தமிழீழ விடுதலைப் புலிகளின் வரலாற்று ஆவணத்தொகுப்பு
பாகம் மூன்றின் இரண்டாவது தொடர்

இதே காலப் பகுதியில் மட்டக்களப்பில் நடந்த தனது ஆரம்பப்பயிற்சி பற்றியும், அங்கே நடந்த பதில் தாக்குதல் பற்றியும், போராளி இரட்ணம் குறிப்பிடுகையில்….! 1986- 5ம் மாதம் அளவில் இருநூற்று நாப்பது இளைஞர்கள் கிழக்கு மாகாணத்தில் இருந்து விடுதலைப் புலிகளிடம் பயிற்சிக்காகச் சென்றோம். அதில் நானும் ஒருவராகச் சென்றேன். மாவடி ஓடை மேற்பகுதி கெவர் மலைக் காட்டுப் பகுதியில் அப்பயிற்சி முகாம் அமைந்து இருந்தது.
அது மட்டு 7 ஆவது பயிற்சி முகாம் என எங்களிடம் சொல்லப்பட்டது. மெயின் பொறுப்பாக போராளி காந்தன் இருந்தார். பயிற்சி முகாம் பொறுப்பாக மேஜர் குலதீபன் இருந்தார். எமக்கான உடல் பயிற்சியை குலதீபன் செந்தில் இருவரும் தந்தார்கள். எங்களிற்கான போராட்டப் பாடங்களை காந்தன், குலதீபன் மற்றும் சர்வோதயன் மூவரும் மாறி, மாறித் தந்தார்கள். எங்களிற்கான சூட்டுப் பயிற்சியை மேஜர். குலதீபன் நேரடியாகக் கண்காணித்தார்.அதில் பயிற்சி எடுத்தவர்கள் அமிர் தவறுதலான வெடி விபத்தின் போது வீரச்சாவு அடைந்தார். அதில் பயிற்சி எடுத்த டக்ளஸ், லெப் நிவாஸ். இவர்கள் விரச்சாவு அடைந்தனர். மற்றும் மணலாற்றுக் காட்டிற்குள் நாப்பது அடிக் கிணறு கட்டிக்கொண்டு இருந்தவேளை அகற்ற முடியாத ஒரு கற்பாறை வந்தது. அதை அகற்றுவதற்காக வெடிமருந்து வைக்கப்பட்டது. அந்த வெடிமருந்து அவரைத் தாக்கி கடுமையான மூச்சுத் திணறலில் இருந்து அடுத்த நாள் வீரச்சாவு அடைந்தார். அதே பயிற்சி முகாமில் பயிற்சி எடுத்த நிக்கிளஸ் அவார். இவரின் வித்துடல் உதைய பிடத்தில் விதைக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சி முகாம் நடப்பதற்கு இரவு பகலாகத் தலையில் சாமான் சுமந்து இப்பயிற்சி நடப்பதற்கு கடுமையாக உழைத்தவர்களை அவர் குறிப்பிடும்போது கண் கலங்கி விட்டார். அவர்களின் பெயர் வேந்தன், ரமேஸ், உமேஸ், வசந்தன், இவர்களே! அப்பயிற்சி முகாமின் நிர்வாக வேலைகளைச் செய்துள்ளனர்.
அடுத்து அவர் பங்குபற்றிய சண்டை பற்றிக் குறிப்பிடுகையில்.
1986/ 6 மாதம்அகத்தி அண்ணையின் தலைமையில் முப்பது போராளிகளும், குலதீபனின் தலைமையில் பதினைந்து போராளிகளும், மொத்தம் 45 பேர் கொண்ட அணி தாக்குதலிக்காகச் சென்றது. அங்கே சென்று அம்பாறையில் கரும்புத் தோட்டத்தில் இருந்த இராணுவம் மற்றும் ஊர்காவல் படையினர் என இருவரும் நிலை கொண்டு இருந்த முகாம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அது இரவு 1.30 மணியளவில் நடத்தப்பட்டது. அதில் 11 படை யினர் கொல்லப்பட்டனர். அதில் றிப்பீட்டர 3, 5 சொற்கண் என்பன எடுக்கப்பட்டது. அதில் எம்மவர்களிற்கு எவ்விதமான சேதமும் ஏற்படவில்லை என அவர் குறிப்பிட்டார் .
