துடைத்துத் துப்பரவாக்கப்பட்ட
விளக்கு
பளிச்சிடுகிறது – என்
உணர்வுகளுக்கு முரணாக.
மாவீரர்களை வழிபட
நானும் விளக்கும் தயார்!!
கார்த்திகை மாத
கார்கால மேகம்போல
இருண்டு கிடக்கும் என் மனதில்
பல்லாயிரம் எண்ணவோட்டங்கள்!
எந்த வீட்டில் எப்போது
அழுகுரல் எழுமென்று
தெரியாத போர்ச்சூழலில்
பிறந்து வளர்ந்தவர்கள்….
வயதில் இளையவர்கள் இவர்கள்.
ஆனாலும்…
பயம் இவர்கள் பக்கம் வந்ததில்லை.
இறப்பிற்கு அஞ்சாமல்
சமராடி எங்கள்
இதயம் நுழைந்தவர்கள்
இந்த வீரச் செல்வங்கள்!!
இவர்களால் மட்டும்
எப்படி முடிந்தது?
இள ரத்தம்… சூடாகத்தான் இருக்கும்.
அதற்காக…
தம்மையே கொடுக்கத் துணிவார்களா?
தன் குடும்பம்.. தன் சுற்றம்..
தன் ஊரவர் என்று
பொத்தித்தானே வளர்த்தோம்..?
எல்லோருக்குமாக தமைக்கொடுக்கும்
உயரிய பண்பை
தானைத் தலைவன் கொடுத்தானா? – இல்லை

சீண்டச் சீண்ட
மண்புழுவும் எதிர்க்கும்
என்பார்களே… – அதுவா?
எதுவாக இருந்தாலும்
தன் சாவுக்கு நாள்குறித்து..
போர்க்களம் புகுந்த – எங்கள்
புதல்வர்களே! புதல்வியரே!
உங்களைக் கொடுத்து
எத்தனை இலட்சம் மக்களைக் காத்தீர்?
ஈடில்லா உங்கள் ஈகத்திற்கு
தலை வணங்குகிறோம்!!
நாள் தோறும் இறைவனுக்கு
ஏற்றும்
விளக்கை விடவும்
கார்த்திகை 27 இல் ஏற்றப்படும்
விளக்கு
சக்தி வாய்ந்தது..! – அது
அத்தனை தமிழர் உள்ளங்களையும்
உறுதியாக்குவது…! நம்பிக்கை தருவது..!!
இழந்த இடத்திலேயே
திரும்பவும் தேடச் செய்வது!!
வீரச் செல்வங்களே….!
அரசு மாற்றம்… அரசியல் மாற்றம்… என
தாகத்தில் தவிக்கும் தமிழனுக்கு முன்
கானல்நீர் கனக்க தோன்றலாம்!
தாகத்தில் பலர் அதை
தண்ணீராக கருதலாம்!
நெடுநாள் நிலைக்காது – இந்த
நிலைமை மாறும் – அப்போது
நிலவரம் புரியும்!
நீங்கள் விதைக்கப்பட்டது
தமிழர் மனங்களில்.
விதையானோர் தியாகம்
வீணாகித்தான் போகுமா…?
வீரச் செல்வங்களே!
விலைமதிப்பில்லா வழிகாட்டிகளே!!
கார்த்திகை 27
உங்களை வணங்கும் நாள் மட்டுமல்ல
எங்களுக்கு நாங்களே
உறுதி பூணும் நாள்!
கடந்தகால தவறுகளை
திருத்தி… புதுப்பித்து
மீண்டும் விடியல் நோக்கி
பயணிக்க
உறுதிபூணும் நாள்!!
உறுதியெடுப்போம்….!
வடிவம் மாறலாம்.. விடியல் பிறக்கும்
நிச்சயமாக!!
-பொழில்


