யாழ்ப்பாணம் செம்மணி படுகொலைக்கு நீதி கோரி முன்னெடுக்கப்பட்டு வருகின்ற அணையா விளக்கு போராட்டம் இன்று இரண்டாவது நாளாகவும் உணர்வெழுச்சியாக நடைபெற்றது.
மக்கள் செயல் அமைப்பின் ஏற்பாட்டில் அணையா விளக்கு எனும் தொனிப் பொருளில் சர்வதேச நீதி கோரி நேற்று போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு முதல் நாளில் பகல் இரவாக நடைபெற்றது.
இரண்டாவது நாளான இன்றும் இந்த அணையா விளக்குப் போராட்டம் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இப்போராட்டத்தில் மதத் தலைவர்கள், பொது அமைப்புக்கள், அரசியல் கட்சிகள், பொதுமக்கள் எனப் பெருமளவிலானோர் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை தொடர்ந்து நாளையதினமும் இப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இறுதி நாள் போராட்டமாக நாளை நடைபெறவுள்ள இப் போராட்டத்தில் வடக்கு கிழக்கில் இருந்து பெருமளவிலானோர் கலந்து கொள்ள உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