1986 /10 மாதம் மேஜர் ௹பன் தலைமையில் பதினைந்து பேர் கொண்ட அணி சென்று மயிலவட்டுவான் சிவத்தப் பாலத்தில் ரோந்து சென்ற படையினருக்கு 7.30 காலை நடாத்திய தாக்குதலில் 3 இராணுத்தினர் கொல்லப் பட்டனர் . 3 T56 ஆயுதம் எடுக்கப்பட்டது. அதில் எமது தரப்பில் 3 போராளிகள் காயம் அடைத்தனர். விஜி, உமேஸ், அடுத்து. இன்னொரு போராளியும் வீரச்சாவு அடைந்தார்; என அதில் பங்குபற்றிய இரட்ணம் குறிப்பிட்டார். வடகிழக்கில் பல இடங்களில் இப்படியான தாக்குதல்கள் நடந்தன.இதில்வரும் பேர்களில்இரட்னம் மற்றும் மூத்த போராளி காந்தன் இருபரும் இப் புத்தகம் எழுதும் காலத்தில் உயிரோடு இருந்துள்ளர், ஏனையவர்கள் வீரச்சாவு அடைந்துள்ளார்கள்,
இதே காலத்தில் தான் பெண்களிற்கான இரண்டாவது பயிற்சி முகாம் சாவகச் சேரிப்பகுதியில் நடந்தது. அதை போராளி தீபா தலைமை தாங்கி நடத்தினார்.

இந்தப் பயிற்சி முகாமில்தான் பொட்டு அம்மானின் சகோதரி இயக்கப் பெயர் கப்டன் அருந்ததி சொந்தப் பெயர் சிவரஞ்சினி சன்முகநாதன் நாயன்மார்க்கட் யாழ்ப்பாணம் என்ற இவரும் பயிற்சி எடுத்தார் பொட்டுஅம்மான் போன்று உயிரமான இவர் அகன்ற விளியும் பார்ப்பவரை கவரக்கூடிய உடலமைப்பைக் கொண்டவர், அதை விட சிறந்த பலசாலியும் ஆவர், அப்பயிற்சி முகாமில் திறமையான முறையில் பயிற்சி எடுத்து வெளியேறிய அருந்ததி இந்திய இராணுவத்தின் பல முற்றுகையில் இருந்து தனது திறமையான செயல்பாட்டால் வெளியேறி தன்னைப் பாதுகாத்துக்கொண்டவர், என்பதும் குறிப்பிடத்தக்கது அத்தோடு யாழில் நடைபெற்ற இந்திய இராணுவத்திற்கு எதிரான பல தாக்குதல்களிலும் பங்குபற்றியுள்ளார், பின்னர் இவருக்கு என்ன நடந்தது என விரிவாகப்பார்ப்போம்,
இதேகாலப்பகுதியில் ஆண் போராளிகளிற்கான “கலிபோனியா1/ 2” என பெயர் வைத்து கிட்டு அண்னையால் பல பயிற்சி முகாம்கள் வடக்கில் நடைபெற்றது. கலிபோனியா 01 தொடர்பாக அதின் நிர்வாக வேலைகளில் ஈடுபட்ட போராளி ரஞ்சித் குறிப்பிடுகையில் இப்பயிற்சி முகாம் தொண்டமணாற்றில் 82 போராளிகளேடு ஆரம்பம் ஆனது தளபதி கிட்டு அண்ணையின் ஒழுங்குபடுத்தலில் மேஜர் பசிலன் அவர்கள் பொறுப்பாக நின்றார், அவர்களின் உடல் பயிற்சிகளை போராளி(டம்டம் ) வழங்கினார் அவர்களிற்கான போராட்டக்கல்வியை தளபதி செல்வராசா மற்றும் கிட்டு அவர்களும் வழங்கினார்கள் ,
இதில் பயிற்சி எடுத்தவர்கள் கட்டச்சுவாகி, மதன், ரொபின், குட்டி உட்பட 82 போராளிகள் பயிற்சி எடுத்தார்கள் இது ஒரு இடத்தில் இல்லாமல் கிளாலி மற்றும் கிழமைக்கு கிழமை இடம் மாறி மாறி இப்பயிற்சி முகாம் நடைபெற்றது, இதில் பயிற்சி எடுத்த கனிசமான போராளிகள் இந்திய இராணுவத்தினருடன் நடைபெற்ற சண்டையில் வீரச்சாவு அடைந்துள்ளனர், என அவர் குறிப்பிட்டார், இருந்தும் பலர் வீரச்சாவு அடைந்தமையால் அத்தகவலைப் பெற முடியவில்லை. மட்டக்களப்புப் பகுதியில்1தொடக்கம் 6 ஆவதுபயிற்சி முகாம் வரை நடைபெற்றது. அடுத்து வவுனியா சேமமடுவிலும் பல பயிற்சி முகாம்கள் நடைபெற்றது.அடுத்து மன்னார் மற்றும் திருமலையிலும் சில பயிற்சி முகாம்கள் நடைபெற்றது. இது இப்படி இருக்க, கிட்டண்ணையின் காலத்தில் தான் லெப்.கேணல் விக்டர் தலைமையிலான குழு அடம்பனில் சண்டையிட்டது.இதில்வரும் பேர்களில் போராளி ரஜ்ஜீத் மற்றும் மூத்த பெண் போராளி தீபா இருவரும் இப்புத்தகம் எழுதும் காலத்தில் உயிரோடுயிருந்துள்ளனர்,
இதைப்பின்னர் பார்க்கலாம் என குறிப்பிட்டிருந்தேன் இனி விரிவாகப் பார்ப்போம்
12.10.1986 அடம்பன் நகருக்குள் முன்னேறிய இராணுவதுடன் தாக்குதல்.
விக்டரின் அஞ்சாமையையும், சீறிப்பாயும் துப்பாக்கி சன்னங்களுக்கு மத்தியிலும் நிதானமாக நகரும் அவனின் வேகத்தையும், அந்த நேரம் இருந்த போராளிகளுக்கு அடையாளம் காட்டியது திருநெல்வேலி தபாற்பெட்டி சந்தியில் 1983யூலை 23ல் சிங்கள இராணுவத்துக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட தாக்குதல் ஆகும். எக்ஸ்புளோடருக்கு தொடர்பு கொடுக்கும் வேலையை செல்லிக்கிளி அம்மான், அப்பையா அண்ணை ஆகியோருடன் இணைந்து செய்து முடித்தவன் விக்டர்.விக்டர் அமைப்பில் இணைந்த பிறகு மன்னார் பகுதியில் நிகழ்ந்த தாக்குதல்களில் அநேகமாக அனைத்திலும் விக்டரின் நேரடி பங்களிப்பும் விக்டரின் எம்16 கிறனைற் செலுத்தியின் வெடிப்பும் இருந்தே இருக்கும்.
மன்னார் பொலிஸ்நிலையம் மீதான தாக்குதலில் விக்டருடன் குமரப்பா போன்றோர் இணைந்திருந்தாலும் கூட அந்த தாக்குதலுக்கான திட்டமிடல், ஒருங்கிணைப்பு என அனைத்தையும் அற்புதமாக் கையாண்டவன் விக்டர்.விடுவிக்கப்பட்ட மன்னார் நிலப்பகுதியில் விக்டர் பயிற்சி முகாம்களையும் உருவாக்கி ஏராளமான புதிய போராளிகளைத் தாய் மண்ணிலேயே உருவாக்குவதிலும் முனைப்புடன் செயற்பட்டவன். அப்படியான ஒருபொழுதில் 12.10.1986 அன்று அதிகாலையில் அடம்பன் நகருக்குள் ராணுவம் நுழைந்துவிட்டதாக் கிடைத்த தகவலை அடுத்து கருக்காய்க் குளத்தினூடாகவும், ஆண்டான்குளப் பகுதியாலும், நாயாற்று வெளிக்குள்ளாக தாமரைக்குளத்தினூடாகவும் அடம்பனுக்குள் விக்டரின் தலைமையில் ஆண் போராளிகளுடன் முதல் முதலாக பெண் போராளிகளையும் கூட்டிக் கொண்டு விக்டர் வேகமாக களமுனைக்குப் செல்கின்றான்,
நாயாற்று வெளிக்குள்ளாக தாமரைக்குளம் கடந்து அடம்பனுக்குள் நுழைந்த சாஜகானின் அணியில் பெண்களிற்கான தலைமையாக ஜெனனி, வனிஐா உட்பட சுமார் 15 பெண் போராளிகள் அவரோடு சென்றார்கள்.

அடுத்த அணி சுமன் தலைமையில் அதில் பெண்களிற்கான தலைமையாக தீபா, மதி, ஜெயா, இவர்களின் தலைமையில் 15 பெண் போராளிகள் சென்றார்கள். அதில் விக்டரின் வழிகாட்டலில்தான் முதலில் பெண்புலிகள் எதிரிக்கு எதிரான சண்டையில் நின்றனர்.அவர்களின் முதலாவது சண்டையாக தமிழீழ வரலாற்றில் அது பதிவானது.சண்டை தொடங்கிவிட்டது விக்ரர் அவர்களின் கட்டளையால் வோக்கி அலறியது கெலியை இறக்கவிடாதே இறங்கிய கெலியை எழும்ப விடாதே சுட்டு விழுத்து என பலமான கட்டளையை விக்ரர் வழங்கிக் கொண்டிருந்தார், பெண் போராளிகள் மிக உச்சாயமாகச் சண்டையிட்டுக் கொண்டு சென்றார்கள், ஒன்பது இராணுவ வீரர்கள் விடுதலைப் புலி வீரர்களின் தாக்குதலில்அவ்விடத்திலே கொல்லப்பட்டார்கள், இரண்டு இராணுவச் சிப்பாய்கள் விடுதலைப் புலிகளால் கைது செய்யப்பட்டனர்
இது இப்படி பேரளிச்சியாக நடந்து கொண்டிருக்க செத்தவர்களையும் விட்டுக்கு இராணுவம் ஓட ஆரம்பித்துவிட்டது கள நிலவரம் வெற்றியீட்டிக் கொண்டு சென்றவேளையில் எங்கயோ இருந்து வந்த உலங்குவானூர்தியின் துப்பாக்கிச் சூடு விக்ரர் அவர்களின் நெஞ்சுப்பகுதியை துளை இட்டுச் சென்றதால்அந்த வீரனின் குரல் ஓய்ந்தது

அடுத்துகள முனையில் நின்ற விக்ரர் அவர்களிற்கு அடுத்த நிலையில் இருந்த தளபதிகள் விக்ரர் அவர்களின் வித்துடல் மற்றும் களமுனையில் கைது செய்யப்பட்ட இரண்டு இராணுவச் சிப்பாய்கள் தொடர்ந்து ஒன்பது இராணுவத்தின் உடல்கள் சண்டையில் கைப்பற்றப்பட்ட ஆயுதங்களையும் எடுத்துக்கொண்டு யாழ்ப்பாணம் செல்கின்றார்கள் போராளிகள், அங்கே சென்றதும் அதைத் தளபதி கிட்டு அவர்களிடம் ஒப்படைக்கின்றார்கள்கள்
கிட்டு அவர்கள் நல்லூர் பின் விதியில் பெரிய கொட்டில் ஒன்று அடித்து அதில் சிறைபிடிக்கப்பட்ட இரண்டு இராணுவத்தினரும் ஒன்பது இராணுவத்தினரின் உடலங்களும் பொதுமக்கள் காட்சிக்கு வைக்கின்றார். புலிகளால் சிறைப்பிடிக்கப்பட்ட இராணுவத்தினர் இருவரும் புலிகள் தங்களை கொல்லப் போகிறார்கள் என்ற பயத்தில் அழுது குழறிக் கொண்டே இருக்கிறார்கள் இது இந்தப் பக்கம் நடக்க லெப்ரின் கேணல் விக்ரர் அவர்களின் வித்துடல் சேஜ்சில் மக்கள் பார்வைக்க வைக்கப்பட்டுள்ளது லட்சக்கணக்காண மக்கள் பார்வையிட்டுக் கொண்டிருக்கின்றார்கள் இளைஞர்கள் சேச்சிக்கு மேல் கூரையில் ஏறி ஓட்டைக் களட்டி அவரின் வித்துடலை பார்வையிடுகின்றார்கள், இது இப்படி மக்கள் எழுச்சியாக நடந்து கொண்டிருக்க சிங்களப் பெற்றோர்கள் என்ன மன நிலையில் இருப்பார்கள் என்பதை தளபதி கிட்டு அறியாதவர் அல்ல அதனால் எப்படியாவது இவர்களின் உடலை அவர்களின் பெற்ரோர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என கிட்டு அண்ணை பல முயற்சிகளை மேற்கொள்கின்றார்,12 ஒக்டோ1986
அடம்பனில் எடுத்த இராணுவ வீரர்களின் பொடிக்கு என்ன நடந்தது அச்சண்டையில் சம்மந்தப்பட்ட போராளி குறிப்பிடுகையில்,
முதல் நடவடிக்கையாக யாழ் கோட்டையில் நிலைகொண்டிருந்த இராணுவத்தின் தளபதியான கப்டன் கொத்தலாவலவுக்கும், மும்மொழிகளிலும் பரிச்சயமான புலிகளின் இராணுவப் பேச்சாளர் ரஹீமிற்கும் இடையில் தொலைபேசி தொடர்பாடல்கள் இடைக்கிடையே இடம் பெற்றுக் கொண்டிருந்தன.
யாழ் வைமன் வீதியில் இருந்த டொக்டர் ஒருவரின் வீடு அப்போது புலிகளின் பாசறையாக இருந்தது. அந்த வீட்டில் இருந்த தொலைபேசியே இந்த சம்பாஷணைகளிற்குப் பயன்பட்டது. விடாமல் அழுது புலம்பிக் கொண்டிருந்த இரு சிங்கள இராணுவத்தினரின் ஆக்கினை தாங்க முடியாமல், அவர்களின் அழுகையை நிறுத்த, புலிகளின் ரஹீம் கப்டன் கொத்தலாவலவிற்கு நல்லூரடியில் இருந்த மூத்த அரசியல்வாதியொருவரின் சகோதரியின் வீட்டில் இருந்து தொலைபேசியில் அழைப்பெடுக்கிறார். கப்டன் கொத்தலாவல சிறைபிடிக்கப்பட்ட இராணுவத்தினருக்கு ஆறுதல் கூறிவிட்டு, ரஹீமிடம், கைப்பற்றப்பட்ட இராணுவத்தின் சடலங்களை என்ன செய்யப் போகிறீர்கள் என்று பேச்சுவாக்கில் கேட்கின்றார்
.”உங்களுக்கு வேணும் எண்டா கொண்டு வந்து தாறன்” என்று ரஹீமும் சும்மா பகிடியாகவே சொல்ல, கப்டன் கொத்தலாவல சுதாரித்துக் கொண்டு, தன்னுடைய மேலதிகாரியை கேட்டு விட்டு வருகிறேன் என்கிறார். கப்டன் கொத்தலாவலவின் மேலதிகாரி கேணல் ஆனந்த வீரசேகர.விடம் கேட்ட பின்னர் அதைக் கோட்டைக்குள் கொண்டு வந்து தருமாறு கேட்கின்றார், அவரின் வேண்டுகோலை கிட்டு அண்ணையும் வர வேற்கின்றார் சரியாக பிற்பகல்ஆறுமணியளவில் சடலங்களை கோட்டை இராணுவ முகாம் வாசலில் கொண்டு வந்து தந்தால் தாங்கள் அவற்றை பொறுப்பேற்பதாக கப்டன் கொத்தலாவல ரஹீமுக்கு மீண்டும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அறிவிக்கிறார்.
கோட்டைக்கு சென்று சடலங்களை ஒப்படைப்பது தேவையில்லாத வேலை என்றும், இதில் நிறைய ஆபத்துக்கள் இருப்பதாக புலிகள் முதலில் கருதுகிறார்கள். புலிகளை கிட்ட அழைத்துக் கொலை செய்து பழி தீர்க்க இராணுவம் தீட்டியிருக்கும் சதித் திட்டமாகவே இதனை புலிகள் முதலில் நோக்குகிறார்கள். அப்படியானால் தான் தனி ஒருவனாகவே சென்று அந்த ஒன்பது சடலங்களையும் இராணுவத்திடம் ஒப்படைக்க முன்வருவதாக, ரஹீம் கிட்டுவி்ற்குத் தெரிவிக்கிறார்.அந்தக் காலப்பகுதியில் புலிகளின் பிரச்சார முகமாக செயற்பட்ட ரஹீமை சிறைபிடிக்கும் இராணுவத்தின் சதித்திட்டமாக இந்த சடலங்கள் ஒப்படைப்பு அமைந்துவிடும் என்று புலிகளின் இளநிலைத் தலைவர்கள் தளபதி கிட்டுவை எச்சரிக்கிறார்கள்
.தளபதி கிட்டு ரஹீமிடம் மீண்டும் பேசுகிறார், இந்த முயற்சியில் இருக்கும் ஆபத்து கிட்டுவிற்கு நன்றாக புரிந்திருந்தது. ரஹீமோ மனிதாபிமான நோக்கத்துடன் எப்படியாவது சடலங்களை ஒப்படைக்க வேண்டும் என்று விரும்புகிறார். கிட்டுவும் அரை மனதுடன் ரஹீமின் திட்டத்திற்கு சம்மதிக்கிறார்.ரஹீம் மீண்டும் கப்டன் கொத்தலாவலவை தொடர்பு கொண்டு சடலங்களை கையளிக்கத் தானே வருவதாக தெரிவித்து விட, இருவரும் சடலங்களை ஒப்படைப்பதற்கான ஒழுங்கு முறைகளை உறுதி செய்து கொள்கிறார்கள்.
ஆனால் அவர்களும் மறுப்பு தெரிவிக்கவில்லை அப்பொழுது…..!

ஒன்பது இராணுவத்தின் சடலங்களும் சவப்பெட்டிகளில் போடப்பட்டு, ஒரு சிறிய ட்ரக்கில் ஏற்றப்படுகிறது. இராணுவத்தின் சடலங்களை சுமந்த ட்ரக் பிரதான வீதி வழியாக கொண்டு வரப்பட்டு, யாழ் மத்திய கல்லூரி அருகாமையில் இருந்த புலிகளின் முன்னனி காவலரணிற்கு அருகாமையில் நிறுத்தப்படுகிறது. நேரம் பின்னேரம் ஆறு மணி இருக்கும்…பண்ணைக் கடலில் சூரியன் அஸ்தமிக்கத் தொடங்க, யாழ் நகரை இருள் கவ்வத் தொடங்கியிருந்தது. யாழ் நகரில் அரங்கேறப் போகும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வை காண வரலாற்றின் கண்கள் மட்டும் அந்த இருட்டும் வேளையிலும் விழித்திருந்தன.இராணுவத்தின் சடலங்கள் ஒப்படைப்பை ஆரம்பிக்கத் தாங்கள் தயாராகி விட்டதை கோட்டை இராணுவத்தினருக்கு அறிவிக்க, முன்னர் இணங்கியபடி, மத்திய கல்லூரி மைதானத்தில் இருந்து புலிகள் திட்டமிட்டாப்போல் ஒன்பது இராணுவத்தின் உடல்களையும் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு ரஹீம் தயார் ஆனதும் பரா வெளிச்சம் ஒன்றை வானில் பாய்ச்சுகிறார்கள்.புலிகள் கோட்டைக்குள் இருந்து இராணுவமும், பதிலுக்கு ஒரு பரா வெளிச்சத்தை ஏவ விட்டு சடலங்களை ஏற்கத் தாங்களும் தயார் என்பதை புலிகளிற்கு அறிவிக்கிறார்கள்.
சடலங்களை சுமந்த ட்ரக்கை மத்திய கல்லூரியடியில் விட்டு விட்டு, தன்னிடம் இருந்த சயனைட் வில்லைக்கு மேலதிகமாக பக்கத்தில் நின்ற போராளியொருவரின் சயனைட் வில்லையையும் வாங்கி கழுத்தில் அணிந்து கொண்டு, சடலங்களை ஒப்படைப்பதற்கான அடுத்த கட்ட ஏற்பாடுகளை முன்னெடுக்க, ரஹீம் தனியனாக கோட்டை வாசலை நோக்கி நடக்கத் தொடங்குகிறார்.இரண்டு சயனைட் வில்லைகள் கழுத்தைச் சுற்றியிருக்க, இடிந்தழிந்த யாழ் மாநகர சபைக் கட்டிடத்தையும், ஷெல்லடியிலும் சரியாமல் நின்ற தந்தை செல்வாவின் தூபியையும் தாண்டி, ரஹீம் கோட்டை வாசலை நோக்கி மெதுவாக நடந்து கொண்டிருக்க, கோட்டை இராணுவ முகாமருகில் ஒரு வெடிப்பு சத்தம் கேட்கிறது,
ஆனால் புலிகளின் தாக்குதல் அணிகளோ அமைதி காக்கின்றன.புலிகள் சடல ஓப்படைப்பை தாக்குதல் திட்டமாக பயன்படுத்த போகிறார்களா என்பதை பரீட்சித்துப் பார்க்கும் நோக்கத்துடனே இராணுவம் அந்த வெடிப்பை செய்திருக்கலாம் என்று ரஹீம் ஊகிக்கிறார்.கோட்டை முகாம் வாசலின் இராணுவ காவலரணை நெருங்கி விட்ட ரஹீம், தான் தனியவே வந்திருப்பதாக சத்தமிட்டு கத்துகிறார். இராணுவ முகாம் பக்கமிருந்து பதிலுக்கு கேணல் வீரசேகரவின் குரல் ஒலிக்கிறது.கோட்டை வாசலடியில் ஒளிர்ந்து கொண்டிருந்த தெரு விளக்கின் கீழ் தன்னை நிலைபடுத்தி, தான் நிராயுதபாணியாகவே வந்திருப்பதை கேணல் வீரசேகரவிற்கும் கப்டன் கொத்தலாவலவிற்கும் ரஹீம் தெரியப்படுத்துகிறார். ஒன்பது சடலங்களையும் தாங்கிய சவப்பெட்டிகள் ஒரு ட்ரக்கில் ஏற்றி கொண்டுவரப்பட்டு இருப்பதாகவும் அவற்றை ஒவ்வொன்றாக கொண்டு வந்து தரவா என்று முகாம் வாசலில் நின்றிருந்த இராணுவத் தளபதிகளிடம் ரஹீம் சத்தமாகவே கேட்கிறார். சடலங்களை ஒவ்வொன்றாக கொண்டுவரத் தேவையில்லை, சடலங்களைத் தாங்கியிருக்கும் ட்ரக்கை இராணுவ முகாமுக்கு அருகில் கொண்டு வருமாறு சற்றுத் தொலைவில் இருந்தே இராணுவத் தளபதிகளும் ரஹீமிற்கு சொல்கிறார்கள்.மீண்டும் நடந்து புலிகளின் பகுதிக்கு வரும் ரஹீம், இராணுவத்தினரின் சடலங்களைத் தாங்கிய ட்ரக்கை முகாம் அருகில் கொண்டு வருமாறு கேணல் வீரசேகர கூறியதை தளபதி கிட்டுவுக்கு கூறுகிறார். கிட்டுவிற்கு இராணுவத்தின் மீதிருந்த சந்தேகம் இன்னும் முற்றாக விலகவில்லை.ட்ரக்கை reverse இல் மெல்ல மெல்ல ஓட்டிச் செல்லுமாறும், தானும் புலிகளின் தாக்குதல் அணியொன்றும் சுப்ரமணிய பூங்காவிற்குள் நிலையெடுத்து இருப்பர் என்றும் ரஹீமிற்கு கிட்டரால் அறிவுறுத்தப்படுகிறது. இராணுவத்தினர் ரஹீமின் ட்ரக்கை தாக்கினால், புலிகளின் அணி திருப்பித் தாக்கத் தொடங்க, ரஹீம் ட்ரக்கைப் புலிகளின் பகுதிக்கு வேகமாக ஓட்டி வந்து விடலாம் என்பதே கிட்டரின் திட்டம்.ஒன்பது இராணுவத்தினரின் சடங்களை தாங்கிய வாகனம் பிரதான வீதி வழியாக மெது மெதுவாக பின்னோக்கி நகரத் தொடங்குகிறது. கோட்டை முகாம் வாசலில் டரக்கின் நகர்வை இராணுவத்தினர் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறார்கள், இராணுவத்தின் அசைவுகளை சுப்ரமணிய பூங்காவிற்குள் நிலையெடுத்திருந்த புலிகளும் உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கிறார்கள்.மெது மெதுவாக பின்னோக்கி ஊர்ந்து போய்க் கொண்டிருந்த ட்ரக், கோட்டை இராணுவ முகாமின் முன்னரங்கில் இருந்த இரும்புக் கம்பித் தடுப்பில் மோதி நிறுத்தத்திற்கு வரவும், ட்ரக்கின் பின்புறத்தில் இராணுவத்தினர் திடீரென பாய்ந்தடித்து ஏறி, வாகனத்திற்குள் புலிகள் பதுங்கியிருக்கவில்லை என்பதை உறுதி செய்யவும் சரியாக இருக்கிறது. ட்ரக்கில் இருந்து இறங்கி வந்த ரஹீமை நோக்கி, கேணல் வீரசேகரவும் கப்டன் கொத்தலாவலவும் சிப்பாய்கள் சகிதம் இராணுவ முன்னரங்குகளைத் தாண்டி வருகிறார்கள். ரஹீம் தனது கழுத்தை சுற்றியிருந்த இரண்டு சயனைட் வில்லைகளை தடவிப் பார்த்துக் கொள்கிறார்.ரஹீமிற்கு அருகில் வந்ததும் கேணல் வீரசேகர ரஹீமிற்கு கைலாகு கொடுத்து விட்டு, கட்டியணைத்துக் கொள்கிறார். கோட்டை முகாமைச் சுற்றி யுத்தத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தரப்புக்கள் இரண்டும், போரில் இறந்த இராணுவத்தினரின் சடலங்களை கையளிக்க பகைமையை சில கணங்கள் மறந்து விட, அந்தக் கணங்களில் மனிதாபிமானம் மேலோங்குகிறது. கைப்பற்றிய இராணுவத்தின் சடலங்களை கையளிக்க புலிகள் ஏன் முன்வந்தார்கள் என்று தனக்கிருந்த சந்தேகத்தை கேணல் வீரசேகர ரஹீமிடமே நேரடியாக கேட்கிறார். வீரமரணமடைந்த போராளிகளின் வித்துடல்களை களத்தில் விட்டு வராத தங்களின் மாண்பைச் சுட்டிக் காட்டி விட்டு, தான் இறந்தாலும் தனது வித்துடலை கடைசியாக பார்க்க எவ்வாறு தனது அம்மா ஆசைப்படுவாவோ, அதே போல தானே இறந்த இந்த இராணுவத்தினரின் தாய்மாரும் விருப்பப்படுவார்கள், அதனால் தான் இந்த சடலங்களை கையளிக்கத் தாங்கள் முன்வந்ததாக ரஹீம் மிடுக்காக பதிலளிக்கிறார். வீரசேகரவும் கொத்தலாவலவும் ரஹீமுடன் அளவளவாவிக் கொண்டிருக்க, வாகனத்தில் இருந்த ஒன்பது சவப்பெட்டிகளையும் இராணுவ சிப்பாய்கள் ஒவ்வொன்றாக இறக்கிக் கொண்டிருக்கிறார்கள். இரவின் இருள் அந்தப் பிரதேசத்தை கவ்வத் தொடங்கி விட்டது. சுப்ரமணிய பூங்காவிற்குள் நிலையெடுத்திருந்த தளபதி கிட்டு தலைமையிலான புலிகளின் அணி சடலங்களை ஒப்படைக்க சென்ற ரஹீம் இன்னும் திரும்பாததை எண்ணி கவலை கொள்ள ஆரம்பிக்கிறது. வோக்கி டோக்கியை கொண்டு வராமல் வந்திருந்த ரஹீமை, சுப்ரமணிய பூங்காவிற்குள் நின்றிருந்த புலிகள் சத்தமாக கத்தி கூப்பிடுவதை முன்னரங்கில் இருந்த இராணுவ வீரனொருவன் ஓடோடி வந்து தெரியப்படுத்துகிறான்.நிலைமையின் விபரீதத்தை உணர்ந்த ரஹீம், புலிகளின் அணி நின்றிருந்த சுப்ரமணிய பூங்கா அருகில் சென்று, ஒரு பிரச்சினையும் இல்லை, தான் கெதியில் திரும்பி விடுவேன் என்று தனது தளபதிக்கு அறிவிக்கிறார்.பின்னர் இராணுவத் தளபதிகளுமனான தனது உரையாடல்களை முடித்து விட்டு, அவர்களிடம் இருந்து விடைபெற்றுக் கொண்டு, சடலங்களை கொண்டு போன டரக்கில் ஏறி மீண்டும் புலிகளின் பகுதிக்கு வந்த ரஹீமை தளபதி கிட்டு ஆரத் தழுவி வரவேற்கிறார்.திட்டமிட்டாப் போல் இது வெற்றிகரமாக நடந்து முடிந்தது
விக்டர் தாயக மண்ணில் வீழ்ந்துவிட்ட தாக்குதலில் தான் இரண்டு இராணுவச் சிப்பாய்கள் கைது செய்யப்பட்டு அங்கீகாரத்தையும், விடுதலைப் போராட்டத்துக்கு பாரிய எழுச்சியையும், இந்த இராணுவ வீரர்களின் கைதுகள் மூலம் உருவாக்கிச் சென்றிருந்தான்.சிங்கள தேசத்துடன் தமிழர் தேசம் ஒரு உத்தியோகபூர்வமான கைதிகள் பரிமாற்றத்தைச் செய்வதற்கு விக்டரின் அடம்பன் சண்டையில் சிறைபிடிக்கப்பட்ட இராணுவத்தினர் காரணமாக இருந்தனர்.அதனால் இரண்டு கைதிகளையும் தன்னிடம் எடுத்து கிட்டு அண்ணை கைதிகள் பரிமாற்றத்திற்கு தாங்கள் தயார் எனவும்; நீங்கள் விரும்பினால் வரலாம் என சிங்கள அரசிக்குச் சாவால் விடக்கூடிய நிலையை உருவாக்கியவன் விக்ரர்.

