காலி மாவட்டம், அம்பலாங்கொடை பிரதேசத்தில் உள்ள மாதம்பாகம, தேவகொட, ஸ்ரீரத்ன மாவத்தையில் இருந்து கைக்குண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்ட சம்பவம் நேற்று பதிவாகியுள்ளது.
கைக்குண்டு குறித்த பிரதேசத்தில் வசிக்கும் பாடாசலை மாணவனொருவர், தனது வீட்டுக்கு அருகாமையில் இருக்கும் காட்டுப் பகுதியில் இருந்து பந்து போன்ற வடிவத்தில் இருந்த கைக்குண்டு ஒன்றை இன்று நண்பகல் அளவில் கண்டெடுத்துள்ளார்.

கைக்குண்டை திறக்க முயற்சி
மாணவர் கண்டெடுத்திருப்பது கைக்குண்டு என்று அறியாத நிலையில் அதனைத் திறக்க அவர் முயற்சித்துள்ளார். எனினும் அதிர்ஷ்டவசமாக திறக்கப்படவில்லை.
இந்நிலையில் குறித்த பந்து போன்ற பொருள் கைக்குண்டு என்பதை கண்டறிந்த அயலவர் ஒருவர் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் பேரில் அம்பலாங்கொடை பொலிஸார் குறித்த இடத்துக்கு வருகை தந்து கைக்குண்டைப் பொறுப்பேற்றுள்ளனர்.
விசேட அதிரடிப்படையினர் அவ்விடத்துக்கு வரவழைக்கப்பட்டு கைக்குண்டு செயலிழக்கச் செய்யப்பட்டதன் பின்னர் பொலிஸார் அதனை எடுத்துச் சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பாடசாலை மாணவன் மற்றும் அவரது பெற்றோரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனினும் சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்றும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.