தியாக தீபம் திலீபனின் ஆவண காப்பகத்திற்கு தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவன் (Rajeevan Jeyachandramoorthy) விஜயம் செய்துள்ளார்.
யாழ். நல்லூர் பகுதியில் தியாக தீபம் திலீபனின் ஆவண காப்பகம் நேற்று மாலை பொதுமக்களின் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டது.
தியாக தீபம் திலீபனின் வரலாற்றினை எதிர்கால சந்ததியினருக்கு கடத்தும் முகமாக அவரின் வரலாற்றினை எடுத்தியம்பும் “பார்த்திபன் திலீபனாக, திலீபன் தியாக தீபமாக ” எனும் தொனிப்பொருளுடன் இந்த ஆவணக் காட்சியகம் திறக்கப்பட்டுள்ளது.
சுடரேற்றி மாலை அணிவித்து மலரஞ்சலி
ஆவண காட்சியகத்தில் தியாக தீபம் திலீபனின் திருவுருவச் சிலை மூத்த போராளி பஷீர் காக்காவால் திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டதுடன் சுடரேற்றி மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
இந்த ஆவண காப்பகத்திற்கு வருகை தந்த தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவன் தியாக தீபம் திலீபனின் திருவுருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தியதுடன் ஆவண காப்பகத்தையும் பார்வையிட்டுள்ளார்.
இதேவேளை தியாக தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்விற்கு கடந்த 17ஆம் திகதி கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் அஞ்சலி செலுத்த சென்ற போது அங்கிருந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் அஞ்சலி செலுத்த அனுமதிக்க மாட்டோம் என தடுத்து நிறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
