*கவிதை *
27,11,2026,,மாவீரர் நினைவின் போது ,

தமிழீழக் கனவு சுமந்து – தரணியிலே
தமிழ் மண்ணின் மானம் காத்திட
தங்களின் இன்னுயிரை ஈந்து
சரித்திர நாயகர்களாய்
விழி மூடி உறங்கும் மாவீரர்களே
உம்மை நினைத்து இந்நாளில்
அஞ்சலித்து நிற்கின்றோம்.

அண்ணனோடு உடன் நின்று
கடமைகளைத் தோளில் சுமந்து
இலட்சியக் கனவு சுமந்த தலைவனுடன் உயிரைக் கொடுத்து உறங்கா மனிதராகிய
கல்லறைப் புஸ்பங்கள்.

தேசத்தைக் காத்து நின்ற
தன்மான வேங்கைகள்
முப்பத்து மூன்று ஆண்டுகளாய்
தமிழருக்காய் தங்களை அர்ப்பணித்து
விழி மூடிய வீரமறவர்கள்.

தாயகக் கனவு சுமந்த வரிப்புலிகள்
தளராத சேவை புரிந்த வல்லவர்கள்
தமிழீழத்தைக் காத்து நின்ற தேசப்புயல்கள்
தளர்வறியா நெஞ்சோடு – என்றும் தமிழீழ மண்மீட்பிற்காய் உதிர்த்தவர்கள்

வித்துடலாய் விதைக்கப்பட்டவர்கள் இன்று எல்லோர் மனங்களிலும் இருளகற்றி
ஒளியாகி சுடர் விடுகின்றனர்,மாவீரராகி வணக்கப்பட்டவர்கள்
வாகை சூடி தமிழர் தேசமெங்கும்
மங்கா ஒளியாய் நின்றனர்.
அவர்களின் நினைவுகள் என்றும் எம்முடன் வேரூன்றி…நிற்கின்றன…
கல்லறை மீது மலர் தூவி அஞ்சலி செய்கின்றோம்

அன்புடன் சக்தி