முதல் நாளிரவு கோட்டையடியில் நடந்த வரலாற்று சம்பவத்தைப் பற்றியறியாமல் உறங்கிக் கொண்டிருந்த யாழ்ப்பாணத்து மக்கள், அடுத்த நாள் வெளியான உதயன் பத்திரிகையின், “யாழ்ப்பாண நகரில் புதிதாக புறநானூறு படைத்த விடுதலைப் புலிகள்” என்ற தலைப்புச் செய்தி நித்திரைப் பாயால் எழுப்புகிறது. விடுதலை புலிகள் போர்க்களத்தில் கடைப்பிடித்த விதிமுறைகளைப் பார்தீர்களா,?
அடுத்து கைதிகள் பரிமாற்றம் பற்றிப்பார்ப்போம்
சிங்களத் தளபதியாக இருந்த ஆனந்த வீரசேகர, கட்டன் கொத்தலாவை இருவரையும் துணிச்சலாக 15/10/1986 அன்று அழைத்து சந்தித்ததன் மூலம் சிங்களக் கைதிகளை அவர்களிடம் ஒப்படைப்பதாக வாக்குறுதி அளித்தார் கேணல் கிட்டு அவர்கள்.
அதற்குப்பதிலாக அவர்கள் சிங்கள தேசத்தின் பாதுகாப்பு அமைச்சர் அத்துலக் முதலியும், சிங்கள தேசத்தின் முப்படைகளின் தளபதியான சிறில் ரணதுங்கா, பாதுகாப்பு செயலாளர் ஆகியோர் நேரடியாக பலாலிக்குச் சென்று பலாலி வாசலில் வைத்து விடுதலைப் புலிகளின் கைதிகளாக தாங்கள் வைத்து இருந்த அருணாவையும், காமினியையும் கேணல் கிட்டு விடம் ஒப்படைத்தனர்.
அவர்களின் கைதிகளிற்குப் பதிலாக கேணல் கிட்டு அவர்களும் தங்களிடம் போர் கைதிகளாக முதன்முதலாக சிங்கள இராணுவத்தை சேர்ந்த இரண்டு வீரர்கள் உயிருடன் பிடிக்கப்பட்டு இருந்தவர்களான 2வது லெப்.அஜித் சந்திரசிறீ, கோப்ரல் கே.டபிள்யூ பண்டார ஆகியோர் கேணல் கிட்டு அவர்களால் அவர்களிடம் ஒப்படைக்கப் பட்டனர். ஆனால் 2வது லெப்.அஜித் சந்திரசிறீ அவர்கள் முகாமிற்கு மீண்டும் போவதை விரும்பவில்லை தான் யாழ்பாணத்தில் பொது மகனாக விடுதலை புலிகளின் பாதுகாப்பில் வாழப்போவதாக தெரிவித்தார். இது வந்த இராணுவ அதிகாரிகளிற்கு மிகவும் வெக்கக்கேடான செயலாகயிருந்தது. அவன் சொன்னதற்கு அவர்கள் எதுவும் பேசவில்லை அவனை விட்டு விட்டு ஒருதனைக் கூட்டிக்கொண்டு முகாமிற்கு சென்று விட்டார்கள். இதற்கு விடுதலைப் புலிகளின் அன்பும் பாசமும்தான் காரணமாக இருந்தது.பின்னர் இவர் யாழில் ஒரு தமிழ் பெண்ணைத் திருமணம் செய்து “அஜித் டொக்டர்” என்ற பேரில் அவர் ஒரு மருத்துவப் போராளியாக 2009 மட்டும் கடமையாற்றினார். என்பதை நாம் மறக்கமுடியாது. அதன் பின்னர் கப்டன் கொதலாவை ஊடாக சிங்கள மக்களிற்கு தகவல் போய் கிட்டு என்ற பெயர் சிங்கள மக்கள் மற்றும் உலக நாடுகள் அனைத்திலும் தளபதி கிட்டு அவர்களின் பெயர்தெரிய வந்தது.


அடுத்து கிட்டு அண்ணைக்கு நடந்த குண்டுத் தாக்குதலைப் பற்றிப் பார்ப்போம்
தொடரும்
அன்புடன் ஈழமதி