கட்டாரில் உள்ள அமெரிக்க இராணுவத்தின் மிகப்பெரிய தளமான அல்-உதெய்த் விமானத் தளத்தை இலக்காகக் கொண்டு ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலை கட்டாரின் வான்பாதுகாப்பு அமைப்புகள் வெற்றிகரமாக தடுத்து நிறுத்தியதாக கட்டார் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

இந்தத் தாக்குதலில் உயிரிழப்புகளோ அல்லது பொருட்சேதங்களோ ஏற்படவில்லை என அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) இன்று (23) அல்-உதெய்த் தளத்தின் மீது “வலிமையான மற்றும் அழிவு தரக்கூடிய” ஏவுகணைத் தாக்குதலை நடத்தியதாகவும், இது அமெரிக்காவின் ஈரான் அணு உலை வசதிகள் மீதான தாக்குதல்களுக்கு பதிலடியாக இருந்ததாகவும் ஈரானிய அரசு ஊடகங்கள் தெரிவித்தன.

ஆறு முதல் பத்து ஏவுகணைகள் வரை இலக்கு வைத்து வீசப்பட்டதாக பல்வேறு அறிக்கைகள் கூறுகின்றன, ஆனால் இவை கட்டாரின் வான்பாதுகாப்பு அமைப்புகளால் தடுக்கப்பட்டன.

கட்டார் வெளியுறவு அமைச்சகத்தின் பேச்சாளர் மாஜித் அல்-அன்சாரி, இந்தத் தாக்குதலை “கட்டாரின் இறையாண்மை மற்றும் சர்வதேச சட்டத்தின் பகிரங்க மீறல்” எனக் கண்டித்து, நேரடியாக பதிலடி கொடுக்கும் உரிமையை கட்டார் கொண்டிருப்பதாக அறிவித்தார்.

மேலும், இந்தத் தாக்குதல் குடிமக்கள், குடியிருப்பாளர்கள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் கட்டார் தனது வான்வெளியை தற்காலிகமாக மூடியதாகவும் அவர் கூறினார்.

அல்-உதெய்த் விமானத் தளம், அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகத்தின் முன்னணி தளமாகவும், சுமார் 8,000 அமெரிக்க வீரர்கள் மற்றும் சுழற்சி முறையில் பிரிட்டிஷ் இராணுவ வீரர்களைக் கொண்ட முக்கியமான தளமாகவும் உள்ளது.

சமீபத்திய வாரங்களில், பிராந்திய பதற்றங்கள் காரணமாக இத்தளத்திலிருந்து சுமார் 40 விமானங்கள் மாற்றப்பட்டதாக செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன.

ஈரானின் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திய கட்டார் | Qatar Shoots Down Iranian Missiles

இந்தத் தாக்குதலை அடுத்து, அமெரிக்காவின் டிரம்ப் நிர்வாக அதிகாரிகள் வொஷிங்டனில் அவசர கூட்டம் நடத்தி வருவதாகவும், வெள்ளை மாளிகை மற்றும் பாதுகாெப்புத் துறை அல்-உதெய்த் தளத்திற்கு எதிரான மேலதிக அச்சுறுத்தல்களை உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கட்டார் பாதுகாப்பு அமைச்சு, நாட்டின் வான்வெளி மற்றும் பிரதேசம் பாதுகாப்பாக உள்ளதாகவும், எந்தவொரு அச்சுறுத்தலையும் எதிர்கொள்ள கட்டார் ஆயுதப் படைகள் தயாராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

பொதுமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் அதிகாரபூர்வ மூலங்களில் இருந்து புதுப்பிக்கப்பட்ட தகவல்களைப் பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Share:

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *