ஒரு இனப்படுகொலை நிகழ்ந்த காலத்தில் மாத்திரமின்றி அது வரலாறு முழுவதும் பாதிப்புக்களை ஏற்படுத்துகிறது குறிப்பாக அதனால் எழும் உளவியல் பாதிப்புக்கள் நின்று கொல்லும் விசமாக ஒரு இனத்தை சூறையாடுகிறது என்பதே உண்மை.

இனப்படுகொலையும் நில ஆக்கிரமிப்பும் ஒரு கொடூரத்தின் இரு முகங்கள் ஆகும். ஈழத்தின் கிழக்கில் திருகோணமலை, அம்பாறை, மட்டக்களப்பு என்று அங்குள்ள மூன்று மாவட்டங்களும் சுற்றிச் சுற்றி நிலச் சூறையாடலுக்கு முகம் கொடுத்து வருகின்றது. நம் கண்ணுக்கு முன்னால் சத்தமின்றி நிலத்தை விழுங்கும் போர் நிகழ்ந்து வருகிறது.

இனப்படுகொலையின் குருதியால் நனைந்தது நம் நாட்காட்டி.  ஓராண்டின் பெரும்பலான நாட்களில் நமது மக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள் என்பதும் ஒரு நாளில் ஈழத்தின் பல பகுதிகளில் இனப்படுகொலைகள் நடந்துள்ளன என்பதும் நாம் எத்தகைய இனப்படுகொலையை இலங்கைத் தீவில் எதிர்கொண்டுள்ளோம் என்பதையே காட்டி நிற்கின்றது.

ஈழத்தின் சில ஊர்களை சொல்லும் போது நமக்கு அங்கு நடந்த இனப்படுகொலைகள் தான் நினைவுக்கு வருமளவில் ஒரு இனத்தின் கூட்டு நினைவுகளை பேரினவாத்தின் இனவழிப்பு பாதித்திருக்கிறது. அப்படியொரு இனப்படுகொலையே அம்பாறை திராய்க்கேணிப் படுகொலை. 

🛑 கிழக்கில் இனப்படுகொலைகள்

ஈழத்தின் கிழக்கில் பல இனப்படுகொலைகள் நடந்தேறி உள்ளன. சிறிலங்கா அரசின் இனவழிப்புச் செயற்பாடுகளால் அதிக பாதிப்புக்களை சுமந்த இடமாக கிழக்கு இருக்கிறது. கொக்கட்டிச்சோலை, சத்துருக்கொண்டான் மற்றும் வந்தாறுமூலை எனப் பல இடங்கள் இனப்படுகொலையின் குருதியால் நனைந்த இடங்களாகவே வரலாற்றின் பக்கங்களில் நிலைத்துள்ளன.

ஒகஸ்ட் மாத்தில் கிழக்கு மாகாணத்தில் நடந்த சில இனப்படுகொலைகள் தமிழ் இனத்தின் நினைவுகளில் இருந்து அகல மறுகின்றன. இதில் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தில் உள்ள திராய்க்கேணி என்ற கிராமத்தில் 1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாத்தின் 6ஆம் திகதி நன்கு திட்டமிட்ட வகையில் அரங்கேற்றப்பட்ட இனப்படுகொலை இன்றும் அந்த மக்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்கியே வருகிறது.

மட்டக்களப்பு நகரில் இருந்து தெற்காக 70 கிலோ மீற்றர் தூரத்தில் அம்பாறை மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஒரு தமிழ் கிராமமே திராய்க்கேணி. தமிழ்ப் பண்பாடு முகிழ்ந்த இக் கிராமம் வரலாற்றுச் சிறப்பு மிக்கதுமாகும்.

இக் கிராமம் எங்கும் பரவியிருக்கும் சைவ ஆலயங்கள் இந்தக் கிராமத்தின் தொன்மைக்கு ஆதாரமாயிருக்கும் சான்றுகளாகும். இந்தக் கிராமத்தை ஆக்கிரமிக்க வேண்டும் என்றும் அதனைப் போன்றே அம்பாறையின் பல பகுதிகளையும் ஆக்கிரமித்துவிட வேண்டும் என்றும் கொண்டிருந்த பேரினவாத ஆக்கிரமிப்பின் வெளிப்பாடாக திராய்க்கேணிமீதான இனப்படுகொலை அரங்கேற்றப்பட்டது

🛑 தீயில் எரிக்கப்பட்ட மக்கள்

இந்த நிலையில் 1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6ஆம் நாளன்று சிறப்பு இராணுவத்தினரின் உதவியுடன் திராய்க்கேணி கிராமத்தினுள் நுழைந்த இனவழிப்பாளர்கள், அங்குள்ள கோயிலில் தஞ்சமடைந்திருந்த 54 தமிழர்களைப் படுகொலை செய்துள்ளனர்.  

அத்தோடு அந்த இனவழிப்பு அட்டகாசத்தை அவர்கள் நிறுத்தியிருக்கவில்லை. திராய்க்கேணி கிராமத்தின் வீடுகளினுள் நுழைந்த இனப்படுகொலையாளிகள் முதியவர்கள் பலரை உயிருடன் தீவைத்துக் கொளுத்தினர். அந்த முதியவர்கள் தீயில் துடிதுடித்து இறந்து போயினர். அத்தோடு பதின்மூன்று வயதான சிறுமி ஒருத்தி கடத்தப்பட்டு பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு பெரும் சித்திரவதைகளினால் இனப்படுகொலை செய்யப்பட்ட நிகழ்வும் இதன்போது நிகழ்த்தப்பட்டது.

கிராமம் எங்கும் இனப்படுகொலையின் வேட்டை பரவியது. கிராம்ம் எங்கும் உலவிய இனப்படுகொலையாளிகள் தமிழ் மக்களின் வீடுகள்மீது தீயை பற்ற வைத்து வீடுகளை அழித்தனர். இதனால் 350 வீடுகள் குண்டர்களால் தீக்கிரையாக்கப்பட்டன.

அன்றைய நாளில் காலை ஏழு மணிக்கு ஆரம்பமான இப்படுகொலை நிகழ்வுகள் மத்தியானம் வரை நீடித்திருந்தது. நாள் முழுவதும் படுகொலையின் ஓலம் பரவிக் கொண்டிருந்தது. இப்படுகொலைகளைத் தொடர்ந்த அக்கிராமத்தில் இருந்து சனங்கள் வெளியேறினார்கள். மக்கள் வெளியேறினார்கள் என்பதைவிட துரப்பட்டார்கள் என்பதே பொருத்தமானது.

🛑 கொலை செய்யப்பட்ட மயிலைப்போடி

அன்றைக்கு ஊரைவிட்டுச் சென்ற மக்கள் காரைதீவில் அகதி முகாங்களில் தஞ்சம் புகுந்தார்கள். அந்தப் படுகொலைக்குப் பின்னர் நான்கு  ஆண்டுகளுக்குப் பின்னரே ஊர் திரும்பினர். அந்தளவுக்கு அந்தப் படுகொலை திராய்க்கேணி மக்களை பாதித்திருந்தது.

இந்தப் படுகொலைக்கான நீதியை மக்கள் கோரி நின்றார்கள். 90களில் நடந்த இப் படுகொலைக்கான நீதியை மக்கள் வலியுறுத்தி வந்த நிலையில், திராய்க்கேணி இனப்படுகொலை குறித்து முழுமையான விசாரணைகள் வேண்டும் எனக் குரல் கொடுத்த திராய்க்கேணி கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் ஈ.மயிலைப்போடி என்பவர் 1997 ஆம் ஆண்டில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மற்றொரு பேரிடியாக நிகழ்த்தப்பட்டது.  

இதற்குப் பிறகு 2003ஆம் ஆண்டு அக்டோபர் 12ஆம் நாள் திராய்க்கேணி பெரியதம்பிரான் கோயில் பகுதியில் சுத்திகரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பொதுமக்கள் அங்குள்ள குழி ஒன்றில் மனித எச்சங்கள் பலவற்றைக் கண்டுபிடித்தனர்.

இவ்வெச்சங்கள் திராய்க்கேணிப் படுகொலைகளில் கொல்லப்பட்டவர்களினதாய் இருக்கலாம் என உள்ளூர் மக்கள் தெரிவித்தனர். இது தொடர்பான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று மக்கள் தொடர்ந்த வலியுறுத்திய போதும் அரசினால் அது கண்டுகொள்ளப்படவில்லை. அந்த எச்சங்களும் அந்த சாட்சியங்களும்கூட திட்டமிட்டு அழிக்கப்பட்டன. இந்தப் படுகொலையினால் சுமார் 40 பெண்கள் விதவைகளாக்கப்பட்ட கொடூரமும் நிகழ்ந்தது.

🛑 தொடரும் நெருக்குவாரம்

திராய்க்கேணி இனப்படுகொலைக்கான அஞ்சலி நிகழ்வு ஆண்டு தோறும் அந்தக் கிராமத்தில் நடந்து வருகின்றது. அந்த வகையில் கடந்த ஆண்டு நடந்த அஞ்சலீ நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய கலையரசன் முக்கிய விடயம் ஒன்றைக் கூறியிருந்தார்.

அதாவது, ‘திராய்க்கேணி தமிழ் மக்கள் அன்றைய காலத்தில் உயிராபத்துக்கு முகம்கொடுத்தனர். அவர்கள் இப்போது கூட பல சவால்களுக்கும் நெருங்குவாரங்களுக்கும் மத்தியிலேயே வாழ்ந்து வருகிறார்கள். அவர்களுக்கு 35 வருடங்களுக்கு முன்பு இழைக்கப்பட்ட அநீதிக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை.

நிவாரணம் கிடைக்கவில்லை. அதற்காக நாங்கள் தொடர்ச்சியாக குரல் கொடுத்து வருகின்றோம்…” என்று அவர் கூறியிருப்பது இப்படுகொலையின் ஆறாத ரணத்தின் நீட்சியாகும். இதுவேளை திராய்க்கேணி மக்களின் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு அவர்களது இருப்பை இல்லாமல் செய்யும் காரியங்கள் தொடர்வதாகவும் கலையரசன் குற்றம் சுமத்தியிருந்தார்.

அன்று திராய்க்கேணி மக்கள் கொல்லப்பட்டது அவர்களின் நிலங்களை ஆக்கிரமிக்கவே என்பதும் இன்றும் அதுவே அங்கு தொடர்கின்றது என்பதையும் கலையரசனின் கருத்து எடுத்துரைத்தது.  முப்பத்து ஐந்து வருடங்களுக்கு முதலில் இனப்படுகொலையை சந்தித் திராய்க்கேணியில் இன்றும் நில ஆக்கிரமிப்பு அவலம் தொடர்கின்றது என்பது இன்னும் நீளும் இனப்படுகொலையே.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments