாவின் நிதியுதவிகள் தமிழ் மக்களின் அடையாளத்திற்கோ அல்லது இந்து மதத்திற்கோ பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் பயன்படுத்தப்படுவதை அனுமதிக்கப் போவதில்லை என உறுதியளித்ததாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இந்த விவகாரம் தொடர்பில் இந்தியப் பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஆகியோரிடமும் நேரடியாக எடுத்துரைப்பதாக நிர்மலா சீதாராமன் உறுதியளித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கையின் அரசியல் தீர்வு தொடர்பிலும் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ள கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ஒற்றையாட்சியின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் 13ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யாது எனத் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை உறுதிப்படுத்தும் வகையில் கூட்டாட்சி அடிப்படையிலான அரசியல் தீர்வே அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், வடக்கு மற்றும் கிழக்கில் நில அபகரிப்பைத் தடுப்பது, அரசியல் கைதிகளை விடுதலை செய்வது உள்ளிட்ட வாக்குறுதிகளை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இதுவரை நிறைவேற்றவில்லை எனவும் அவர் விமர்சித்துள்ளார்.

தமிழ் மக்களின் உரிமைகள் மற்றும் அரசியல் தீர்வு தொடர்பான விடயங்களில் இந்திய மத்திய அரசாங்கத்துடன் நேரடியாகத் தொடர்புகளைப் பேணுவது அவசியம் என்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேலும் தெரிவித்துள்ளார்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments